நாகூர் குலாம் காதிறு நாவலருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா?

நான்காம் தமிழ்ச் சங்கம் அமையக் காரணமானவர்களில் ஒருவரும், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதற்பெரும் புலவருமான நாகூர் குலாம் காதிறு நாவலரின் நினைவைப் 
நாகூர் குலாம் காதிறு நாவலருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா?

நாகப்பட்டினம்: நான்காம் தமிழ்ச் சங்கம் அமையக் காரணமானவர்களில் ஒருவரும், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதற்பெரும் புலவருமான நாகூர் குலாம் காதிறு நாவலரின் நினைவைப் போற்ற தமிழக அரசு கவனம் கொள்ளாதது, தமிழார்வலர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.

 மாற்றார் படையெடுப்புகளாலும், மாற்று மொழிகளின் ஆதிக்கங்களாலும் வழக்கொழிந்த மொழிகள் ஏராளம். எனினும், எண்ணற்ற ஏற்ற, இறக்கங்களை எதிர் கொண்டாலும், இளமை மாறா நடையுடன் செம்மொழியாக தமிழ் மொழி செழுமையுடன் வலம் வருவதற்கு, தகைசால் புரவலர்களும், தமிழ்த் தொண்டாற்றிய புலவர்களுமே பிரதான காரணம். இதில், குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர் நாகூர் குலாம் காதிறு நாவலர்.
 தமிழிலக்கிய மரபுக்கேற்ப, சீறாப் புராணம் படைத்த உமறுப் புலவருக்குப் பின்னர், சேகனாப் புலவர், மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர், காசிம் புலவர், சர்க்கரைப் புலவர் உள்ளிட்ட தமிழுக்கு வளம் சேர்த்த இஸ்லாமிய புலவர்களின் வரிசையில், 19 -ஆம் நூற்றாண்டில் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியவர் நாகூர் குலாம் காதிறு நாவலர்.
 காப்பியப் புலவராக, உரைநடை ஆசிரியராக, மொழிப் பெயர்ப்பாளராக, பேச்சாளராக, பத்திரிகை ஆசிரியராக பன்முகத் தன்மையுடன், தமிழ்த் தொண்டாற்றிய இவர், நாகையை அடுத்த நாகூரில் 1833-ஆம் ஆண்டில், ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தரின் மகனாகப் பிறந்தவர்.
 எழுத்துச்சுவடி, எண் சுவடி, திவாகரம், பிங்கலம், நிகண்டு உள்ளிட்டவைகளை திண்ணைப் பள்ளியில் கற்றுத் தேர்ந்தார். பின்னர், நாகூர் பெரும்புலவர் நாராயணசுவாமி பண்டிதர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் தமிழ்ப் பயின்று, மடைதிறந்த வெள்ளமாய் கவிப்பாடும் திறன் கைவரப் பெற்ற ஆசுகவியாகத் திகழ்ந்தவர்.
 பிரபந்தத் திரட்டில் தொடங்கி, நாகூர் ஆண்டவரின் புகழ்பாடும் நாகூர் புராணம், நாகூர்க் கலம்பகம், ஆரிபு நாயகம், தறுகா மாலை, முகாஷாபா மாலை, பாதியுகுக் கலம்பகம், மும்மணிக் கோவை, புலவராற்றுப் படை, சமுத்திர மாலை, சச்சிதானந்தமாலை, மதுரைக் கோவை உள்பட பல கவிதை இலக்கியங்களையும், சீறாப்புராண வசனம், நபி அவதார படல உரை, சீறா நபி அவதாரப் படல உரை கடிலக நிராகரணம், திருமணி மாலை வசனம் உள்பட பல உரைநடை இலக்கியங்களையும் படைத்துள்ளார் குலாம் காதிறு நாவலர்.
 இவர், பர்மா அரசாங்கத்தால் ராய் பகதூர் பட்டம் பெற்ற பெரும் செல்வந்தர் பெ.மா. மதுரைப்பிள்ளையை வாழ்த்தி, மதுரைக்கோவை என்ற நூலைப் படைத்தார். இந்நூலால், பெருமகிழ்வுக்குள்ளான பெ.மா. மதுரைப்பிள்ளை, சென்னையில் மாநாடு கூட்டி, புலவர் குலாம் காதிறுவுக்கு நாவலர் பட்டம் சூட்டி, அதை தங்கத் தாம்பாளத்தில் பொறித்து அளித்தார். அதுமுதல், குலாம் காதிறு நாவலர் ஆனார்.
 இடையறாது இலக்கியப் பணிகளை மேற்கொண்டிருந்த நாவலர், இராக் நாட்டில் வாழ்ந்த இறைநேசர் சையது அகமதுல் கபீர் ரிபாயி என்பவரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, ஆரிபுநாயகம் என்ற நூலைப் படைத்தார். அப்போதையக் காலத்தில், புலவர் குலாம் காதிறுவுக்கு அளிக்கப்பட்ட நாவலர் பட்டம், தமிழறிஞர்களிடையே பெரும் விவாதத்துக்குள்ளானது. யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தவிர வேறு யாரையும் நாவலராக ஏற்க தமிழறிஞர்கள் தயாராக இல்லாததால், குலாம் காதிறு சில நேரங்களில் தமிழறிஞர்களின் சாடல்களுக்கு உள்ளாக நேரிட்டது.
 இதனிடையே, தனது இலக்கிய நூலான ஆரிபுநாயகம் நூலை இலங்கையில் அரங்கேற்றம் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் குலாம் காதிறு நாவலர். அந்த நிகழ்வுக்கு சிறந்த தமிழ்ப் புலவரும், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருமகனுமான பொன்னம்பலம்பிள்ளை தலைமையேற்றுள்ளார். ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த அந்த அவையில் ஆரிபுநாயகம் நூலை அரங்கேற்றினார் குலாம் காதிறு.
 அவரின் தமிழ்ப் புலமையை சோதிக்க நினைத்த புலவர்கள், நூல் அரங்கேற்றத்தின் போது ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். அத்தனை வினாக்களுக்கும், இலக்கண இலக்கியத்துடன் பதிலளித்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் குலாம் காதிறு.
 நாவலரின் இலக்கணச் செழுமையைக் கண்டு மகிழ்ந்த ஒரு பெண் புலவர், "துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் பிறந்து எங்கள் யாழ்ப்பாணக்கரை வந்தீர்..." என மனமகிழ்வுடன் குலாம் காதிறு நாவலரை வாழ்த்தியுள்ளார்.
 நூல் அரங்கேற்றத்தின் நிறைவில், அவையோர் அனைவரும் "நாவலர் என்றால் நீர்தாம்காண் நாவலர்" என்ற உரக்கக் குரல் எழுப்பி, நாகூர் குலாம் காதிறுவின் நாவலர் பட்டத்தை உறுதி செய்து, அவரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றியுள்ளனர்.
 இவர், இயற்றிய பொருத்த விளக்கம் நூல் அந்தக் காலத்தில் மிக்கப் புகழ் பெற்ற நூலாக விளங்கியுள்ளது. இதையறிந்த பாண்டித்துரை தேவரும், பாஸ்கர சேதுபதி மன்னரும் நாவலரை காண நாகூர் வந்து, "உமக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" என வினவியுள்ளனர். அப்போது, "தமிழை வளர்க்க வேண்டும், மீண்டும் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்க வேண்டும் அதுவே தாம் வேண்டுவது' எனக் கூறியுள்ளார் நாவலர். தன்னலம் கருதாமல் தமிழ் நலம் கருதிய நாவலரின் வேண்டுகோளால் பெருமகிழ்வுக்குள்ளான சேதுபதி மன்னரும், பாண்டித்துரை தேவரும், தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்க அப்போதே உறுதியளித்துள்ளனர்.
 அதே ஆண்டில் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் தோன்றியது. சேதுபதி மன்னரும், பாண்டித்துரை தேவரும், இச்சங்கத்தின் முதற்பெரும் உறுப்பினராக குலாம் காதிறு நாவலரை நியமித்து பெருமைப்படுத்தியுள்ளனர். முனைப்புடன் பங்காற்றிய நாவலர், புலவராற்றுப்படை, சச்சிதானந்தமாலை, பிரபந்தத்திரட்டு, அபிநயஒத்து, இசை நுணுக்கம் ஆகிய நூல்களைப் படைத்து, நான்காம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினார்.
