பேராசிரியர்கள் நியமன முறைகேடு புகார்: வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, சென்னை வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை


பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, சென்னை வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இது குறித்து சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் மதுரையில் ஒரு கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் கடந்த 2017-ஆம் ஆண்டு உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.  பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் ரூ. 30 லட்சமும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களிடம் ரூ.35 லட்சமும் லஞ்சமாக பெறப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
மேலும் பணி நியமனம் செய்யப்பட்டவர்களில், சிலர் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்குரிய கல்வித் தகுதியைப் பெறவில்லை எனவும், ஆனால் வக்பு வாரிய நிர்வாகிகள் சிலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 
இதேபோல ஊழியர்கள் நியமனத்திலும் லஞ்சம் பெறப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.  இது தொடர்பாக மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், முறைகேடு குறித்து விசாரிக்க சிபிஐக்கு  உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்த முறைகேட்டு புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதன் முதல் கட்டமாக கடந்த வியாழக்கிழமை ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் வசிக்கும் வக்பு வாரியத் தலைவர் அன்வர்ராஜா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்த அன்வர்ராஜாவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னையில் சோதனை: இதன் தொடர்ச்சியாக சென்னை மண்ணடி ராஜாஜி சாலையில் உள்ள வக்பு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை சோதனை நடத்தினர். அங்கு சுமார் 5 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.  இச் சோதனை, அங்கிருந்த குறிப்பிட்ட சில அறைகளைத்தவிர மற்ற  அறைகளில் நடைபெறவில்லை என்றும் சோதனையில் முறைகேடு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com