புதையுண்ட தமிழகம்

அத்தியாயம் 44 - வரலாற்றில் நவீன கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை (பொ.ஆ. 1500 - 1900)

ச. செல்வராஜ்

முந்தைய அத்தியாயத் தொடர்ச்சி

மனோரா

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர், கலைகளின் இருப்பிடமாகவும் திகழ்ந்து வருகிறது. வளம் பல கொழிக்கும் தஞ்சைப் பகுதியை பொ.ஆ. 7-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு வரை முத்தரையர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களுக்குப் பின் சோழர்கள் பொ.ஆ. 850 முதல் 1256 வரையிலும், அவர்களைத் தொடர்ந்து பாண்டியர்களும், விஜயநகர மன்னர்களும், பொ.ஆ 13 – 14-ம் நூற்றாண்டில் ஆட்சி செலுத்தியுள்ளனர். இவர்களை அடுத்து, தஞ்சை நாயக்கர்கள் பொ.ஆ. 1541-1674 வரையிலும் ஆட்சி புரிந்து பல வகையிலும் தஞ்சைக்குப் புகழ் சேர்த்துள்ளனர். கட்டடக் கலைக்கும், கலை இலக்கிய வரலாற்றுக்கும் இந்த அரசமரபினர் செய்துள்ள தொண்டு, இன்றும் உலக மக்களை வியக்கச் செய்கிறது. இவர்கள் தஞ்சை பெரியகோயிலைப் புதுப்பித்தும், சில புதிய கட்டடங்களைக் கட்டுவித்தும் கட்டடக் கலைக்குத் தங்களது பங்கை ஆற்றியுள்ளனர்.

மராட்டியர்கள் கட்டிய அரண்மனைப் பகுதி

மராட்டிய மன்னர்களின் தர்பார் மண்டபம் (அரசவை) - தஞ்சாவூர்

(குறிப்பு: முதல்படம் - மிகவும் பழமையானது. மராட்டியர்கள் வைத்திருந்த நிலை. இரண்டாவது படம் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையினரால் புனரமைத்துப் பாதுகாக்கப்பட்டு வரும் தற்போதைய நிலை).

மனோரா அமைவிடம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சரபேந்திரராஜன்பட்டினம் என்னும் ஊரின் அருகில் காணப்படும் கடற்கரையில் மனோரா கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி, வங்கக் கடலோரம் இயற்கை எழிலோடு திகழ்கிறது. மனோரா என்பது மினார் என்ற சொல்லில் இருந்து வந்தது. மினார் என்பது ரோம் நாட்டிலுள்ள டிராகனைப் போன்றது என்று கட்டடக் கலை நிபுணர் பெர்குசன் கூறுகிறார். தூண் போன்ற உயரமான கட்டட அமைப்பைக் கொண்டது இவ்வகைச் சின்னம். குறுநில மன்னர்களைப் போன்ற மினார் அரச மரபைச் சார்ந்த ஏம்பா என்ற மன்னரால், இரண்டு மினார்கள் (பொ.ஆ. 1425-64), அவர்களின் வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. இதனை வெற்றித்தூண் என்று அழைத்தனர். மினார் அரச பரம்பரையினரால் கட்டப்பட்டதால், அவற்றை அவர்களது பெயராலேயே அக்கட்டடக் கலைக்குப் பெயர் வைத்து அழைத்துள்ளனர். அதைப் போன்றதுதான் தஞ்சை மனோராவும். மினாரைப் போன்றும், அவர்கள் எழுப்பிய வெற்றித்தூண் அமைப்பிலும் இங்கு இந்த நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது. இதுவும் ஒரு  வெற்றித் தூணாகவும் அக்காலத்திய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்துள்ளது.

பட்டுக்கோட்டை அருகே, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிச் சின்னமாக இருப்பது இந்த மனோரா. இது கடற்கரை ஓரம் அமைந்த ஒரு சிறிய கோட்டையாகும். மதில்களால் சூழப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டது. மராட்டியர்களின் கலைப்பாணிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இது ஒரு நினைவுச் சின்னம் ஆகும். 22.30 மீட்டர் உயரம் உடைய இக்கட்டடம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டதாகவும், அறுகோண அமைப்பிலும் கட்டப்பட்டுள்ளது. இதைச்சுற்றிலும் பெரிய அகழி ஒன்றும், அதையடுத்து மதில்சுவரும் காணப்படுகிறது.

இந்தப் புகழ்வாய்ந்த நினைவுச் சின்னத்தை இரண்டாம் சரபோஜி மன்னர் கட்டியுள்ளார். இதனை எதற்காக கட்டினார் என்ற காரணத்தை அவர் கல்வெட்டாகப் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் மராட்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்தபோது தமிழர், தெலுங்கர், இஸ்லாமியர், மராட்டியர், ஆங்கிலேயர் என பலரும் இங்கு கலந்து வாழ்ந்ததால், அவரகள் அனைவரும் நன்கு அறியும் வண்ணம் இந்த ஐந்து மொழிகளிலும் கல்வெட்டை வெட்டி, கோட்டையின் நான்கு பக்கங்களிலும் பதித்து வைத்துள்ளார். இரண்டாம் சரபோஜி பல மொழிகளைக் கற்ற பன்மொழி வித்தகர். ஐந்து மொழிகளிலும் தன் நேரடிப் பார்வையில் இந்தக் கல்வெட்டுகளை அவர் பதித்துள்ளார்.

தமிழ் கல்வெட்டின் வாசகம்

இங்கிலீசு சாதியர் தங்கள் ஆயுதங்களினாலமைந்த

நேய சந்தோஷங்களையும் போனபாற்தெயின்

தாழ்த்தப்படுதலையும் நினைவுகூரத்தக்கதாக

இங்கிலீசு துரைத்தனத்தின் சினேகிதரும்

படைத்தலைவருமாகிய தஞ்சாவூர் சீமை மகாராசா

சத்ரபதி சரபோசி மகாராசா அவர்கள் இந்த

உப்பரிகையைக் கட்டிவைத்தார் – சகம் 1736”

இவ்வாறு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், ஏதோ ஒரு குறுநில மன்னர்களும் பாளையங்களும் ஆட்சிபுரிந்தாலும், மக்கள் நிம்மதியாக இருந்தனர் என்றால், அதுவே சிறந்த ஆட்சி என மக்களும் சமுதாயமும் கருதின. இருப்பினும், சிறுசிறு மன்னர்கள் ஆட்சி செய்யும்போது பல இடையூறுகளை மக்களும் அரசும் சந்திக்க நேரிடுகிறது. இதன் வாயிலாக பிரிவினையும், ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு தகுதியற்றவர்கள் ஆட்சியை பிடிப்பதற்கும் வழிவகுக்கிறது. இதன் விளைவு, மக்களும் அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும் பாதிக்கிறது. இவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு முன்னர் ஏற்பட்ட வளர்ச்சியும், சமுதாய அமைப்பும், இங்கு மேற்கொண்ட அகழாய்வுகள் வாயிலாக வெளிப்படுத்துகின்றது.

வரலாற்றின் நவீன காலத்தில் அகழாய்வுகள் காட்டும் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை

சோழர்கள் ஆட்சிக்குப் பின் வந்த தஞ்சை நாயக்கர்களும், மராட்டியர்களும், சோழ மன்னர்கள் விட்டுச் சென்ற இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டு, அதனைப் புதுப்பித்தும் மாற்றியும் தங்களது அரசை நடத்திச் சென்றுள்ளனர். ஏனெனில், தஞ்சையிலும், மதுரையிலும் புதியதாக அரண்மனைப் பகுதிகளோ, வேறு குறிப்பிடும்படியான சான்றுகள் ஏதும் கிடைக்காததாலேயே இம்முடிவை எடுக்க வேண்டியதாகிறது. தஞ்சை பெரிய கோயிலில் சோழர் ஓவியத்தின் மேல் விஜயநகர காலத்து ஓவியம் இருப்பதை கண்டறிந்ததை மறுக்கமுடியாது.*1 இது எதைக் காட்டுகிறது எனில், ஒரு ஆட்சி முடிவுற்றபோது அதனைக் கைப்பற்றிய அரசு அப்பகுதிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது என்பதையும், முன்னர் நடைபெற்ற ஆட்சியின் சுவடுகளை மறைக்கப் பார்க்கிறது என்பதுதான்.

