தண்ணீரைத் தேடி பூங்காவிலிருந்து வெளியேறி உயிரிழக்கும் புள்ளிமான்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் சூழலில் கங்கைகொண்டான் பூங்காவில் உள்ள புள்ளிமான்கள் தண்ணீருக்காக வேலிகளைத் தாண்டி  வெளியேறுவதால்
திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் தண்ணீரைத் தேடி அலையும் புள்ளிமான்கள்.
திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் தண்ணீரைத் தேடி அலையும் புள்ளிமான்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் சூழலில் கங்கைகொண்டான் பூங்காவில் உள்ள புள்ளிமான்கள் தண்ணீருக்காக வேலிகளைத் தாண்டி  வெளியேறுவதால் நாய்களிடம் கடிபட்டும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 
திருநெல்வேலி மாவட்டம்,  கங்கைகொண்டானில் வனத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மான் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் அரிய வகை புள்ளிமான்களும், மிளாக்களும் பராமரிக்கப்படுகின்றன. தொடக்கத்தில் குடிநீர் வசதி, தீவன வசதியோடு, நாலாபுறமும் வேலியிட்டு பராமரிக்கப்பட்டது. பூங்காவின் மேற்கு எல்லையையொட்டி நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் நீண்ட சுவர் கட்டப்பட்டது. மற்ற பகுதிகளில் முள்வேலி அமைக்கப்பட்டது. கங்கைகொண்டானில் சுமார் 400-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் இருப்பதாகவும், அவற்றில் பெண் மான்களே அதிகமெனவும் கணக்கெடுப்பில் கூறப்பட்டது. ஆனால், இப் பூங்காவில் உள்ள பாதுகாப்பு  வேலிகள் போதிய பராமரிப்பின்றி  சேதமடைந்துள்ளதால்,  தண்ணீருக்காக புள்ளிமான்கள் பூங்காவை விட்டு வெளியேறுவதும் அதிகரித்தது.
மான்களின் முக்கிய உணவாக நீர்க்கருவை மரங்களின் காய்களே உள்ளன. அதேநேரத்தில் தண்ணீர்த் தேவை முழுமையாக பூர்த்தி  நடவடிக்கை எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தடுப்புகளைத் தாண்டி வெளியேறும் மான்கள், குடிநீர் தேடி கிராமங்களுக்குள்  புகுந்துவிடுகின்றன.  தண்ணீர் தேடி வேலிதாண்டிச்செல்லும் புள்ளிமான்கள், நாய்களிடம் சிக்கியோ, வாகனங்களில் அடிபட்டோ உயிரிழக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட மான்கள் கங்கைகொண்டான் பூங்காவில் இருந்து வெளியேறியுள்ளன. அவற்றில் சில மான்கள் காயத்துடன் பொதுமக்கள் மற்றும் வனத் துறையினரால் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மான்கள் விபத்துகளுக்கும், நாய்கடிக்கும்  பலியாகியுள்ளன.
இதுகுறித்து அபிஷேகப்பட்டி பகுதி மக்கள் கூறுகையில், கங்கைகொண்டான் பூங்காவில் இருந்து தண்ணீர் தேடி வெளியேறும் மான்கள் தென்கலம், கானார்பட்டி, அபிஷேகப்பட்டி, ராஜவல்லிபுரம், கங்கைகொண்டான், ராஜபதி சுற்றுவட்டார பகுதி மலைக்குன்றுகளில் பதுங்குகின்றன. வயல்களில் தண்ணீர் கிடக்கும்போது அதனை பருகும் மான்கள் பயிர்களையும் சேதப்படுத்துகின்றன. நிகழாண்டில் வறட்சி அதிகமாக உள்ளதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்கள் வறட்சியின் பிடியில் உள்ளன. ஆகவே, நீர் கிடைக்காமல் மான்கள் தவித்து வருகின்றன.
மான்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வனத் துறையினர் எப்போதும் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும். மான்கள் தப்பி வந்து இறப்பதைத் தவிர்க்க கிராமங்களில் இளைஞர் குழுக்களுக்கு வனத் துறையினர் பயிற்சி அளித்து, உயிருடன் பிடித்து மீண்டும் பூங்காவில் விடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com