தேர்தல் கூட்டணிக்காக பாமக ஒருபோதும் கொள்கையை விட்டுக் கொடுத்ததில்லை: ராமதாஸ்

தேர்தல் கூட்டணிக்காக பாமக ஒருபோதும் கொள்கையை விட்டுக் கொடுத்ததில்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார். 
 பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின்  நிறுவனர் ச.ராமதாஸ். உடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர்.
 பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின்  நிறுவனர் ச.ராமதாஸ். உடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர்.

தேர்தல் கூட்டணிக்காக பாமக ஒருபோதும் கொள்கையை விட்டுக் கொடுத்ததில்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார். 

மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ச.ராமதாஸ் பேசியதாவது: 

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக அமைத்திருப்பது இயற்கையான கூட்டணி. இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.  

தமிழகத்தில் 3-ஆவது பெரிய கட்சியாக பாமக வளர்ந்துள்ளது. கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள்,  ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் பலர் பொறாமைப்படுகின்றனர். கூட்டணியைப் பொருத்தமட்டில், யார் முதுகிலும் பாமக குத்தியதும் இல்லை, காலை வாரியதுமில்லை.

கட்சி தொடங்கியபோதும், கூட்டணி வைத்தபோதும், கொள்கையை பாமக ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. கொள்கையில் பாமக தேக்கு மரம். கூட்டணியின்போது நாணலாக வளைவோம். ஆனால், கொள்கையைக் கைவிட்டு ஒருபோதும் கூட்டணி பேசுவதில்லை. 

கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, 10 அம்சக் கோரிக்கைகளை பாமக முன்வைத்தது பற்றி, வேறு கட்சியினர் எவரும் பேச மாட்டார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஏற்கெனவே அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். 

இதனிடையே, அற்புதம்மாள் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து முறையிட்டார். முதல்வர் வரும்போது இந்த விவகாரத்தில் அழுத்தம் தரக் கூறினார். 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு, தொண்டர்கள் முழு ஆதரவு தர வேண்டும். அதற்கு முன்பே, விடுதலை செய்ய வலியுறுத்தவும் முனைப்பாக உள்ளோம். பாமக தொண்டர்கள் கண்ணியமான, வளர்ச்சிக்கான அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் யாரையும் குறை கூற வேண்டாம்.  பலர் புழுதி வாரித் தூற்றினாலும், பதில் பேச வேண்டாம்.  கோபமின்றி,  நேர்மறையான பிரசார பணிகளைச் செய்யுங்கள்.

"ராமதாஸ் ஒரு சமூகப் போராளி. சிறப்பாகக் கட்சியை நடத்துகிறார். அந்தக் கட்சியை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை' என மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியிருப்பது ஆறுதல் தருகிறது.  எதிர்வரும் மக்களவைத் தேர்தல் மட்டுமன்றி,  21 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். 

தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலிலும் கைகோத்து பலமாகச் செயல்படுவோம். நம்மை யார் தூற்றினாலும் கவலைப்பட வேண்டாம்,  தேர்தல் முடிந்த பிறகு நாகரிகமாக  அவர்களுக்கு பதில் சொல்வோம் என்றார் ச.ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com