ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை

நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழை  மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில்
அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி.
அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி.


நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழை  மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், இந்தத் திட்டத்துக்கு அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம் என்று பெயரிடப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை ஒட்டி, அதிமுக தேர்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.  பல்வேறு முக்கிய துறைகளில் 38 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட,  அதனை முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பெற்றுக் கொண்டார். தேர்தல் அறிக்கை விவரம்:


அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம்: நாடு முழுவதும் வாழும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு மாதந்தோறும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ரூ.1,500 அளிக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு, அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம் எனப் பெயரிடப்படும்.
 உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெறும்  வகையில்  எம்.ஜி.ஆர். பெயரில் தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தப்படும். காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த, மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.


கல்வி-விவசாயக் கடன்கள்-நீட் தேர்வு ரத்து: மாணவ-மாணவிகள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், மற்ற வங்கிகளிலும் பெற்றுள்ள கல்விக் கடனை ரத்து செய்யவும்,      கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும். மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவும், வேளாண்மைக் கடன்களால் துன்பப்படும் விவசாயிகளுக்கு அவர்களது சுமையை நீக்கும் வகையில் உறுதியான திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்துவோம். தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளிலும், இடஒதுக்கீடு அளிக்க புதிய சட்டம் இயற்றவும்,  இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டைப் பெறவும் அவர்களது ஜாதிச் சான்றிதழ்களில் மாற்றமின்றி மதம் மாறுவதற்கு முன்பு இருந்ததைப்போல சலுகைகளைப் பெற்றிட அனுமதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றவும் மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.


ஏழு பேர் விடுதலை-தமிழ் ஆட்சிமொழி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துவோம். 
சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளைப் பாதுகாத்திட பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எந்த முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக் கூடாது என வலியுறுத்தப்படும்.
இந்திய நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியையும் அறிவித்திட வேண்டுமென மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.  


வேளாண்மை மண்டலம்: காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். 


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.
ஈழ இறுதிப் போரின்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதியும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும், நண்பர்களும் மேற்கொண்ட சில மறைமுக நடவடிக்கைகளே இலங்கை ராணுவம், தமிழர்களைக் கொன்று குவிக்கக் காரணமாக அமைந்தன.  எனவே, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரச் செயல்களில் ஈடுபட்டோர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்து உதவியவர்கள் மீதும் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவும்,  ஈழத்தில் நடைபெற்ற உண்மைகளை வெளிக்கொண்டு வரவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தும்.  


அனைவருக்கும்  சமவாய்ப்பே லட்சியம்:  சமூக நீதி, பெண் விடுதலை, மதச்சார்பின்மை, எளியோருக்கு சமூக - பொருளாதாரப் பாதுகாப்பு, அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற லட்சியங்களை நோக்கி அதிமுக பயணித்து வருகிறது.

பொதுவான அம்சங்கள்    
அதிமுகவும் - திமுகவும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள பொதுவான வாக்குறுதிகள்:
* மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
* விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்படும்.
* நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும்.
* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
* காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
* மத்திய அரசின் அலுவல் மொழியாக தமிழ் மாற்றப்படும்.
* தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலை நாள்கள்  உயர்த்தப்படும்.
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்.
* கச்சத்தீவு மீட்கப்படும்.
* தமிழர்கள் அதிகமாக வாழும் அயல்நாடுகளில் தமிழர்களையே இந்தியத் தூதுவர்களாக நியமிக்க வலியுறுத்தப்படும்.
* கேபிள் கட்டணத்தைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com