பின்னடைவில் பொறியியல் கல்லூரிகள்!

பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஆய்வு முடிந்த பின்னர், விதிகளை மீறி ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் பொறியியல் கல்லூரிகள் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றன.
பின்னடைவில் பொறியியல் கல்லூரிகள்!

பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஆய்வு முடிந்த பின்னர், விதிகளை மீறி ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் பொறியியல் கல்லூரிகள் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றன. போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளை நடத்த முடியாமல் திணறும் நிர்வாகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கல்வித்தரம், வேலைவாய்ப்பு குறைந்தது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வந்தது. 

2018-19 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை மேலும் சரிந்தது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில், மொத்தத்தில் 43 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின. 

மேலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 90 ஆயிரம் பி.இ. இடங்கள் சேர்க்கை இல்லாமல் காலியாக இருந்தன. 22 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 

2019-20 கல்வியாண்டிலும் இதே நிலைதான் தொடர்கிறது. தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் ஆன்லைன் பொறியியல் சேர்க்கை இப்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாகவே, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை முடிந்துவிட்டது. 

இருந்தபோதும், வழக்கம் போல இந்த ஆண்டும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக இடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதன் காரணமாக, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 30,000-க்கும் அதிகமான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளன.

இந்த நிலை காரணமாக, ஊதியக் குறைப்பு மட்டுமின்றி, ஆள்குறைப்பு நடவடிக்கைகளிலும் பொறியியல் கல்லூரிகள் ஈடுபட்டு வருகின்றன.

பல்கலைக்கழக ஆய்வு: பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு (ஏஐசிடிஇ) விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பிக்கும் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் மாணவர் - பேராசிரியர் விகிதாச்சாரம் உள்ளதா, பேராசிரியர்களின் கல்வித் தகுதி, ஆய்வகம், கணினி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தை வழங்கும். அதன் பிறகே, பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

இந்த நிலையில், ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வுக்குப் பின்னர் பேராசிரியர்களைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஏஐசிடிஇ வழிகாட்டுதலை மீற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன பல பொறியியல் கல்லூரிகள்.

பல்கலைக்கழகத்திடம் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்காகக் கல்லூரிகள் சார்பில் சமர்ப்பிக்கப்படும் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பேராசிரியர்களில் சிலர் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். 

ஆனால், சம்பந்தப்பட்ட கல்லூரியின் வலைதளத்தில் பணியிலிருக்கும் பேராசியர்கள் பட்டியலில் அவர்கள் பெயர்களையும் கல்லூரி நிர்வாகங்கள் தொடர்ந்து இடம்பெறச் செய்கின்றன. 

போதிய மாணவர் சேர்க்கை இல்லாத பொறியியல் கல்லூரிகள் மூட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவதால், பெரும் முதலீடு வீணடிக்கப்படும். வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும். பேராசிரியர்கள் பலர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.

இந்த நிலைமையை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து உயர்கல்வித் துறையும், அண்ணா பல்கலைக்கழகமும், மாணவர் சேர்க்கை குறைந்த கல்லூரிகளும் கலந்தாலோசித்து பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். 

கட்டமைப்பு வசதிகள் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட படிப்புகளைத் தொடங்க ஊக்குவிப்பதன் மூலம் ஓரளவுக்குப் பிரச்னையை எதிர்கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com