தமிழ்நாடு

மக்களவை, பேரவை இடைத் தேர்தல்கள்வேட்புமனு தாக்கல்:  நாளை கடைசி

DIN

தமிழகத்தில் மக்களவை, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு  செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) கடைசி நாளாகும். மக்களவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 254 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு இரண்டு நாள்களே எஞ்சியுள்ள நிலையில், மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவை இடைத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள்,  சுயேச்சைகள் என பலரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இரண்டு நாள்கள் விடுமுறை: கடந்த வெள்ளிக்கிழமை வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படவில்லை. இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு,  திங்கள்கிழமை (மார்ச் 25) முதல் வேட்புமனு பெறும் பணிகள் மீண்டும் தொடங்குகின்றன. வேட்புமனு தாக்கலுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) கடைசி நாளாகும்.
இதுவரை எத்தனை பேர்?: கடந்த நான்கு நாள்களில் மட்டும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட 254 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 218 ஆண்களும், 35 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். இதேபோன்று, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட 72 வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்களில் 54 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
நாளை கடைசி நாள்: வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமையே (மார்ச் 26) கடைசி நாள் என்பதால் பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 
வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்ய உள்ளனர். இதனால், வேட்புமனுக்களின் எண்ணிக்கை அதிகளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனுக்கள் பரிசீலனை: மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிட தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 27-இல் நடைபெறவுள்ளன. இதன்பின், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல்: வேட்பு மனுக்கள் வாபஸ் பெறும் நடவடிக்கைக்குப் பிறகு வரும் 29-ஆம் தேதி மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக அறிவிப்புப் பலகையில் இறுதி வேட்பாளர்கள் குறித்த
விவரங்கள் ஒட்டப்படும்.
பிரசாரம் சூடுபிடிக்கும்: மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, தமிழகத்தில் பிரசார களம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ஏற்கெனவே, அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
இறுதி வேட்பாளர் பட்டியலுக்குப் பிறகு கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் மேலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT