பொறியியல் கல்வித் திட்டத்தில் மாற்றம் செய்ய வாய்ப்பே இல்லை: துணைவேந்தர் சூரப்பா திட்டவட்டம்

பொறியியல் கல்வித் திட்டத்தில் எந்தவொரு மாற்றமும் செய்ய இயலாது. தேர்வு முறையிலும் மாற்றம் இருக்காது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார். 
பொறியியல் கல்வித் திட்டத்தில் மாற்றம் செய்ய வாய்ப்பே இல்லை: துணைவேந்தர் சூரப்பா திட்டவட்டம்


பொறியியல் கல்வித் திட்டத்தில் எந்தவொரு மாற்றமும் செய்ய இயலாது. தேர்வு முறையிலும் மாற்றம் இருக்காது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார். 
பொறியியல் கல்வித் திட் டத்தை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியமைத்து வருகிறது. கடந்த 2013-இல் மாற்றியமைக்கப்பட்ட கல்வித் திட்டம் மீண்டும் 2017-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.
இதன் மூலம், பொறியியல் கல்லூரிகளுக்கு விருப்பப் பாடத் தேர்வு முறை (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் (எலெக்டிவ் பாடம்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். ஒரு துணைப் பாடத்தை தங்கள் துறை சாராத, வேறு துறை பாடம் ஒன்றை எடுத்தும் படிக்க முடியும்.
மேலும், இந்த புதிய கல்வித் திட்டத்தின்படி, அரியர் முறை ரத்து செய்யப்பட்டது. அதாவது ஒரு பருவத் தேர்வில் பாடங்களில் தோல்வியடையும் மாணவர், அடுத்து வரும் பருவத் தேர்வில் அவர் தோல்வியடைந்த பாடத் தேர்வை எழுத முடியாது. மீண்டும் அந்தப் பாடத்துக்கான தேர்வு எந்தப் பருவத்தில் வருகிறதோ அப்போதுதான் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது அக மதிப்பீடு (இன்டர்னல்), புற மதிப்பீடு (எக்ஸ்டர்னல்) இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும்.
மாணவர்கள் போராட்டம்: இந்த புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை கடந்த வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2017 கல்வித் திட்ட நடைமுறைகளைக் கைவிடவேண்டும் என வழியுறுத்தினர்.
குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்: அப்போது, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக பதிவாளர் குமார், மாணவர்கள் கோரிக்கை தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு: இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 2017 கல்வித் திட்ட நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
எந்தவொரு மாற்றமும் கிடையாது: இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணைவேந்தர் சூரப்பாவிடம், இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியது:
கல்வித் திட்டத்திலோ அல்லது தேர்வு நடைமுறையிலோ அண்ணா பல்கலைக்கழகம் தன்னிச்சையாக மாற்றம் கொண்டுவரவில்லை. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே, பொறியியல் கல்வியை மேம்படுத்தவேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 
மேலும், இந்த 2017 கல்வித் திட்டம் நடைமுறைக்கு வந்து இப்போது இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளோ அல்லது தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளோ இதை எதிர்க்கவில்லை. மாறாக, தரமான பேராசிரியர்களைக் கொண்டிராத ஒருசில கல்லூரிகள் மட்டுமே இதை எதிர்க்கின்றன. எதிர்ப்பவர்கள் மிகச் சிலரே.
இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், தேவைகள் அதிகரித்திருக்கின்றன. அதனடிப்படையில், ஒருசில மாற்றங்களை மட்டுமே நாங்கள் செய்திருக்கிறோம். இதை மாணவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர்.
மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சில மாற்றங்களைச் செய்ய பரிசீலிக்கப்படும். அதற்காக, தேர்வு நடைமுறையையோ அல்லது கேள்வித் தாளின் தரத்தையோ குறைப்பதற்கோ அல்லது மாற்றம் செய்வதற்கோ வாய்ப்பே இல்லை. பொறியியல் என்றால் என்னவென்றே தெரியாமல் படிக்க வருபவர்களுக்கெல்லாம் எந்த மாற்றத்தையும் பல்கலைக்கழகம் ஒருபோதும் செய்யாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com