அடுத்து, மராட்டா தர்பார் மண்டபத்தில் காணப்படும் சுவற்றில் நாயக்கர் கால ஓவியம் இருப்பதை தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளிக் கொணர்ந்ததை சான்றாகக் கூறலாம். தொல்லியல் துறை சார்பாக அப்போதைய மாவட்டத் தொல்லியல் அலுவலரும் தற்போதைய புதையுண்ட தமிழகம் ஆசிரியருமான செல்வராஜ் அவர்கள் இப்பணியை 1979-ல் மேற்கொண்டார். இப்பணியில் விஜயநகர ஓவியங்களின் மேலேயே மராட்டியர் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததை சிறிது சிறிதாக நவீன அறிவியல் முறைப்படி வெளிக்கொணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் ஆட்சி மாற்றங்களின்போது நிகழ்வனவற்றுக்குச் சான்றாகக் கொள்ளலாம்.

மேலும், அரண்மனைப் பகுதிகளை கலைக்கூடம், நாயக்கர் மண்டபம் என்றே இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஏனெனில், இம்மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அதில் காணப்படும் சுதை உருவங்களும், கட்டட அமைப்பும், மதுரை நாயக்கர் மகாலை ஒத்துக் காணப்படுவதையும் இங்கு குறிப்பிடலாம். ஒருவருக்குப்பின் ஒருவராக ஆட்சி மாறினாலும், அரண்மனைப் பகுதிகள் மாறவில்லை. அதற்குப் பதிலாக, அரண்மனைப் பகுதிகளில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதே உண்மை.

பொ.ஆ. 14 - 19 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த ஜமீன்களும், பாளையக்காரர்களும் தங்களுக்கென ஒரு அரண்மனையைக் கட்டிக்கொண்டனர். இவர்கள் உள்நாட்டுக் கட்டடக் கலைஞர்களையும், அயல்நாட்டுக் கட்டட நிபுணர்களையும் வரவழைத்து, தனக்கென ஒரு தனி அமைப்பில் அனைத்து வசதிகளுடன் தங்களது அரண்மனையை அமைத்துள்ளனர். குறிப்பாக செஞ்சி, பாஞ்சாலங்குறிச்சி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அடுத்து, தஞ்சையில் மராட்டியர்கள் எழுப்பிய சார்ஜா மாடி, மனோரா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சார்ஜா மாடி – ஏழு நிலை மாடம்

தஞ்சை ஆயுத கோபுரம் - தஞ்சை

(தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்)

முதலில் உள்ள சார்ஜா மாடி, ஏழு அடுக்குகளைக் கொண்ட அரண்மனை ஆகும். அடுத்துள்ளது, அவர்கள் காலத்திய ஆயுத கோபுரம். பெயருக்கு ஏற்ப, ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக நன்கு திட்டமிட்டு வட்டவடிவமாக இது அமைக்கப்பட்டுள்ளது.*2 இது எளிதில் யாரும் நுழைந்துவிடமுடியாத அளவுக்குப் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மனோரா, வெற்றியின் நினைவுச் சின்னமாக சரபோஜி மன்னரால் எழுப்பப்பட்டது. இவை மராட்டியர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டு.*3

தமிழகத்தில் இதுபோன்று (பொ.அ. 14-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 19-ம் ஆண்டுவரை) தனித்தனி அரசுகள் ஆட்சிபுரிந்தன. அவர்கள் பின்பற்றிய சமயத்தையே மக்களையும் பின்பற்றச் செய்தனர். இதன் விளைவாக, கிராம தெய்வங்கள் பல தோன்றின. சைவமும், வைணவமும் பெரிய அளவில் பின்பற்றப்பட்டாலும், ஆங்காங்கே சிறுசிறு கோயில்களும் எழுப்பப்பட்டன. அவற்றில் ஆஞ்சநேயர் உருவச் சிலை குறிப்பிடத்தக்கது. இத்தெய்வத்தை காவல் தெய்வம் என்றும், கிராமத்தைக் காக்கும் கடவுள் என்றும், ஊரின் நான்கு எல்லையிலும், பெரிய அளவிலான ஆஞ்சநேயர் சிற்பத்தை வடித்து அதன் வழியாக வைணவத்தை பரவச் செய்தனர்.*4

தமிழகத்தில் பொ.ஆ. 14-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 19-ம் நூற்றாண்டு வரை, பகுதிக்கு ஒருவராக பல்வேறு அரசுகள் ஆட்சி புரியத் துவங்கினர் என முன்னர் குறிப்பிடப்பட்டது. தெற்கே பாஞ்சாலங்குறிச்சியை வீரபாண்டிய கட்டபொம்மனும், ராமநாதபுரத்தை சேதுபதிகளும், மதுரையை ராணி மங்கம்மாளும், புதுக்கோட்டையை திருவிதாங்கூர் ஜமீன்களும், சிவகங்கையை மருது சகோதரர்களும், வடக்கே செஞ்சியை செஞ்சி மன்னர்கள், ஆர்க்காடு நவாபு, அடுத்து போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், தரங்கம்பாடியில் டேனிஷ்கள், இப்படித் தனித்தனியான வெவ்வேறுபட்ட இனமக்களின் ஆளுமையால், மக்கள், பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது.

இந்தக் காலக்கட்டத்தில், வணிகநோக்கத்துடன் ஆங்கிலேயரின் வருகை ஆரம்பித்தது. இவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் வணிக நோக்கத்தில் காலடி வைத்தவர்கள். தமிழகத்தை பொ.ஆ.18 – 19-ம் நூற்றாண்டு அளவில் முழுமையாக ஆதிக்கம் செய்தனர்.*5 இவ்வாறு, விஜயநகர மன்னர்கள் காலம் தொட்டு ஐரோப்பியர்களின் வருகை அதிகரித்தது. வணிகம் பொருட்டு இதனை அப்பொழுது ஆட்சிபுரிந்த மன்னர்களும் ஆதரித்தனர். இதற்குச் சான்றாகத்தான், தஞ்சை பெரியகோயில் விமானத்தில் மகரதோரணம் ஒன்றில் ஐரோப்பியரின் தலையைப் பதித்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாகவே அவ்வாறு செய்திருக்கின்றனர் எனலாம்.

தஞ்சை பெரிய கோயிலில் காணப்படும் ஐரோப்பியர் தலை அமைப்பு – மகரதோரணம் - விமானம்

மதுரை நாயக்கர்கள் ஆட்சியில் அரசரும், மக்களும், சமய வாழ்க்கையில் பெரிதும் ஆர்வம் காட்டினர். ஒவ்வொரு நாடும் பல மாகாணங்களாகவும், மாகாணம் பல ஊர்களையும் கொண்டு இருந்தது. நாயக்க மன்னர்கள் குடிநலத்தை உண்மையாகவே பேணி வந்தனர் எனலாம். மராட்டியர் காலத்தில், சைவ, வைணவத்தில் அதிக ஈடுபாடு கொண்டு மக்கள் திகழ்ந்துள்ளனர்.

அடுத்து, அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களின் அடிப்படையில் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலையைப் பற்றி காண்போம்.

விஜயநகர, நாயக்க மன்னர்களுக்குப் பின் மராட்டியர், ஆர்க்காடு நவாபு போன்ற மன்னர்கள் தமிழகத்துக்கு வந்ததால், அவர்களுடன் சில பழக்க வழக்கங்களும் இடம் பெறலாயின. அகழாய்வில் சுடுமண் புகைப்பான்கள், நவாப் காசுகள், வளையல்கள். இரும்புக் குண்டுகள், கல் குண்டுகள், வெடிமருந்துப் பெட்டி, ஈயக்கட்டிகள், பணியாரச் சட்டி, சிவப்பு நிற மட்கலன்கள், கண்ணாடிப் பொருட்கள், கண்ணாடி மதுக்குடுவைகள் என பல தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.*6 அவரவர் அச்சிட்ட காசுகள் வாணிபத்தில் கையாளப்பட்டது என்பதற்கு இக்காசுகள் சான்றாகின்றன.

