படிக்க.. சிரிக்க மட்டும்: இதெல்லாம் தேர்தல் சுவாரஸ்யங்கள்

தேர்தல் என்றாலே அரசியல் கட்சியினருக்கு பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பரபரப்புக்கு சற்றும் தேர்தல் பிரசாரத்தில் சில பல காமெடிகளும் நடப்பதுண்டு. 
படிக்க.. சிரிக்க மட்டும்: இதெல்லாம் தேர்தல் சுவாரஸ்யங்கள்


தேர்தல் என்றாலே அரசியல் கட்சியினருக்கு பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பரபரப்புக்கு சற்றும் தேர்தல் பிரசாரத்தில் சில பல காமெடிகளும் நடப்பதுண்டு. 

அவற்றை எல்லாம் தெரிந்து பொதுமக்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை என்றாலும்.. சும்மா தெரிஞ்சுதான் வைத்துக் கொள்ளலாமே தப்பில்லையே என்ற அடிப்படையில் இங்கே சில விஷயங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு பதிவிடுவது அல்ல.

கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சின்னப்பன், கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார்.

விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக வேட்பாளர் சின்னப்பன், வாக்கு சேகரித்து பேசிக் கொண்டிருந்த போது, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதில் ஒன்றும் தப்பில்லை.

அதையடுத்து, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசைக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்துவதற்கு பதிலாக திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சின்னப்பனின் பேச்சைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது சின்னப்பனுடன் நின்றிருந்த நிர்வாகி ஒருவர், தமிழிசை பெயரை சொல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர்தான் தான் செய்த தவறை உணர்ந்து கொண்ட சின்னப்பன் தமிழிசைக்கு வாக்களிக்குமாறு வேண்டி கேட்டுக் கொண்டார்.

எனினும் சில நிமிடங்கள் கூட்டத்தில் சலசலப்பும், சிரிப்பொலியும் ஏற்பட்டு மறைந்தது.

இப்படிச் செய்தாலும் செய்வார்..

மதிமுக பொதுச்செயலாளரான வைகோ இப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அழகிரியின் மகன் துரை தயாநிதி கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக துரை தயாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் புதன் இரவு வெளியிட்டுள்ள பதிவொன்றில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டின் நம்பகமான அரசியல்வாதியான வைகோ, மதிமுகவை தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இவ்வாறு பதிவிட்டுள்ள தயாநிதி அழகிரி அதற்கு கீழே ஆமை ஒன்று வீட்டுக்குள் போவது போல படத்தையும் சேர்த்துள்ளார்.

•••

அறிமுகக் கூட்டத்துக்கு 5 மணி நேரம் தாமதமாக வந்தவர்

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்,  வேலூர்  மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்றது.

அறிமுகக் கூட்டத்துக்கு தாமதமாக வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக நிர்வாகிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அவர் தாமதமாக வந்தது கால் மணி நேரமோ அரை மணி நேரமோ அல்ல, சுமாராக 5 மணி நேரம் தாமதமாக வந்துவிட்டுத்தான் நிர்வாகிகளிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

•••

அரசனுக்கு வினையான 500 ரூபாய்

சுயேச்சையாக போட்டியிட விண்ணப்பப் படிவத்துடன், டெபாசிட் தொகையை எடுத்துக் கொண்டு வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த அரசன் என்பவருக்கு இன்றைய நாள் அவ்வளவு ஒன்றும் சரியாக இல்லை.

டெபாசிட் பணத்தைக் கட்டும்போதுதான் அதில் ரூ.500 குறைந்துவிட்டதை கவனித்தார். மனைவியிடம் கேட்ட போது, அவர் காய்கறி வாங்க, ரூ.500ஐ எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதனால் 35 கி.மீ. தூரம் பயணித்து வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாமல் திரும்பிச்  சென்றார் அரசன்.
 

•••

அர்ச்சகருக்கு காணிக்கை போடுவதைத் தடுத்த அமைச்சர்
தேர்தல் பிரசாரத்தைத் துவங்கும் முன்பு வேட்பாளர்கள் கோயில் கோயிலாக சென்று அர்ச்சனை செய்வது வழக்கம்தான். அதில் ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஆனால், அமைச்சர் சம்பத்தோடு அதிமுக வேட்பாளர்  கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்தார். அப்போது அர்ச்சகரின் தட்டில் காசு போட பர்ஸைத் திறந்தார் வேட்பாளர். ஆனால் அதற்குள் அருகில் நின்றிருந்த அமைச்சர் சம்பத், அவரது கையை பிடித்து தடுத்து நிறுத்தினார். அர்ச்சகருக்கு காணிக்கை இடுவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்று கூறி, வேட்பாளரை காணிக்கை இட விடாமல் தடுத்தார் சம்பத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com