டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழா

பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டம் சூட்டப்பட்ட கலீம் யானை முன்னே செல்ல, அணிவகுத்து சென்ற மற்ற யானைகள். துதிக்கையை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய யானைகள்.
பட்டம் சூட்டப்பட்ட கலீம் யானை முன்னே செல்ல, அணிவகுத்து சென்ற மற்ற யானைகள். துதிக்கையை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய யானைகள்.


பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் 25 வளர்ப்பு யானைகள் உள்ளன. முகாமில் உள்ள யானைகள் கும்கிகளாகவும், வனப் பகுதி மேம்பாட்டுக்கும், யானை சவாரிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வனப் பகுதி பற்றியும், யானைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், யானைகளுக்கு மரியாதை செய்யவும் யானை பொங்கல் விழா ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று டாப்சிலிப்பில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் விழாவில், வயதான யானைகள் தவிர 19 யானைகள் பங்கேற்றன. யானைகளைக் குளிப்பாட்டி விழாவுக்கு பாகன்கள் அழைத்து வந்திருந்தனர். மலைவாழ் மக்கள், பொதுமக்கள் பங்கேற்று பொங்கல் வைத்தனர். அதன் பிறகு, யானைகளுக்குத் திருநீர், மஞ்சள், குங்குமமிட்டு, மாலை அணிவித்து பாகன்கள் மரியாதை செய்தனர். பின்னர், பொங்கலுடன், யானைகளுக்குப் பிடித்த கரும்பு, வெல்லம், தேங்காய், பழம் போன்றவை வழங்கப்பட்டன. யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பூஜைகள் முடிந்த பிறகு வளர்ப்பு யானைகளின் ராஜாவான கலீம் யானைக்குப் பட்டம் கட்டி ராஜ கௌரவம் செய்யப்பட்டது. கலீம் யானை முன்னே செல்ல மற்ற யானைகள் அணிவகுத்து பின்னே சென்றன. அதற்குப் பிறகு, யானைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் துதிக்கையை உயர்த்தி பிளிறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. 
உள்ளூர், வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் யானை பொங்கல் விழாவில் பங்கேற்றதுடன், யானைகளின் அணிவகுப்பையும் கண்டுகளித்தனர்.
அணிவகுப்பில் பங்கேற்ற கலீம் யானையின் கம்பீரமும், இரண்டு குட்டி யானைகளின் குறும்புத்தனமான நடையும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.
இந்த விழாவுக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் ஆண்டும் வந்துசெல்லும் நிலையில், இந்த ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் வனத் துறையினர் கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை. இதனால், வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கழிப்பிட வசதியின்றி அவதி அடைந்தனர். ஒரே ஒரு குடிநீர்த் தொட்டி மட்டும் அசுத்தமான முறையில் வைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com