உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் சென்னை வர்த்தக மையம்.
உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் சென்னை வர்த்தக மையம்.

உலக முதலீட்டாளர் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா பங்கேற்பு

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதன்கிழமை (ஜன. 23) தொடங்குகிறது.

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதன்கிழமை (ஜன. 23) தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.
தமிழக அரசு இரண்டாவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாட்டை புதன்கிழமை நடத்தவுள்ளது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க விழா காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். தொடக்க விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
ரூ.3 லட்சம் கோடி இலக்கு: தொடக்க விழாவுக்குப் பிறகு, பிற்பகல் 2 மணிக்கு தமிழக தொழில் துறை தொடர்பாக பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்குகளும் நடக்கின்றன. மேலும், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கொரியா நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன.
இதைத் தொடந்து இரண்டாவது நாள் மாநாடு வியாழக்கிழமை (24ம் தேதி) காலை 10 மணிக்கு சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்குடன் தொடங்குகிறது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டின் மூலமாக சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கான முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையிலான காட்சி அரங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. 
நிறைவு விழா: வரும் 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு நிறைவு உரை ஆற்றுகிறார். மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: நிறைவு விழாவின் போது, 90-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசுக்கும், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் செய்யப்படும். பெருந்தொழில்கள், சிறு-குறுந்தொழில்கள் தரப்பிலும் இத்தகைய ஒப்பந்தங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டு நாள் மாநாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

ஆட்டோமொபைல் முதல் ராணுவ தளவாடங்கள் வரை...
உலக முதலீட்டாளர் மாநாட்டின் ஒருபகுதியாக, பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சிக்குப் பிறகு, பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை வரை கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
ஆட்டோமொபைல் துறையில் தமிழகம் எப்படி நீடித்த நிலைத்த வளர்ச்சியைப் பெற்று வருகிறது என்பது தொடர்பான தலைப்பில் மகேந்திரா அன்ட் மகேந்திரா செயல் அதிகாரி வி.எஸ்.பார்த்தசாரதி, ஹூண்டாய் இந்தியா மோட்டார் துணைத் தலைவர் பி.சி.தத்தா, சீயட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் கோயங்கா, போஃர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் பிரில்மேயர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
தமிழகத்தில் கல்வியில் இருந்து வேலைவாய்ப்பு என்ற தலைப்பில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.பி.கிருஷ்ணன், சுனில்பாலிவால், ஜோதி நிர்மலாசாமி ஆகியோரும் வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தித் துறையில் தமிழகம் விரும்பத்தக்க மாநிலமாக இருப்பது ஏன் என்ற தலைப்பில் தொழில் அதிபர்கள் வினோத் சுரனா, அட்மிரல் பி.கண்ணன், லெப்டினன்ட் ஜெனரல் ஏ.வி.சுப்பிரமணியன், சேலம் ஏரோபார்க் ஆர்.சுந்தரம் ஆகியோரும் பங்கேற்று பேசுகின்றனர். உயிரி தொழில்நுட்பம், மருந்துகள் உற்பத்தி, தமிழகத்தில் இருந்து ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள், தமிழகத்தில் எளிதாகத் தொழில் செய்யும் நடைமுறைகள் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com