 இதில், பெரும் புகழ் பெற்றது நாவலரின் புலவராற்றுப் படை. அதேபோல, ஆறு நூற்றாண்டுகளாக இசைத் தமிழ் இலக்கண நூல்கள் வெளிவராமல் இருந்த குறையையும் தனது இசை நுணுக்கம் என்ற நூல் மூலம் போக்கினார் நாவலர். மேலும், நாட்டிய நுணுக்கங்களை விளக்கும் நூலாக அபிநயஒத்து என்ற நூலையும் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றி, நான்காம் தமிழ்ச் சங்கத்தைப் பொலிவுறச் செய்த பெரும் புலவர் இவர்.
 தமிழ்த் தாத்தா உ.வே.சாவுக்கு தமிழ்ப் பயிற்றுவித்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரத்தின் மாணக்கர்களில் ஒருவர், தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளுக்குத் தமிழ்ப் பயிற்றுவித்த ஆசான்களில் ஒருவர், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதற்பெரும் புலவர் என எண்ணற்றச் சிறப்புகளுக்கு உரியவரும், நாகூர் தறுகா மகாவித்துவான், ஷாமே ஜஹான், வித்வஜன சேகரர் என பல்வேறு சிறப்புப் பெயர்களையும் பெற்றவருமான நாகூர் குலாம் காதிறு நாவலர் தமிழ்க்கூறு நல்லுலகத்தால் போதிய கவனம் பெற்றாரா? என்றால் நிச்சயம் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
 வேண்டுவது யாது எனக் கேட்டவர்களிடம், தனக்கென ஏதும் கோராமல் தமிழுக்குச் சங்கம் கோரிய நாவலரை தமிழ்க் கூறு நல்லுலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், நாகூர் ஹனீபாவை அறிந்த அளவுக்குக் கூட, நாகூர் குலாம் காதிறு நாவலரை தமிழகம் அறிந்திருக்கவில்லை என்பது மறுக்க முடியாத வருத்தத்துக்குரிய உண்மை.
 தமிழ்த் தொண்டாற்றிய மிகப் பெரும் தமிழ் ஆளுமைகளில் ஒருவரான நாகூர் குலாம் காதிறு நாவலரின் நினைவைப் போற்றும் அடையாளம் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் இல்லை என்பதை விட, அவர் பிறந்து, வாழ்ந்த நாகூரில் கூட இல்லை என்பது வேதனைக்குரியது.
 நாகூர் செய்யது பள்ளித் தெருவில் இருந்த நாவலர் பிறந்த இல்லம் விற்பனை செய்யப்பட்டுவிட்ட நிலையில், நாகூர் ரயில் நிலையத்தில் ஒரேயொரு கல்வெட்டு மட்டும் குலாம் காதிறு நாவலரின் நினைவாக இருந்தது.
 "மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் தோன்ற காரணமானவர்களில் ஒருவரான நாகூர் குலாம் காதிறு நாவலர் பிறந்த ஊர்' எனப் பொறிக்கப்பட்டிருந்த அந்த கல்வெட்டும், 1977 -ஆம் ஆண்டில் வீசிய புயலில் சேதமடைந்து, அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், அவர் குறித்த எந்த அடையாளமும் நாகூரில் இதுவரை இல்லை.
 இதுகுறித்து நாகூர் தமிழ்ச் சங்க நெறியாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கூறுகையில், நான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில், நாகூர் குலாம் காதிறு நாவலரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. நாகூர் ரயில் நிலையத்தில் மீண்டும் நாவலரின் நினைவைப் போற்றும் பெயர்ப் பலகையை அமைக்க பல முறை வலியுறுத்தியும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. நாகூர் நூலகத்தை புனரமைத்து நாவலரின் பெயரை சூட்டவும், நாகூரில் அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 நாகூர் குலாம் காதிறு நாவலரின் நினைவைப் போற்றும் அடையாளம் நாகூரில் கூட இல்லை என்ற குறையை தமிழக அரசு போக்க வேண்டும். நாகூரில் குலாம் காதிறு நாவலருக்கு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பதே தமிழார்வலர்கள் அனைவரின் ஆவல்.
 -எம். சங்கர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com