சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம்: முதல்வர் திறந்துவைத்தார்

சேலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம்: முதல்வர் திறந்துவைத்தார்


சேலம்: சேலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சேலத்தில், இரண்டு மணிமண்டபங்களையும், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலைகளையும் திறந்து வைத்து உரையாற்றினார்.

இந்த நாட்டிலேயும் சரி, தமிழகத்திலேயும் சரி எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருப்பார்கள். ஆனால், பேரறிஞர் அண்ணாவுடைய வாரிசாக இரவு, பகல் பாராமல் மக்களுக்காக உழைத்து, தனக்கென்று குடும்பம் இல்லாமல், குடும்பம் என்று சொன்னால், மக்கள் தான் தன் குடும்பம் என்று வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மணிமண்டபம், இருபெரும் தலைவர்களுடைய முழு உருவ வெண்கலச் சிலை திறப்பதை நான் இறைவன் கொடுத்த பாக்கியமாக நான் கருதுகின்றேன். நாம் இறைவனை கண்ணிலே பார்த்தது கிடையாது. இறைவன் தோற்றத்திலே எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நாம் இறைவனிடத்திலே என்னென்ன வேண்டுகிறோமோ, அத்தனையும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வாரி, வாரி நமக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

ஆகவே தான், அவர்களை தெய்வத்திற்கு சமமாக நாம் போற்றிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, இருபெரும் தலைவர்களின் திருவுருவச் சிலையையும் சேலம் மாநகரத்தினுடைய மையப் பகுதியிலே அமைந்து, நம் அத்தனை பேருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள  கடமைப்பட்டிருக்கின்றேன். எத்தனையோ தலைவர்கள் தோன்றுவார்கள், வாழ்வார்கள், மறைவார்கள். ஆனால், இடைப்பட்ட காலத்திலே நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது அவர் வாழ்ந்த காலத்திலேதான் சரித்திரம் சொல்லும். அந்த சரித்திரத்தை இருபெரும் தலைவர்கள் வாழ்ந்த காலத்திலே படைத்துவிட்டு சென்றிருக்கின்றார்கள். அவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டமுள்ள திட்டங்கள். எத்தனை ஆண்டுகாலம் இருந்தாலும் இந்த பூமியிலே அவர்கள் அறிவித்த அத்தனை திட்டங்களும் அவர்களுடைய பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும் என்பதை இந்த நேரத்திலே பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். ஆகவே, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமத்திலே வாழ்கின்ற விவசாயி, விவசாயத் தொழிலாளி, நகரத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய அத்தனை பேரையும் வாழவைத்த தெய்வங்களுக்கு இன்று ஒட்டுமொத்த மக்களின் சார்பாக அவர்களுக்கு புகழ் சேர்க்கின்ற விதமாக, பெருமை சேர்க்கின்ற விதமாக, அவர்களுக்கு இன்றைக்கு மணிமண்டபத்தை அமைத்து அவர்களுடைய முழு உருவச் சிலையை திறந்து வைப்பதில் நாம் பெருமை பெறுகின்றோம்.

ஓமலூர் மெயின்ரோட்டிற்கு பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை என்று பெயர் சூட்டப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஓமலூர் சாலைக்கு புரட்சித்தலைவருடைய பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. பாரத ரத்னா பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் பெயரை உங்கள் அனைவரின் சார்பில், இந்த சாலையினுடைய பெயர் இன்றைக்கு சூட்டப்பட்டிருக்கின்றது என்று பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் பன்னீர்செல்வம் அவர்களுடைய நாடாளுமன்ற நிதியிலிருந்து பிரம்மாண்டமான இந்த ஓமலூர் சாலை நாளையிலிருந்து பெயர் மாற்றப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டவுடன் இந்த சாலை பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை என்று பெயர் சூட்டப்படும். அந்த சாலையிலே மிகச் சிறப்பாக, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பிரம்மாண்டமான மின் கோபுரத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றார், அதையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக திறக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com