நீட் தேர்வு: பேரவை சிறப்புக் கூட்டம் மூலம் புதிய மசோதாக்கள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக, தேவைப்பட்டால் பேரவையின் சிறப்புக் கூட்டம் மூலம் புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார்.
நீட் தேர்வு: பேரவை சிறப்புக் கூட்டம் மூலம் புதிய மசோதாக்கள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக, தேவைப்பட்டால் பேரவையின் சிறப்புக் கூட்டம் மூலம் புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாக்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் குறித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை கேள்வி எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:

மு.க.ஸ்டாலின்: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று இந்த சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதியே திருப்பி அனுப்பி விட்டோம் என்று மத்திய அரசின் உள்துறை துணைச் செயலாளர் ராஜேஷ் எஸ்.வைத்தியா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டம் 201-ஆவது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருக்கிறார் என்றால் அது நிராகரிப்பதுதான். குடியரசுத் தலைவர் நிராகரிக்கும் மசோதாக்கள் மீண்டும் 6 மாதங்களுக்குள் இந்த அவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும் அதிகாரம்  நமக்குள்ளது. ஆனால், இந்த அதிகாரத்தை அரசு பயன்படுத்தாமல் இன்றைக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பி 21 மாதங்களுக்கு மேலாகி இருக்கிறது.

தமிழக அரசு காரணம் கேட்டு ஒரு கடிதத்தை எழுதி, ஏழரை கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்ற சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தை முறையாக செய்யத் தவறிவிட்டீர்கள். எனவே, மீண்டும் இன்னொரு முறை புதிதாக இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா? 

சி.வி.சண்முகம்: சட்டப்பேரவையில் எந்தத் தகவலையும் அரசு மறைக்கவில்லை. வந்த தகவலை அரசு தெரியப்படுத்தியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி திருப்பி அனுப்பப்பட்ட மசோதா குறித்து ஏற்கெனவே நீங்கள்  கேள்வியை எழுப்பி அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கத்தை அளித்துள்ளார். மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கக் கோரி தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பினோம். இன்று வரை பதில் வரவில்லை என்பதை ஏற்கெனவே கூறியுள்ளோம்.

மசோதாவை நிறுத்தி வைத்ததற்கான காரண, காரியங்கள் தெரிய வேண்டும். நிராகரிக்கப்பட்டது என்ற தகவலே அரசுக்கு இதுவரை வரவில்லை. மசோதாக்களை நிறுத்தி வைத்து, திருப்பி அனுப்பியுள்ளோம் என்று உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் கோரி 12 முறை கடிதங்களை அனுப்பியுள்ளோம்.

காரணங்களைத் தெரிவித்தால் புதிய மசோதாக்களை உரிய முறையில் நிறைவேற்றி, மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பத் தயாராக உள்ளோம். மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு வரக் கூடாது என்பதே அனைவரின் நிலைப்பாடு. மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கு காரணமும் வரவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. எனவே, மசோதாக்கள் குறித்து முதல்வருடனும், சட்ட வல்லுநர்களுடனும் கலந்து பேசி மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்புவோம். இல்லாவிட்டால் வழக்குத் தொடர அரசு தயங்காது.

மு.க.ஸ்டாலின்: ஏற்கெனவே நிறைவேற்றிய சட்ட மசோதாக்கள் பற்றி இனி வலியுறுத்துவதற்கு வாய்ப்பில்லை. நீட் தேர்வு பிரச்னையைப் பொருத்தவரையில் புதிய இரண்டு மசோதாக்களை இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி  மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

முதல்வர் பழனிசாமி: இது ஒரு முக்கியமான பிரச்னை. உணர்வுப்பூர்வமான பிரச்னை. அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் பிரதமரைச் சந்திக்கும்போது அளித்த கோரிக்கை மனுக்களிலும்,  கடிதங்கள் வாயிலாகவும் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை நிராகரித்ததற்கு என்ன காரணம் என்று தெரிந்தால்தான் அதற்கேற்றவாறு மீண்டும் திருத்தம் கொண்டு வந்து மசோதாவை நிறைவேற்ற முடியும். இந்த அடிப்படையிலேயே சட்டத் துறை அமைச்சர் கருத்துத் தெரிவித்தார். மசோதா என்ன காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் இதுவரை அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை. பலமுறை கடிதம் எழுதப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு, அதற்கும் பதில் வரவில்லை என்றால் பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டலாம். அதில் தவறு கிடையாது. நமது மாணவர்களின் நலன் மீது உங்களுக்கு எப்படி அக்கறை இருக்கிறதோ, அதே அக்கறை எங்களிடத்திலும் இருக்கிறது. 

இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த மாணவர்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com