அரசு நிதி உதவி எதிர்பார்ப்பில் கஸ்தூரிபா சேவிகாசிரமம் சிறப்புப் பள்ளி!

கஸ்தூரிபா சேவிகாசிரமம் சிறப்புப் பள்ளியில் சுயநிதிப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் மேல்நிலை வகுப்புகளை, அரசு நிதி உதவிபெறும் வகுப்புகளாக மாற்றி கூடுதல் பாடப் பிரிவுகளை
அரசு நிதி உதவி எதிர்பார்ப்பில் கஸ்தூரிபா சேவிகாசிரமம் சிறப்புப் பள்ளி!

திண்டுக்கல்: கஸ்தூரிபா சேவிகாசிரமம் சிறப்புப் பள்ளியில் சுயநிதிப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் மேல்நிலை வகுப்புகளை, அரசு நிதி உதவிபெறும் வகுப்புகளாக மாற்றி கூடுதல் பாடப் பிரிவுகளை சேர்க்க வேண்டுமென்ற கடந்த 10 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், திக்கற்ற பெண்டிர் மற்றும் பள்ளிப் படிப்பை இடையில் விட்ட பெண்கள் ஆகியோர் பாதுகாப்பான சூழலில் கல்வி கற்க வாய்ப்பளிக்கும் வகையில், நெல்லை, சேலம், கடலூர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தாம்பரம் உள்ளிட்ட 9 இடங்களில் தமிழக அரசின் சமூகநலத் துறையின் நிதியுதவியுடன் சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
 இதில், திண்டுக்கல் அடுத்துள்ள காந்தி கிராமத்தில் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா சேவிகாசிரமம் சிறப்புப் பள்ளி, அரசுசாரா அமைப்பு மூலம் செயல்படும் ஒரே பள்ளியாகவும் உள்ளது. கடந்த 1947 இல் சேவை இயக்கமாக தொடங்கப்பட்டு, 1977 முதல் கல்வித் துறையின் அங்கீகாரத்துடன் உயர்நிலைப் பள்ளியாக செயல்படத் தொடங்கியது. இதனிடையே, கடந்த 2007-இல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் தற்போது வரையிலும் சுயநிதிப் பிரிவின் கீழ் உண்டு உறைவிடப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.
 இப் பள்ளியில் 163 மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், 75 பேர் மேல்நிலை வகுப்புகளில் படித்து வருகின்றனர். 11 ஆசிரியர்களில் 5 பேருக்கு மட்டுமே சமூகநலத் துறை மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. 6 ஆசிரியர்கள் காந்தி கிராம அறக்கட்டளை சார்பில் ஊதியம் பெறுகின்றனர். அதேபோல், 163 மாணவிகளில் 118 பேருக்கு மட்டுமே உதவித் தொகையாக மாதம் தலா ரூ. 450 வீதம் வழங்கப்படுகிறது.
 இதுபோன்ற சூழலில், மேல்நிலை வகுப்புகளை அரசு உதவிபெறும் வகுப்புகளாக மாற்றுவதற்கு, பள்ளி நிர்வாகத்தினர் கடந்த 2007ஆம் ஆண்டு முதலே முயற்சித்து வருகின்றனர். தற்போது செயல்பட்டு வரும் 2 பிரிவுகளிலும் ஆண்டுதோறும் வணிகவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவோர் பட்டியலில் மாணவிகள் இடம்பிடித்து வருகின்றனர். சுயநிதிப் பிரிவு என்பதால், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த முடியாமலும், மேல்நிலை வகுப்புகளில் கூடுதல் பாடப் பிரிவுகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கூறியது: 14 முதல் 45 வயதுக்குள்பட்ட பெண்கள் கல்வி கற்கும் பள்ளியாக இருந்தது. தற்போது பெண்கள் மத்தியில் ஏற்பட்ட சமூக விழிப்புணர்வு காரணமாக, பள்ளி வயதை கடந்த குழந்தைகள் சிறப்புப் பள்ளிகளில் கல்வி கற்கும் சூழல் இல்லை. ஆனால், குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், விதவை மறுமணத்தால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள் நலன் கருதியும் சிறப்புப் பள்ளிகளுக்கு மாணவிகளின் வருகை தொடர்கிறது.
 கஸ்தூரிபா சேவிகாசிரமம் சிறப்புப் பள்ளியில் தற்போது வணிகவியலுடன் கூடிய கணினி அறிவியல் மற்றும் வணிகவியலுடன் கூடிய வரலாறு ஆகிய 2 பாடப் பிரிவுகள் மட்டுமே உள்ளன. இதனால், 11ஆம் வகுப்பில் இதர பிரிவுகளை படிக்க விரும்பும் மாணவிகள், 10ஆம் வகுப்புக்கு பின் வெளியேறி விடுகின்றனர். அதில் பலருக்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக படிப்பைத் தொடர முடியாத நிலையும் உள்ளது எனத் தெரிவித்தனர்.
 இதுகுறித்து பள்ளியின் நிர்வாகிகள் கூறியது: சுயநிதிப் பிரிவில் செயல்பட்டு வரும் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளை, அரசு நிதி உதவிபெறும் வகுப்புகளாக மாற்றுவதற்கு கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். மாணவிகளுக்கான விடுதி வசதியை மேம்படுத்த வேண்டும் என, சமூகநலத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட ரூ. 34 லட்சத்தில் விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
 அதேநேரம், அரசு சார்பில் செயல்படும் சிறப்புப் பள்ளி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 2 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஆனால், சுயநிதிப் பிரிவு மாணவிகளுக்கு உதவித் தொகையாக ரூ.450 மட்டுமே வழங்கப்படுகிறது.
 எனவே, அரசு தரப்பில் மேல்நிலை வகுப்புகளை உதவி பெறும் வகுப்புகளாக மாற்றியும், மாணவிகளுக்கான உதவித்தொகையை கூடுதலாகவும் வழங்கினால், சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட பெண் குழந்தைகள் இப்பள்ளியின் மூலம் கூடுதல் பயன்பெற முடியும் எனத் தெரிவித்தனர்.
 - ஆ.நங்கையார் மணி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com