திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து ஏன்? - தேர்தல் ஆணையம் விளக்கம்

கஜா புயலில் இருந்து மக்கள் முழுதாக வெளிவர வேண்டும். இந்த தேர்தல் காரணமாக நிவாரண பணிகள் பாதிக்க கூடாது என்பதாலும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து ஏன்? - தேர்தல் ஆணையம் விளக்கம்



கஜா நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தப்படுவது சரியாக இருக்காது என்பதால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 10 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகிற 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து செய்தும், இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்குமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

கஜாபுயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்நிலையில் தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியாக உள்ளது 

தேர்தல் ஆணையத்தின் முடிக்கு அரசியல் கட்சிகள் வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் தவிர, கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 19 தொகுதிகளுக்கு ஏப்ரல் வரை தேர்தல் நடத்தக் கூடாது என டிச. 3-ல் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியிருந்தார். அதன்டி தமிழக அரசிடம் கருத்து கேட்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி கருத்து கேட்கப்பட்ட பின்பே தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. 

திருவாரூரில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் தேர்தல் ஆணையம் கேட்டதையடுத்து, அறிக்கை அளிக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு சத்யபிரதா சாகு கட்டளையிட்டார்.

இதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என வலியுறுத்தின. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிந்தபிறகு தேர்தலை நடத்தலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் நடத்த உகந்த சூழல் தற்போது இல்லை என மாவட்ட தேர்தல் அதிகாரியும் வேண்டுகோள் விடுத்திருந்தது. மேலும் கஜா புயலால் ஏற்பட்டது சாதாரண பாதிப்பில்லை என உள்துறை அமைச்சகமும் அறிக்கை அளித்திருந்ததாலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மக்கள் கொண்டாடும் பொங்கல் உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து வர இருப்பதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கஜா புயலில் இருந்து மக்கள் முழுதாக வெளிவர வேண்டும். இந்த தேர்தல் காரணமாக நிவாரண பணிகள் பாதிக்க கூடாது என்பதாலும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com