தமிழ்நாடு

குக்கர் சின்னம் கோரும் டி.டி.வி. மனு: தேர்தல் ஆணைய வழக்குரைஞர் இன்று ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN


குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் தாக்கல் செய்த மனு விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 2-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் டி.டி.வி. தினகரன் தரப்பு , பிரதிவாதிகள் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். அதன்படி, இந்த மனு வியாழக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ். வைத்தியநாதன், கே.வி. விஸ்வநாதன், குரு கிருஷ்ண குமார், கே. கௌதம் குமார் ஆகியோர் ஆஜராகினர். டிடிவி தினகரன் தரப்பில் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராஜ செந்தூர பாண்டியன், அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகினர்.
ஓபிஎஸ் -இபிஎஸ் தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, சி.எஸ். வைத்தியநாதன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள், தமிழகத்தில் தற்போது எந்தவொரு தேர்தலும் நடைபெறவில்லை. இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் தரப்பினர் கட்சியைப் பதிவு செய்யாமல் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் முறையிட்டுள்ளனர். ஒருபுறம் சின்னம் கேட்டு வழக்குத் தொடுத்துள்ளனர். மறுபுறம் சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி முறையிடுகின்றனர். ஒரு கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் போது, வேறு எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினர் இல்லை என்பதற்கான உறுதியை அளிக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இதையெல்லாம் தெரிந்துகொண்டே முறையீடு செய்துள்ளனர் என்று வாதிட்டனர்.
டிடிவி தினகரன் தரப்பில் வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதிடுகையில், சின்னம் என்பது ஒரு தேர்தலுடன் முடிந்துவிடுவதில்லை. வாக்காளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கும் இடையேயான ஒரு ஈர்ப்பு உருவம்தான். அந்தச் சின்னத்தை கடைசி நேரத்தில் வழங்கி, தேர்தலின்போது மக்களிடம் சேர்ப்பது கிடையாது. பல தீர்ப்புகளில் இதை நீதிமன்றம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும், முன்பு ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது சின்னம் ஒதுக்கப்பட்ட விவரம், அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தொப்பி சின்னம் கோரி தொடர்ந்த முறையீடு உள்ளிட்ட விவரங்களையும், குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட விவரத்தையும் வாதத்தின் போது வழக்குரைஞர்கள் எடுத்துரைத்தனர்.
இந்த வாதத்தின்போது சின்னம் ஒதுக்குவதில் என்ன ஆட்சேபம் உள்ளது என்று இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்களது தரப்பு வழக்குரைஞர்கள், டிடிவி தினகரன் தரப்பினர் இரட்டை குதிரையில் சவாரி செய்ய நினைகின்றனர். ஒருபுறம் அதிமுக சின்னம் வேண்டும் என்று வழக்குத் தொடுத்துள்ளனர். மறுபுறம் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோருகின்றனர். இதனால், அவர்கள் கோரும் சின்னம் ஒதுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
இதற்கு வழக்குரைஞர் டிடிவி தரப்பில் ஆஜரான கபில் சிபல், தேர்தல் ஆணையம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்பது போல் கூறுவது சரியல்ல. மேலும், குக்கர் சின்னம் இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இதனால், அந்தச் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) நடைபெறும் எனத் தெரிவித்து, பதிவு செய்யப்படாத, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்க முடியுமா, முடியாதா என்பது குறித்து தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT