பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: விளக்கம் கோரி சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ்

பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், பொது சுகாதாரத் துறை


பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
 ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜனின் மனைவி பொம்மி. இவர், பிரசவத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம், கடலூர் கிராமத்திலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். 
பொம்மிக்கு புதன்கிழமை  (மார்ச் 20) அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதால், உறவினர்கள் அவரை கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர் பிரசவம் பார்த்துள்ளனர். 
பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதோடு, குழந்தையின் உடல் பொம்மியின் வயிற்றிலேயே சிக்கியது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பொம்மியை அவரது உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 
தானாக முன்வந்து விசாரணை: இதுகுறித்த செய்தி வியாழக்கிழமை நாளிதழ்களில் வெளியானது. இதனை மாநில மனித ஆணைய உறுப்பினர் நீதிபதி டி.மீனாகுமாரி தானாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்தார். 
மேலும், இந்த விவகாரம் குறித்த முழுமையான அறிக்கையை ஆறு வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோருக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com