தஞ்சையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு: ஆயுதம் ஏந்திய பெண் காவலர் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு

தஞ்சையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும், அவருக்கு ஆயுதம் ஏந்திய பெண் காவலர் பாதுகாப்பு வழங்க வேண்டும்


தஞ்சையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும், அவருக்கு ஆயுதம் ஏந்திய பெண் காவலர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தஞ்சை மாவட்ட நிர்வாகத்துக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், கணவரை இழந்த நான், மகன், மகளுடன் வசித்து வருகிறேன். எனது மகள், திருபுவனம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், ஜவுளிக் கடை உரிமையாளரின் நண்பரான சின்னப்பா என்பவர், நவ. 7ஆம் தேதி தீபாவளி விருந்தளிப்பதாகக் கூறி எனது மகளை அவரது வீட்டுக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். அன்று பிற்பகல் 3 மணியளவில் வீடு திரும்பிய எனது மகள் மயக்க நிலையில் இருந்தார். மேலும், அதிக ரத்தப் போக்கும் ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது, எனது மகள் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என மருத்துவமனையில் கூறினர்.
இதைத்தொடர்ந்து, அளித்த புகாரின்பேரில் சின்னப்பா கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் ஜவுளி கடை உரிமையாளர் உள்பட பலருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே, எனது மகளுக்கு நீதி கிடைக்க  அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இக் கடிதத்தின் அடிப்படையில் இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜரான தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகளிடம் இருந்து மிரட்டல்கள் வருவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தனர். இதனையேற்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆயுதம் ஏந்திய பெண் காவலரை பாதுகாப்புப் பணியில் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜன. 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com