மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் (கோப்புப் படம்)
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் (கோப்புப் படம்)

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு இலவச மற்றும் கட்டண அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு இலவச மற்றும் கட்டண அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தையொட்டி திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கோயிலில் கிழக்கு மற்றும் தெற்கு, தெற்கு சித்திரை வீதி வடக்காடி வீதி, மேற்கு ஆடி வீதிகளில் வெப்பத்தை தணிக்கும் பொருட்டு தகர பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

வடக்காடி வீதியில் திருக்கல்யாண மேடையில் 200 டன் குளிர்சாதன பெட்டி மற்றும் 16 ஏர்கூலர் பெட்டிகளும் அமைக்கப்படுகின்றன. திருக்கல்யாணத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3200 பேர் இலவசமாக தெற்கு கோபுர வாசலில் அனுமதிக்கப்படுகின்றனர். ரூ.500 கட்டணச்சீட்டின் அடிப்படையில் 2300 பேர் மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். ரூ.200 கட்டணச் சீட்டின் அடிப்படையில் 3,200 பேர் வடக்கு கோபுரத்தின் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.  கட்டணச்சீட்டு உள்ள பக்தர்கள் காலை 6.30 மணி முதல் 8 மணிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டினர் திருக்கல்யாணத்தை காண வடக்காடி வீதியில் உள்ள திருவள்ளுவர் கழகத்தில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி திருக்கல்யாணத்துக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட மாட்டாது. திருக்கல்யாணத்தை பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக  வடக்காடி வீதி, மேற்காடி வீதி, சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், புதுமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 20 எல்இடி திரைகள் அமைக்கப்படுகின்றன. திருக்கல்யாணத்துக்கு வரும் பக்தர்கள் காலணிகளை பாதுகாக்க பழைய காவல் ஆணையர் அலுவலகம், குன்னத்தூர் சத்திரம் பின்புறம், வடக்கு, கிழக்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி உள்பட 6 இடங்களில் காலணி பாதுகாக்கும் இடங்கள் அமைக்கப்படுகின்றன. திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்தை காண வரும் பக்தர்களுக்கு போதிய இடங்களில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்தின்போது நான்கு கோபுர வாயில்கள் மற்றும் 16 கால் மண்டபத்தின் கலைக்கூடம் அருகிலும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும் மொய் பணம் பெற்றுக் கொள்ளப்படும். திருக்கோயில் பெயரில் வேறு யாரும் மொய் வசூலித்தால் 0452-2344360 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்கள் பொது தரிசனம் செய்வதற்கு காலை 10.45 மணியில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு கோபுர வாயில்கள் வழியாக வந்து தரிசிக்கலாம். 

திருக்கல்யாணத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் தரப்பில் பிரசாதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com