தமிழ்நாடு

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் 

DIN

சென்னை: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதன் காரணமாக மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் புதனன்று வாபஸ் பெறப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊழியர்கள் நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒழுங்கீனமாக செயல்பட்டதாக  குற்றம்சாட்டி 8 பேரை மெட்ரோ ரயில் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. 

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியது: நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுதல், பணியில் ஒழுங்கீனமாக செயல்படுதல், நிறுவனத்துக்கு எதிரான தவறான தொடர்பு  போன்ற காரணங்களால், 2 போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், 3 தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்கள்,  நிலையக் கட்டுப்பாட்டாளர்கள் இருவர், ஒரு இளநிலை பொறியாளர் என 8 பேர் கடந்த டிசம்பரில் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணை அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த விளக்கம் திருப்தியில்லாததால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

இதற்கிடையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்தில் மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களில் ஒரு பிரிவினர் திங்கள்கிழமை  மாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக  ஊழியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்பட பல்வேறு நிலையங்களில்  5 முதல் 15 நிமிஷம் வரை மெட்ரோ ரயில்  சேவை பாதித்தது. அதன்பிறகு, ரயில் சேவை குறைக்கப்பட்டது. 

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக பணியாளர்கள் கூறியது: நிரந்தரப் பணியாளர்களான தங்களுக்கு நிர்வாகம் பல்வேறு வழிகளில் சிரமத்தை கொடுக்கிறது. ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு, படி உயர்வு வழங்குகிறது. ஆனால், எங்களுக்கு குறைவான ஊதியமே வழங்குகிறது என்றனர்.

இவர்களது பிரச்னையை தீர்க்கும் பொருட்டு செவ்வாயன்று நடைபெற்ற  முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை . பேச்சுவார்த்தை புதனன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

அதேசமயம் மெட்ரோ ரயில் சேவையினை திட்டமிட்டு நிறுத்தியதாக, மூன்று  ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக  புதன் மதியம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மெட்ரோ ரயில் சேவையினை திட்டமிட்டு நிறுத்தியதாக மனோகரன், பிரேம் குமார் மற்றும் சிந்தியா ரோஷன் ஆகிய மூன்று  ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திங்களன்று நடந்த போராட்டத்தின் போது இவர்கள் முவரும் மெட்ரோ தலைமைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, அப்போது பாதைகளில் இயங்கி வந்த மெட்ரோ ரயில்களுக்கு தவறான மற்றும் ஆபத்தான சிக்னல்களை அளித்துள்ளனர்.  எனவே அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதன் காரணமாக மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் புதனன்று வாபஸ் பெறப்பட்டது.

தொழிலாளர் நல ஆணையர், மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் ஆகிய தரப்பினர் புதன் மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் பலன் ஏற்பட்டது. அதைத் தொடந்து மெட்ரோ ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தம் புதன் இரவு வாபஸ் பெறப்பட்டது. மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT