இரட்டைப் பதிவுகளை நீக்கும் நடைமுறை எதிரொலி: இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 31-இல் வெளியீடு

இரட்டைப் பதிவுகளை நீக்கும் நடைமுறை காரணமாக, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இரட்டைப் பதிவுகளை நீக்கும் நடைமுறை எதிரொலி: இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 31-இல் வெளியீடு

இரட்டைப் பதிவுகளை நீக்கும் நடைமுறை காரணமாக, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வரும் 31-இல் வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 
அதாவது, இந்தப் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இல்லாவிட்டாலோ, தவறாக இருந்தாலோ திருத்தங்கள் செய்ய வாய்ப்பு அளிக்கும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய வசதியாக, செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்கள் வாய்ப்பு வழங்கப்பட்டன.
இரட்டைப் பதிவுகள் நீக்கம்: வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள வாக்காளர்களுக்கு இரண்டு மாதங்கள் வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால், இந்த ஆண்டு பிழைகளே இல்லாத துல்லியமான வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான வலைதளம் ( உதஞ சஉப ) உருவாக்கப்பட்டு, வாக்காளர்களின் தகவல்கள் ஒருங்கிணைப்பட்டு வருகிறது. 
இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இயல்பாக கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
தற்போது தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 
இதனால் இரண்டில் எதை நீக்குவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு சவாலாக உள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியில் தேர்தல் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணி நடந்து வருவதால், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட ஜனவரி 10-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டுமென தமிழக தேர்தல் துறை சார்பில், ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கால அவகாசத்தையும் தாண்டி இரட்டைப் பதிவுகளை நீக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இரட்டைப் பதிவுகளை முழுமையாக நீக்கிய பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, வரும் 21-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும், இரட்டைப் பதிவுகளை நீக்கும் பணிகள் நிறைவடையாத காரணத்தால் இப்போது, அந்த காலத்தையும் தாண்டி ஜனவரி 31-ஆம் தேதி தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. 
அன்றைய தினத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலும் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, அன்றைய தினத்தில் சென்னை மாநகராட்சி, தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com