கொடநாடு விவகாரம்: ஆளுநரிடம் அதிமுக மூத்த நிர்வாகிகள் விளக்கம்

கொடநாடு விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் மூத்த


கொடநாடு விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் மூத்த நிர்வாகிகள் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புபடுத்தி, தெகல்கா முன்னாள் ஆசிரியர் விடியோ ஒன்றை தில்லியில் வெளியிட்டார். 
அதைத் தொடர்ந்து, ஆளுநரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடைபெற, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலக அறி
வுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி புகார் மனு அளித்தார்.
இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், வேணுகோபால், ஜெயவர்தன் உள்பட மூத்த நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை (ஜன.15) சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். 
இந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. 
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியது:
கொடநாடு விவகாரத்தில் கூலிப்படையினர் 2 நாள்களுக்கு முன்பு கூறிய விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆளுநரைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ஆதாயத்துக்காக வைக்கப்பட்டவை என்று ஆளுநரிடம் கூறினோம்.
போதைப் பொருள் கடத்தல், ஆள் கடத்தல், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோரது வாக்குமூலத்தை வைத்து முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது அபாண்டமானது.
மக்களவைத் தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியாது என்பதாலேயே முதல்வரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் மனு அளித்துள்ளார் என்று ஆளுநரிடம் கூறினோம்.
அரசியல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் இவ்வாறு மனு கொடுத்துள்ளார் என்பதை விளக்கி, நாங்களும் ஆளுநரிடம் ஒரு மனு அளித்தோம்.
மனுவைப் படித்து பார்த்த ஆளுநர் எங்களுக்குச் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ளார்.
உண்மை நிலையை நாங்களாகவே சென்று ஆளுநரிடம் கூறினோம். அவர் எங்களை அழைக்கவில்லை.
1996-இல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய சிவராஜ், தனு ஆகியோர் ஜெயலலிதாவுடன் இருப்பதாகக் கூறி, கருணாநிதி சட்டப்பேரவையில் ஒரு புகைப்படத்தைக் காண்பித்தார். அந்தப் புகைப்படம் பொய்யானவை என்றும் ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் அதிமுக வழக்குரைஞர்கள் எனவும் நிரூபித்தோம்.
அதைப்போல கருணாநிதியின் மகனான ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அபாண்டமாக பழி சுமத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைவார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com