சுடுமண் புகைப்பான்கள் தமிழகத்தில் பொ.ஆ. 14-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே அகழாய்வுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. புகைப்பழக்கம், புகையிலை போன்றவற்றை ராணுவத்தில் பணிபரியும் போர்வீரர்கள், பாளையக்காரர்கள் அதிகஅளவில் பயன்படுத்தியுள்ளதை கோட்டைகளிலும், துருகம் போன்ற இடங்களில், மேற்பரப்பு ஆய்விலும், அகழாய்விலும் கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம். குறிப்பாக, வடதமிழகத்தில் சுடுமண் புகைப்பான்கள் அதிக அளவில் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புகைப்பான்களைக் கொண்டு புகைப்பிடிக்கும் சிற்பங்களை ரெட்டியார்பாளையம் குளத்தில் காணப்படும் சிற்பத்தில் காணலாம்.*7 பொ.ஆ.17-ம் நூற்றாண்டில் இப்பழக்கம் அதிகரித்துள்ளது. இதனை வீரபத்ரதுர்க்கம், திருக்கோயிலூர், செஞ்சி, பாஞ்சாலங்குறிச்சி, மோதூர், தரங்கம்பாடி போன்ற பல அகழாய்வுகளிலும் கிடைத்துள்ளதைக் கொண்டு உணரலாம். இப்பகுதி குளிர்ப்பகுதி ஆனதால், இப்பழக்கம் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன போலும்.

தரங்கம்பாடி அருகே வானகிரியிலும், தரங்கம்பாடியிலும் மேற்கொண்ட ஆழ்கடல் அகழாய்வில், அதிக அளவில் கடலில் மூழ்கிய கப்பல்களின் உடைந்த பகுதிகள் பலவும் வெளிக்கொணரப்பட்டது. ஈயக்கட்டி (Lead Ingot), வெடிமருந்துப் பெட்டி (Gun Powder Box), ஆங்கில எழுத்துகள் அச்சு குத்திய ஈயக்கட்டிகள் (Inscribed Lead Ingots) பல சேகரிக்கப்பட்டன. அவற்றில் W.BLAKETT 1972 என்ற வாசகம் காணப்படுகிறது.*8 இதனைப் பார்க்கும்போது, தரங்கம்பாடிக்கு இறக்குமதிக்காக வந்த கப்பலில் இவை இருந்துள்ளதை உணரமுடிகிறது. எனவே, இங்கு கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் வழியாக, தரங்கம்பாடிக்கு வெடிப்பொருட்கள் வந்ததைக் கொண்டு இங்கு பல வெடிபொருட்கள் தயாரித்திருக்கலாம் என்ற கருத்து தெளிவாகிறது. மேலும் வெடிமருந்துப் பெட்டி ஒன்று காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அங்கு கிடைத்த கண்ணாடி மதுக்குடுவைகள், இவர்கள் மதுப்பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும், மது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்கின்றன.*9 மக்கள் அன்றாட உணவில் மாவுப் பொருட்களைப் பயன்படுத்தி உட்கொண்டுள்ளனர் என்பதை, பணியாரச் சட்டி, பீங்கான் தட்டுகள், பீங்கான் கோப்பைகள், பீங்கான் கெண்டி போன்றவற்றைக் கொண்டு குறிப்பிடலாம். நாகப்பட்டினம் அகழாய்வில் டேனிஷ் நாட்டு பீங்கான் புகைப்பான்களும், பீங்கான் தட்டுகளும், கிடைத்துள்ளன.*10 மக்கள் தம் உணவை மிகவும் உயர்தரமாகச் சமைத்து தட்டில் பரிமாறி உட்கொண்டுள்ளனர் என்பதும் இதன்மூலம் புலனாகிறது. தரங்கம்பாடி, பாஞ்சாலங்குறிச்சி அகழ்வுகளில் அதிக அளவில் காணப்பட்டது சீன தேசத்துப் பானை ஓடுகள்தான். எனவே, மக்கள் எவரையும் ஐரோப்பியரின் தாக்கத்தை விட்டுவைக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

இக்காலத்தில், தமிழகத்தில் கிறிஸ்தவம் அதிக அளவில் பரவத் தொடங்கியது. ஐரோப்பியர் அளித்த இலவசப் பொருட்கள், வறுமையில் வாடிய மக்களை வெகுவாக ஈர்த்தன. எனவே, அச்சமயம் தமிழகத்தில் எளிதாக அம் மதம் வளரத் துவங்கியது. ஆங்கிலேயருடன் போராட்டம் துவங்கியது. பாஞ்சாலங்குறிச்சியில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தனது தனித்துவத்தை நிலை நிறுத்திப் போராடினான். அவன் தனிமைப்படுத்தப்பட்டான். அவனது தலைநகரமான பாஞ்சாலங்குறிச்சியும் தகர்க்கப்பட்டது. அதன் அடித்தளங்களே அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டது.*11

