செயற்கை மூட்டு உபகரண சர்ச்சை: இழப்பீட்டுக்கு முட்டுக்கட்டை போடும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் செயற்கை இடுப்பு மூட்டு உபகரணத்தைப் பொருத்தியதால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையே கேள்விக் குறியான நிலையில், தற்போது அவர்களுக்கு உரி
செயற்கை மூட்டு உபகரண சர்ச்சை: இழப்பீட்டுக்கு முட்டுக்கட்டை போடும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்


சென்னை: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் செயற்கை இடுப்பு மூட்டு உபகரணத்தைப் பொருத்தியதால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையே கேள்விக் குறியான நிலையில், தற்போது அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அந்நிறுவனம் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்காவில் இதுபோன்றதொரு சர்ச்சையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சிக்கிக் கொண்டபோது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ரூ.30,701 கோடியை நஷ்ட ஈடாக அளித்த அந்நிறுவனம், இந்தியர்களை மட்டும் எளிதில் ஏய்த்துவிட எண்ணுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஏஎஸ்ஆர் எனப்படும் செயற்கை இடுப்பு மூட்டு உபகரணத்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. உயர் தொழில்நுட்பத்திலான உபகரணம் என மருத்துவர்கள் கூறியதை நம்பி நாடு முழுவதும் 4,700-க்கும் அதிகமானோர் அறுவைச் சிகிச்சை மூலம் அதனைப் பொருத்திக் கொண்டனர்.
ஆனால், அதற்கு அடுத்த சில நாள்களிலேயே அதனால் ஏற்பட்ட எதிர்விளைவுகள், அவர்களது வாழ்க்கையை முடக்கிப் போட்டது. தரமற்ற அந்த உபகரணத்தின் காரணமாக பலர் நடக்க இயலாமல் ஊனமாகினர்.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த செயற்கை மூட்டு உபகரணத்தை சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். பத்தாண்டுகளுக்கும் மேலாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. சிலர் இறந்தும் விட்டனர். இந்த நிலையில்தான், இழப்பீட்டை நிர்ணயிப்பதற்கென விளையாட்டுத் துறையில் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் ஆர்யா தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களின் தற்போதைய வயது மற்றும் பாதிப்பு நிலவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவது என அக்குழு கணக்கிட்டது. ஆனால், அதை பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் தன்னிச்சையாக மத்தியக் குழு முடிவு செய்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ஆதரவாக அக்குழு செயல்படுகிறதா என்ற சந்தேகமும் எழுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இழப்பீட்டு நிர்ணயம் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த செயற்கை மூட்டு உபகரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வெறும் 40 பேரின் கருத்தை மட்டுமே அறியக் கூடிய நிலையில்தான் அக்கூட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதுவும், மத்தியக் குழு முன்பு தங்களது தரப்பு நியாயங்களை முன்வைக்க அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.அந்த கடிவாளங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகே அவர்கள் அனைவரும் ஒருசேர கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது அவர்களிடையே பேசிய மத்தியக் குழு உறுப்பினர்கள், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ஆதரவாக தாங்கள் செயல்படவில்லை என்றும், தங்களை நம்புமாறும் தன்னிலை விளக்கமளித்துள்ளனர்.அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து இழப்பீடு தொடர்பாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை பரிசீலிப்பதாக மத்தியக் குழு உத்தரவாதம் அளித்ததாகத் தெரிகிறது.
இதற்கு நடுவே, செயற்கை மூட்டு பொருத்திக் கொண்ட ஒவ்வொருவருக்கும் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.1.2 கோடி வரை இழப்பீடு வழங்க முதலில் ஒப்புக்கொண்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், அதன் பிறகு அதைத் தராமல் ஏய்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த மாதம் தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய அந்நிறுவனம், மத்தியக் குழு வகுத்துள்ள கணக்கீட்டு முறையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியது. மேலும் இதுபோன்ற இழப்பீட்டு நடைமுறைகள் தொடர்பாக உரிய சட்ட விதிகள் எதுவும் இல்லாததால் தங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கக் கூடாது என உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இது பாதிக்கப்பட்டவர்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரும், சென்னையை பூர்விகமாகக் கொண்டவருமான விஸ்வநாதன் கூறியதாவது:ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் செயற்கை மூட்டு உபகரணத்தைப் பொருத்தியதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்னால் இயல்பு வாழ்க்கையை வாழ இயலவில்லை. அதன் பிறகு 4 அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். உரிய இழப்பீடு வழங்க வேண்டிய நிறுவனமோ, இன்றளவும் அதனை தராமல் இழுத்தடிக்கிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்றில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு நல்லதொரு தீர்ப்பை உயர் நீதிமன்றம் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

 தொடரும் சர்ச்சைகள்...


உலக அளவில் குழந்தைகளுக்கான குளியல் சோப் மற்றும் பவுடர் தயாரிப்பில் முக்கிய இடம் வகித்து வந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் புதிது அல்ல. அந்நிறுவனம் உற்பத்தி செய்த குழந்தைகள் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற புற்றுநோயை உண்டாக்கும் நச்சு வேதிப் பொருள் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டன.

ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரை பயன்படுத்திய பலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. அதுதொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அந்நிறுவனத்துக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதத்தையும் விதித்தது.
இருந்தபோதிலும், எந்தத் தயக்கமும் இன்றி அந்தப் பொருள்களை இன்றளவும் சந்தைப்படுத்தி வருகிறது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்

தமிழகக் குழு ஆலோசனை

தமிழகத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் செயற்கை மூட்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. அதில், மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் சிவபாலன், துணைக் கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி குணசேகரன், சென்னை மருத்துவக் கல்லூரி முடநீக்கியல் துறை தலைவர் டாக்டர் தீன் இஸ்மாயில், கதிரியக்கத் துறை தலைவர் டாக்டர் ரவி, அரசு புனர்வாழ்வு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சி.ரமேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டறியப்போவதாகவும், இதுதொடர்பாக தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com