தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம்

திருச்சி,  கோவை,  சேலம்,  ஒசூர்,  சென்னை ஆகிய நகரங்களை இணைத்து  தமிழ்நாட்டில்  பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 10 நிறுவனங்கள் ரூ.3,123 கோடி முதலீடு செய்துள்ளன.
திருச்சியில் தமிழ்நாடு  பாதுகாப்பு தொழில் கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் (இடமிருந்து) பாஜக மாநில பொதுச் செயலர் எஸ். வானதி சீனிவாசன்,  மக்களவை உறுப்
திருச்சியில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் (இடமிருந்து) பாஜக மாநில பொதுச் செயலர் எஸ். வானதி சீனிவாசன், மக்களவை உறுப்


திருச்சி: திருச்சி,  கோவை,  சேலம்,  ஒசூர்,  சென்னை ஆகிய நகரங்களை இணைத்து  தமிழ்நாட்டில்  பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 10 நிறுவனங்கள் ரூ.3,123 கோடி முதலீடு செய்துள்ளன.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், இந்தியாவில் இரு இடங்களில் பாதுகாப்பு தொழில் கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்டமைப்பு ரூ.20 ஆயிரம் கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டமைப்பு தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத் திட்டத்தைத் தொடக்கி வைத்து உற்பத்தி செய்யவுள்ள தொழில் நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கூறியது:

இத்திட்டத்தின்படி, பொதுத் துறை மற்றும் தனியாரைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் ரூ. 3,123 கோடிக்கு மேல் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான படைக்கலத் தொழிற்சாலை நிறுவனமானது ரூ. 2,305 கோடியை முதலீடு செய்துள்ளது. பெல் நிறுவனம் ரூ. 140.50 கோடி,  பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (பிஇஎம்எல்) ரூ. 40 கோடி,  பாரத் டைனமிக் நிறுவனம் (பிடிஎல்) ரூ.150 கோடி, மத்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனம் (எம்டிஎல்) ரூ.150 கோடி முதலீடு செய்துள்ளன.

இவைதவிர, டிவிஎஸ் நிறுவனம் ரூ.50 கோடி, டாடா பாட்டர்ன்ஸ் நிறுவனம் ரூ. 75 கோடி, ஏரோ ஸ்பேஸ் தொழில்துறை மேம்பாட்டு சங்கம் (ஏஐடிஏடி) ரூ.163 கோடி, ஆல்பா டிசைன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி, ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயர்ஸ் நிறுவனம் ரூ.125  கோடி முதலீடு செய்துள்ளன. லட்சுமி மில்ஸ் நிறுவனம் (எல்எம்டபிள்யூ) ரூ.150 கோடி முதலீடு செய்யவுள்ளது. 

இதன் மூலம், சென்னை,  கோவை,  ஒசூர்,  திருச்சி,  சேலம் ஆகிய மாநகரங்கள் மற்றும் அதனருகில் உள்ள நகரங்களைச் சேர்ந்த சிறு,  குறு நிறுவனங்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முப்படைகளுக்குத் தேவையான சிறிய உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்கும். 

இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மேம்படுவதுடன், பாதுகாப்புத் துறைக்கு தேவையான உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறையத் தொடங்கும். முழுவதும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு முப்படைகளுக்கும் தேவையானவற்றை பூர்த்தி செய்ய முடியும். புதிய தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படுவர். 

இத் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் இருந்து எல்லைப் பாதுகாப்புப் படைக்குத் தேவையான நவீனரக துப்பாக்கிகளும் உற்பத்தி செய்யப்படவுள்ளன என்றார் அவர்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம்அவர் கூறியது:

மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்களை மூடப்போவதாகவும், ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் ஆதாரமற்ற தகவல்களை சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது,  எந்த தொழிற்சாலைகளிலும் உற்பத்தியைக்  குறைக்கப்போவதில்லை. மூடும் எண்ணமும் இல்லை. ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்படமாட்டார்கள்.

மத்திய பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாட பாகங்கள், உதிரிபாகங்களை தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதால் நமது நாட்டின் பாதுகாப்புக் குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. 

அனைத்து நடவடிக்கைகளையும் ஆராய்ந்து உறுதி செய்த பிறகே  ஒரு நிறுவனத்துக்கு ஆர்டர் வழங்கப்படும். முப்படைகளுக்குத் தேவையான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து தரும் வகையில் தொழிற்சாலைகள் முன்வந்தால் இறக்குமதியை நிறுத்தவும் தயாராகவுள்ளோம். 

படைக்கலத்  தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது என்பது அவர்களது சங்க உரிமை. ஆனால், அந்த சங்க நிர்வாகிகளை பாதுகாப்புத் துறை உற்பத்திச் செயலர் 2 முறை நேரில் அழைத்துப் பேசியுள்ளார். சில கோரிக்கைகள் என்பது மத்திய அரசு நியமனம் செய்த கமிட்டிகளின் பரிந்துரையால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதால் பரிசீலனை செய்ய முடியவில்லை. அனைத்துத் தொழிலாளர்களையும் பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கமாகும்.

பாதுகாப்புத்  தொழில் வளர்ப்பகம்  கொடிசியா! மத்திய அரசின் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை கட்டமைப்பு திட்டத்தின் கீழ், திருச்சி, கோவை, சென்னை, ஒசூர், சேலம் ஆகிய 5 மாநகரங்களை இணைத்து உருவாக்கியுள்ள உற்பத்தி வழித்தடத்தின் பாதுகாப்புத் துறை புத்தாக்கம் மற்றும் வளர்ப்பு

மையமாக (இன்குபேஷன் மற்றும் இன்னோவேஷன் சென்டர்) கோவை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (கொடிசியா) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில்,  சங்கத் தலைவர் ஆர். ராமமூர்த்தியிடம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். இந்த மையமானது பாதுகாப்பு தொழில்துறை கட்டமைப்புக்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கண்டறிவதுடன்,  சிறு, குறுந்தொழில் நிறுவனங்களை இத் திட்டத்தில் இணைக்கும் பாலமாகவும் செயல்படும் என்றார் அவர்.

விழாவில், மத்தியப் பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலர் அஜய்குமார், படைக்கலத் தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் சௌரப் குமார், முப்படைகளின் துணைத் தலைமை அதிகாரிகளான தேவராஜ் அன்பு, அஜித்குமார், அனில் கோஷ்லா, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்,  சுற்றுலா அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ். வளர்மதி, மக்களவை உறுப்பினர் ப. குமார் (திருச்சி), ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்), பாஜக மாநிலப் பொதுச் செயலர் எஸ். வானதி சீனிவாசன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் கே. ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்ஜிஆரின் கனவை நிறைவேற்றும் மோடி

தமிழகத்துக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்ற தோற்றத்தையே உருவாக்கி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான திட்டங்களுக்கு தமிழகத்திலேயே தொடங்கும் வகையிலேயே அனுமதியளிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொழிற்துறை உள்கட்டமைப்பு தமிழகத்துக்குதான் கிடைத்துள்ளது.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றும் பிரதமராக மோடி உள்ளார். மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com