தமிழகத்தில் பல தன்னாட்சிகள் தோன்றியதும், தன்னாட்சி பெற்ற நாட்டுடைமைக்காரார்களுக்கு இடையே ஒற்றுமை குறைந்தது. எனவே, தனித்து நின்று அயல்நாட்டாரை மையமாக கொண்ட அரசை வெல்ல முடியாமல், தமிழகத்தின் நவீன காலத்தில் அனைத்திலும் முன்னேற்றம் கொண்ட நேரத்திலும், ஒற்றுமையின்மையால் பாஞ்சாலங்குறிச்சி போன்ற பல சிறு பகுதிகள் இருந்த தடம் தெரியாமல் அழிந்துபோயின.

சமயங்களும், இனங்களும் பெருகின. சைவ, வைணவ தலங்கள் அதிகரித்தன. மக்களின் வாழ்வாதாரம் பெருகியபோதிலும், மனநிறைவை எட்டவில்லை என்றே கூறலாம். தனிமனிதனின் வருவாய் பெருகியது. தொழில் வளம், பன்னாட்டாரோடு போட்டி போட்டு வளர்ந்தது. பொ.ஆ. 14-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 19-ம் நூற்றாண்டு வரை, மண்டல (Regional) ஆதிக்கங்களும், அதை ஒட்டிய சமயங்களுமே பெருகின எனலாம். கிராம தெய்வங்களும் மூடநம்பிக்கைகளும் கூடவே வளர்ந்தன.

மேலும் பல நகரங்களில், தொடர் அகழாய்வுகளை மேற்கொண்டால், இன்னும் பல புதிய தகவல்களைப் பெறலாம். இங்கு கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும், அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையில், நம் முன்னோடிகள் விட்டுச்சென்ற சான்றுகளின் எச்சங்களைக் கொண்டும் வழங்கப்பட்ட தகவல்கள் என்பதை அனைவரும் அறிதல் வேண்டும். மேலும் பல அகழாய்வுகள் மேற்கொண்டால், இன்னும் பல உண்மைகள் நமது பாரம்பரிய கலாசாரத்தின் வெளிப்பாடுகள் தெள்ளத்தெளிவாக வெளிப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

***

மேற்கோள்கள்

1. அ. கிருஷ்ணமூர்த்தி, இமயமும் குமரியும், ‘‘S. Govindasamy, The Frescos of Paintings from Brahadeswarer temple at Tanjore” - “Round the central Shrine of this Temple runs a narrow prakara immediately under the Vimana. Curiously enough it is in this part of the temple that the paintings under consideration are found. So far, the west and north walls of the prakara have yielded many intensive panels, busts and torsos, while the south and west walls continue to be a sealed book. I belive that a further exploration of those walls will certainly bring many more painting to light”.

2. ச. செல்வராஜ், மனோரா, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, 2013.

3. மேலது.

4. ச. செல்வராஜ், ஆஞ்சநேயர் வழிபாடு, பாப்பாரப்பட்டி.

5. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும், பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. “இந்தியாவுக்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர்கள் போர்த்துகீசியராவர். வணிகம் பொருட்டே இந்திய நாட்டுக்கு வந்தவர்கள். தரங்கம்பாடியில் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகர்கள் கோட்டை ஒன்றைக் கட்டிக்கொண்டு தம் வணிகத்தை தொடங்கினர். இந்தியாவில் கொள்முதல் செய்த சரக்குகளை அவர்கள் மலேயா தீவுகளுக்கு ஏற்றிச் சென்று விற்பனை செய்தனர்”. பக். 442, 446.

6.  ச. செல்வராஜ் மற்றும் பரணன், மராட்டியர் அகழ்வைப்பகம், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை, பக். 14-15.

7. வீரபத்திரதுருகம், தினத்தந்தி, நாள் 4.12.1990.

8. S. Selvaraj, “Underwater Excavations at Poompuhar” Seminar on Recent Trends in Archaeology, on 7.2.2013 at Meenakshi College for Women (Autonomous) Chennai.

9. Ibid, pp. 3.

10. பா. ஜெயக்குமார், நாகப்பட்டினம் அகழாய்வு, ஆவணம் இதழ் - 20, 2009. பக். 118-119.

11. R. Nagasamy, Damilica, Department of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT