தமிழ்நாடு

சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கு: சி.பி.சி.ஐ.டி விசாரணை அறிக்கை தாக்கல் 

DIN

சென்னை: சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிறந்து வளர்ந்த சண்முகம் (எ) முகிலன் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பில் தீவிரமாக பணியாற்றி வந்தார். இயற்கை வளங்களைப்

பாதுகாக்கப் போராடி வரும் சமூக ஆர்வலராக முகிலன் இருந்துள்ளார். அத்துடன் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓராண்டுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவரைக் காணவில்லை. இதையடுத்து, பல இடங்களில் தேடியும் முகிலன் கிடைக்கவில்லை. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:

கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான விடியோவை சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். பின்னர் பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் ரயிலில் சென்றுள்ளார். அதன்படி பிப்ரவரி 16-ஆம் தேதி மதுரைக்கு வந்திருக்க வேண்டிய அவரை காணவில்லை. மேலும் ஒலக்கூர் ரயில் நிலையம் வரை தொடர்பு எல்லைக்குள் இருந்த அவரது செல்லிடப்பேசியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.  

இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர், விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மார்ச் 8 - ஆம் தேதொயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சுதா ராமலிங்கம், சிபிசிஐடி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் இரண்டரை மணி நேரம் விசாரித்துள்ளனர். இந்த விசாரணையின் போது வழக்குக்கு தொடர்பு இல்லாத கேள்விகளைக் கேட்டுள்ளார். இதே போல ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் நாராயணன், முகிலன் எங்கே என்ற முகநூல் பதிவுக்கு சமாதி என பதிவிட்டுள்ளதாகக் கூறி வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் போலீஸாரின் புலன் விசாரணயில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தனர். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞர் அய்யப்பராஜ், இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட அடுத்தநாள் முதல் விசாரணை தொடங்கி விட்டனர். முகிலனின் உறவினர்கள், நண்பர்கள் உள்பட இதுவரை 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் மார்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் முகிலன் மாயமான வழக்கு தொடர்பாக 9 பக்கங்கள் கொண்ட சி.பி.சி.ஐ.டி விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறபட்டுள்ளதாவது:

சிபிசிஐடி டி.ஐ.ஜி தலைமையில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை முகிலனின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர் இயங்கி வந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று  259 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம்,.    

எழும்பூர் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

அவர் பயன்படுத்திய மூன்று செல்போன்களில் ஒரு செல்போன் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளோம். மீதமுள்ள இரண்டு செல்போன்கள் குறித்து விசாரணை செய்து வருகிறோம்.

விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில கோணங்களில் விசாரணையை விரைவுபடுத்த வேண்டியுள்ளது, எனவே இரண்டு வாரங்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அறிக்கையினால் திருப்தியடைந்த நீதிபதி, சிபிசிஐடி தரப்பிற்கு மூன்று வாரங்கள் அவகாசம் அளித்து, வழக்கை ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT