18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அதிமுக ஆட்சிக்கு வாழ்வா? சாவா? 

தமிழக சட்டப்பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆளும் அதிமுகவுக்கு வாழ்வா? சாவா? என்றும் முதல்வர்
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அதிமுக ஆட்சிக்கு வாழ்வா? சாவா? 


தமிழக சட்டப்பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆளும் அதிமுகவுக்கு வாழ்வா? சாவா? என்றும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்கவைப்பாரா, தவறவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இவர்களில் திருவாரூர் எம்எல்ஏவாக இருந்த திமுக தலைவர் கருணாநிதியும், திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸும் மறைந்துவிட்டதால், அந்த இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளன. குற்றவழக்கில் தண்டனை பெற்ற ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டியின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளதால் அந்தத் தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை, தற்போது 213 ஆக உள்ளது. 

பேரவையில், பெரும்பான்மையை நிரூபிக்க, தற்போது உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில், சரிபாதியுடன், ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும் என்ற நிலையில், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே மக்களவைத் தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பேரவையில் தற்போதைய நிலையின்படி ஆளும் அதிமுகவின் பலம் சபாநாயகர் உள்பட115 ஆக உள்ளது. எதிர்க்கட்சியான திமுகவின் பலம் (காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட) 97, சுயேச்சை 1 (அமமுக டிடிவி. தினகரன்) உள்ளது. ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளை தவிர்த்து பார்த்தால், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 231 ஆகிறது. அதனடிப்படையில் ஆட்சி அமைப்பதற்கான பலம் 117 தேவையாக உள்ளநிலையில், நடைபெறவுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் ஆளும் அதிமுக வெற்றிபெற்றாலே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால் அதில் பல சிக்கல்களும் சூழ்ந்துள்ளது. 

அதிமுக எம்எல்ஏக்களில் கள்ளக்குறிச்சி தொகுதி பிரபு, விருத்தாசலம் தொகுதி கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதி ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் தற்போது டிடிவி தினகரன் ஆதரவாளராக உள்ளனர்.  இதேபோன்று அதிமுக சின்னமான இரட்டை இலையில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சி தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் ஆகிய 3 பேரும் அவ்வப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி வருகின்றனர். தற்போதைய நிலையில் தனியரசு, கருணாஸ் ஆகியோர் அதிமுக, டிடிவி என தங்கள் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்காமவும், தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர்.

எனவே, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வரும்போது, இந்த 6 பேரின் வாக்கு யாருக்கு கிடைக்கும் என்பதை உறுதியாக யாராலும் சொல்ல முடியாது. ஆகையால் இதுவரை ஆபத்து இல்லாமல் இரண்டு ஆண்டுகளை கடந்து வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு ஆபத்தாகவே வந்துள்ளது. 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக உயரும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எடப்பாடி அரசுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 8 தொகுதிகளிலாவது அதிமுக வெற்றி பெற்றால் தான் பழனிசாமி முதல்வராக இருக்க முடியும்.

எனவே, 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆளும் அதிமுக அரசுக்கு ஆட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com