மக்களவைத் தேர்தல்: தாக்கத்தை ஏற்படுத்துமா உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான போராட்டம்?

உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ள விவசாயிகள், மக்களவைத் தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை வலுவாக முன்னெடுப்போம் என
மக்களவைத் தேர்தல்: தாக்கத்தை ஏற்படுத்துமா உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான போராட்டம்?

உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ள விவசாயிகள், மக்களவைத் தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை வலுவாக முன்னெடுப்போம் என அறிவித்துள்ளதால் 7 மாவட்டங்களில் இந்தப் பிரச்னை ஆட்சியாளர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.   

தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றாலை மற்றும் சோலார் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அந்த மின்சாரத்தை மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் மூலம் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்கள் வழியாக சத்தீஸ்கர், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  

இதற்காக ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மின்நிலையம் திருப்பூர் மாவட்டம், புதுப்புகளூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.  இதற்காக தமிழகம் முழுவதும் 30 உயர் மின் கோபுரப் பாதைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.   முதல்கட்டமாக இப்போது 9 மின்பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மின்பாதைகள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் வழியே கொண்டுசெல்லப்பட இருப்பதால், மனிதர்களுக்கும், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் என்று விவசாயிகள் கடந்த 6 மாதங்களாகப் போராடி வருகின்றனர். 

விவசாயிகள் தொடர் போராட்டம்:   பூமிக்கடியில் கேபிள்களை அமைத்து, வெளிநாடுகள், நம் நாட்டு மாநகரங்களில் கொண்டுசெல்வதைப் போல மின்சாரத்தைக் கொண்டு போக வேண்டும் எனக் கூறும் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள்,  கருத்துக் கேட்புக் கூட்டம் உள்ளிட்ட எந்த ஒரு நடைமுறையையும் செயல்படுத்தாமல், இந்தத் திட்டத்தை அதிரடியாகச் செயல்படுத்துவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.   மின்பாதை செல்வதால் மனிதர்களுக்கோ, விவசாயத்துக்கோ எந்த  பாதிப்பும் இல்லை என்று   அதிகாரிகள் கூறி வருகிறார்கள். இதனால் கொதித்தெழுந்த உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம், உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின்பாதைகளுக்கு அருகில் அல்லது அடியில் வசிப்பதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும், உயர்மின் கோபுரங்களை விவசாய பூமியில் அமைப்பதால் அதன் மதிப்பு குறைவதில்லை என்றும் நிரூபிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

100 மீட்டர்  அகலத்துக்கு நிலம் பயன்படாது:    இதுகுறித்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த வி.பி.குணசேகரன் தெரிவித்ததாவது:   தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வேளாண் விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மின் வழித்தடங்கள் அமைக்கப்படுவது அவசியம் என்ற போதிலும், அதற்காக முதன்மைத் தொழிலான வேளாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானதாகும்.  திருப்பூர் மாவட்டம், புதுப்புகளூர் முதல் ராய்கர், திருவலம், மைவாடி, அரசூர், இடையர்பாளையம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு பவர் கிரிட் நிறுவனத்தின் மூலமாக உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் அரசூர் முதல் ஈங்கூர் வரை, மைவாடி இணைப்புத் திட்டம், ராசிபாளையம் முதல் பாலவாடி வரை என பல்வேறு உயரழுத்த மின் பாதை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   இந்த மின் பாதைத் திட்டங்களின் பெரும் பகுதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை.  உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் சுமார் 100 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

அந்த நிலங்களை விவசாயம் செய்யவோ, கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்காகவோ, ஆழ்துளை கிணறுகள் அல்லது கிணறுகள் அமைக்கவோ பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வேளாண் விளைநிலங்களின் மதிப்பு குறைவதுடன், பாகப் பிரிவினையில் சிக்கல்கள் ஏற்பட்டு உறவுகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன.   தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வேளாண் விளைநிலங்கள்தான் விவசாயிகளின் ஒற்றை சொத்தாகவும், வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் அவற்றையும் சிதைத்து விவசாயிகளின் சொத்து மதிப்பையும், வாழ்வாதாரத்தையும் குறைப்பது மிகப்பெரிய அநீதியும், மனித உரிமை மீறலும் ஆகும்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்பதுதான் கொடுமை.   மின்பாதை அமைக்கப்படும் நிலங்களுக்கு முழுமையான இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இழப்பீடு வழங்குவதில் முழுமையான வெளிப்படைத்தன்மையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இத்தகைய உயர் மின் அழுத்த திட்டங்கள் கேரளம் வழியாகவும் செயல்படுத்தப்படுகின்றன. அங்கெல்லாம் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் மின்சார கேபிள்கள் புதைக்கப்படுகின்றன.   புகளூர்- திருச்சூர் மின்பாதைத் திட்டத்தில் 40 கி.மீ நீளத்துக்கான பாதை சாலையோரம் பூமிக்கு அடியில்தான் செல்கிறது. அதுமட்டுமின்றி இந்தப் பாதைகள் சென்னை, சேலம், மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களைக் கடந்து செல்லும் போது கூட பூமிக்கு அடியில்தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன.

இதேபோல், ஒட்டுமொத்த மின் பாதைகளையும் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்தலாம். இதனால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.  மின் பாதைகள் மட்டுமின்றி, கேரளத்திலிருந்து கர்நாடகத்துக்கு எரிவாயுவை கொண்டு செல்வதற்கான குழாய்ப் பாதையும் வேளாண் விளைநிலங்கள் வழியாகத்தான் அமைக்கப்படுகின்றன. இதனால் சேலம், கோவை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.   நாட்டுக்கு வளர்ச்சியும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்காக விவசாயத்தை பலி கொடுக்கக்கூடாது. ஏனெனில், வளர்ச்சி பொருளாதாரம் சார்ந்தது என்றால் விவசாயம் புனிதமானது ஆகும். வளர்ச்சி பற்றி பேசுவோர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தேர்தல் மூலம் வலிமையை உணர்த்துவோம்:   மக்களவைத் தேர்தல் மூலம் ஆட்சியாளர்களுக்கு எங்கள் பலத்தை உணர்த்துவோம் என்கின்றனர் கூட்டியக்க நிர்வாகிகள். 

இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:  திமுக தனது தேர்தல் அறிக்கையில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளது. ஆனால் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அதுகுறித்து எதையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் உயர் மின் கோபுரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் போராட்டம் நடத்திய கூட்டியக்க நிர்வாகிகள் 12 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் உள்ளனர்.    கடந்த 4 மாதங்களுக்கு மேல் விவசாயிகள் போராடிவரும் நிலையில், மக்களவைத் தேர்தல் முடியும் வரை திட்டத்தை தொடரக்கூடாது.

அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துகொள்ளலாம் என விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைக்கும் அரசு செவி மடுக்கவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சிறையில் அடைத்துள்ளது.   அரசின் செயல்பாடுகள் விவசாயிகளை கொதிப்படையச் செய்துள்ளது. இதனால் தேர்தல் முடிவுதான் எங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும் எனக் கருதுகிறோம். இதனால் ஆட்சியாளர்களுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளோம் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com