ஆளுநர் மாளிகை முன்பு திமுக நாளை ஆர்ப்பாட்டம்

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலக வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் வியாழக்கிழமை (ஜன.24) ஆர்ப்பாட்டம் நடைபெறும்


கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலக வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் வியாழக்கிழமை (ஜன.24) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கொடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. 3 பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டு தப்பி உள்ளார். ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 
இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டுக் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு முதல்வர் நேரடியாகப் பதில் அளிக்காமல் சுற்றிவளைத்து ஏதேதோ பேசுகிறார்.
இந்த நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நான் நேரில் சந்தித்து மனுக் கொடுத்தேன். அதில், கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை ஏற்படுத்தி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனவும் ஆளுநரை வலியுறுத்தினேன்.
ஆனால், அந்தக் கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் ஆளுநர் எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், முதல்வர் மீது ஆளுநர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு வியாழக்கிழமை (ஜன.24) காலை 10 மணிக்கு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, வடக்கு மாவட்டச் செயலாளர் சுதர்சனம் ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com