இ-சேவை மையங்களில் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள்

தமிழகத்திலுள்ள இ-சேவை மையங்களில் சான்றுகள், சேவைகள் கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் சில சமயம் உரிய ஆதாரச் சான்றுகள் இல்லை எனக் கூறி நிராகரிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். 

தமிழகத்திலுள்ள இ-சேவை மையங்களில் சான்றுகள், சேவைகள் கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் சில சமயம் உரிய ஆதாரச் சான்றுகள் இல்லை எனக் கூறி நிராகரிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். 
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் மின்ஆளுமை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியில் ஜாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட அரசின் 20 வகையான சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இணையவழி பட்டா மாறுதல், சிட்டா ஆகியவையும், சமூக நலத் துறையின் சார்பில் அளிக்கப்படும் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட 7 வகையான சேவைகளும், தீயணைப்புத் துறை, மின்சார வாரியம், காவல் துறை, பொது விநியோகத் திட்டம் ஆகிய துறைகளின் சேவைகளும் அளிக்கப்படுகின்றன. இந்த சான்றுகள், சேவைகளுக்காக குறைந்தபட்சம் ரூ. 15 முதல் ரூ. 120 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த இ-சேவை மையங்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு இணையவழியில் அனுப்பப்பட்டு, தொடர்ந்து வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் பரிசீலனைக்குப் பிறகு சான்றுகள் அளிக்கப்படுகின்றன. அவ்வாறு சான்றுகள், சேவைகளுக்காக மக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் சில சமயம் உரிய ஆதாரச் சான்றுகள் இணைக்கப்படவில்லை எனக் கூறி நிராகரிக்கப்படுவதுடன், அதற்குரிய மொத்த செயல்பாடும் ரத்து செய்யப்படுகின்றன. 
இதனால், அந்தச் சான்றுகள், சேவைகளுக்காக அவர்கள் மீண்டும்  புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுவதுடன், அதற்குரிய முழுக் கட்டணத்தை மீண்டும் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நடைமுறை பொதுமக்களிடையே பெரும் சுமையையும், அலைக்கழிப்பையும் ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, இ-சேவை மையங்களில் முடிந்தவரை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்கவும், அவ்வாறு தவிர்க்கப்படும்பட்சத்தில் மீண்டும் முழுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டிய நடைமுறையில் மாறுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் எல்.சி.மணி கூறியது:
இ-சேவை மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றப்பட்டு குறிப்பிட்ட எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த ஒப்புகைச் சீட்டு எண்ணை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்போது ரத்து செய்துவிடாமல் தேவையான ஆதாரச் சான்றுகளை மட்டும் கேட்டுப் பெற்று மீண்டும் அதே ஒப்புகை எண்ணில் சான்றுகள், சேவைகளுக்கான நடைமுறைகளைச் செயல்படுத்தலாம். அவ்வாறு மறுமுறை செயல்படுத்தும்போது உரிய ஆதாரச் சான்று இணைப்புக்காக மட்டும் சிறு தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால், மக்களுக்கு ஏற்படும் கட்டணச் சுமை தவிர்க்க முடியும்  என்றார் அவர். 
இதுகுறித்து, வேலூர் மாவட்ட இ-சேவை மேலாளர் ஜெகன் கூறியது: இ-சேவை மையங்களில் பொதுமக்கள் விண்ணப்பங்கள் அளிக்கும்போதே தேவையான ஆதாரச் சான்றுகள் கேட்டுப் பெறப்படும். சில சமயம் உரிய ஆதாரச் சான்றுகளை அளிக்காதவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசிக் கொள்வதாகக் கூறி விண்ணப்பம் அளிக்கின்றனர். அவ்வாறான விண்ணப்பங்கள்தான் நிராகரிக்கப் படுகின்றன. மேலும், நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களின் ஒப்புகைச் சீட்டு எண்ணைக் கொண்டு அதை மீண்டும் செயல்படுத்தும் நடைமுறை இதுவரை இல்லை. மீண்டும் முழுக் கட்டணம் செலுத்தி புதிதாக விண்ணப்பிப்பது அவசியமாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com