தாய் தெய்வங்கள்

கோயில்களில் தாய் தெய்வ உருவச்சிலைகள்!

ச. செல்வராஜ்

வரலாற்றுக் காலத்தின் துவக்க காலத்தில் பிரபலமாக இருந்த சக்தி வழிபாடு, கிராம தெய்வங்களாக இருந்து, பின்னர் கோயில்களில் வழிபாட்டுத் தெய்வங்களாக உருவெடுத்தன. கட்டடக் கலை வளர்ச்சியின் பயனாக கோயில்கள் தோன்றின. சமூகத்தில் உயர்ந்தோர்களால் கோயில்கள் எழுப்பப்பட்டு அதனை வழிபாட்டு இடமாக மாற்றினர். அதுபோன்ற இடங்களில் முதன்மைத் தெய்வங்கள் இடம்பெற்றன. கிராமத் தெய்வங்களே முதன்மைத் தெய்வங்களாக வழிபடப்பட்டன. பின்னர், அரசு வழிமுறைகள் தோன்றின.

மன்னர்கள் தாங்கள் வழிபட, தங்களுக்கு ஏற்ப தெய்வங்களை அமைத்துக்கொண்டனர். அவற்றில் பல்லவர்கள் காலத்தில் அம்மன் வழிபாடு, குறிப்பாக மகிஷாசுரமர்த்தினி, துர்காதேவி போன்றவை அதிக அளவில் வழிபாட்டில் இடம்பெறலாயிற்று. சைவமும் வைணவமும் தழைத்தன. பல்லவர்களால் எழுப்பப்பட்ட கோயில்களில் அம்மனுக்குத் தனியிடமும், அதற்கான காரணங்களும், கதைகளும் நிறைந்து காணப்பட்டன. குறிப்பாக, தாய் தெய்வ வழிபாட்டைச் சிறப்பிக்கும் வகையில், கிராமத் தெய்வங்களுக்கும் பொருந்தும், குறிப்பாக தீய்ப்பாய்ந்த அம்மன் உருவத்தைக் குறிப்பிடலாம். திரௌபதியம்மன் போன்றவற்றை இதிகாசங்களோடு ஒப்பிட்டும் கதைகள் புனையப்பட்டு கூறப்பட்டுள்ளது.

வைதீகம் முழுமையாகத் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தாய் தெய்வங்கள், சிவனின் மனைவியாகவும், திருமாலின் தங்கையாகவும் ஆக்கப்பட்டனர். எனினும், தாய் தெய்வத்தின் தனித்தன்மையை முற்றிலும் சிதைக்க இயலவில்லை. சிவன், திருமால் ஆகிய பெருந்தெய்வக் கோயில்களில், அம்மன் சன்னதி என்றும், தாயார் சன்னதி என்ற பெயர்களுடனும் கோயில்களில் தாய் தெய்வங்கள் வலம் வந்தனர். பெரிய மற்றும் சிறிய தெய்வங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு தாய் தெய்வத்துடன் தொடர்புடையதாகவே அமைந்துள்ளதை காணமுடிகிறது. இத்தெய்வங்கள், (பெரிய) தலைமைத் தெய்வங்களின் துணைவியராகவோ, அன்றி தவிர்க்க முடியாத சக்தியாகவோ, ஒழுக்கத்தின் அடிப்படையிலும் உலக நியதிக்காகவும் அதனைத் தொடர்புபடுத்தி அமைத்துக்கொண்டனர் எனலாம். எனவே, பெருந்தெய்வங்கள் அமைந்துள்ள கோயில்களில் ஆண் தெய்வங்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நீலம், தாமரை ஆகிய மலர்களை ஏந்தியபடி காட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.*1.

சக்தியையும் ஆற்றலையும் தனித்தனியாக பிரித்துப் பார்த்தல் என்பது இயலாதது. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இதனை தெளிவுபடுத்த ஏற்பட்டதே அர்த்தநாரீஸ்வரர் திருஅவதாரம். சக்தியும் ஆற்றலும் இணைந்து செயல்படும்போதுதான் மக்கள் நன்மை அடைகின்றனர். எனினும், ஆண் துணையின்றி தனியாக அமைந்துள்ள தாய் தெய்வக் கோயில்களே தமிழ்நாட்டில் இன்றும் பெரும் ஆதிக்கத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளன. தாய் தெய்வங்கள் அனைத்தும் கையில் ஆயுதங்களை ஏந்தியுள்ளன என்பதே, இவற்றின் தனித்தன்மையாக இருக்கிறது. உதாரணமாகக் குறிப்பிட்டால், தில்லை நடராசப் பெருமானைக் குறிக்கும் சிதம்பரத்தில், தில்லைக்காளியே சிறப்பு பெற்றுத் திகழ்கின்றாள்.

தமிழகத்தில், பெருந்தெய்வக் கோயில்கள் பலவற்றில், குறிப்பாக சிவாலயங்களில், தந்தை தெய்வங்களைக் காட்டிலும் தாய் தெய்வத்துக்கே உயர்ந்த இடமும் மரியாதையும் வழங்கப்பட்டு வருவதைக் காணலாம். சான்றாக, கன்னியாகுமரியில் உள்ள குமரித் தெய்வம், திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்மன், மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மீனாட்சி அம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன், காஞ்சி காமாட்சி, தருமபுரி கோட்டைக்கோயில் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலில் கல்யாண காமாட்சி அம்மன் போன்றவற்றை சான்றாகக் குறிப்பிடலாம்.{pagination-pagination}

ஸ்ரீவத்சம்

பிரம்மா படைக்கும் தொழிலைக் கொண்டவர். அவரது துணைவி சரஸ்வதி, கல்விக் கடவுளாக விளங்குபவர். இவளது வாயில் நாவன்மையும் சொல்வன்மையும் குடிகொண்டுள்ளது. ஸ்ரீலட்சுமி, விஷ்ணுவின் துணைவி. ஸ்ரீவத்சம் என அழைக்கப்படுபவர். விஷ்ணுவின் மார்பில் குடிகொண்டவள். செல்வத்துக்கு அதிபதி. செல்வமும் மகிழ்ச்சியும் குடிகொண்டவள். உலகில் வாழ்வதற்கு செல்வமும் மகிழ்ச்சியும் அத்தியாவசியமானவை.

சிவனின் துணைவி பார்வதி தேவி, உமையம்மை என்றும் அன்போடு அழைக்கப்படுபவள். சாந்தமே உருவானவள். இவளது மறுஉருவமே காளி. தனது சுயவடிவத்தையும், உண்மையான உட்பொருளை வெளிப்படையாக எடுத்துக்காட்டும் உருவமே காளி. அமைதியாக அடங்கிக் கிடக்கின்ற தனது உள்ளுணர்வையும், அழிக்கும் ஆற்றலையும், சக்தியையும் படைத்தவள் என்பதை வெளிக்காட்ட எடுத்ததே, எப்போது தயார் நிலையில் இருக்கும் காளி அவதாரம். சக்தியை வழிபடுபவர்கள் எவ்வித சாதி, மத, இன, பாகுபாடு அற்றவர்கள் என்பதை சக்தியை வழிபடும் பக்தர்களிடம் காணலாம். இச்சக்தி அனைவருக்கும் பொதுவானது. அனைத்து ஜீவராசிகளும் அமைதியுடன் வாழ சக்தி வழிபாடு இன்றியமையாததாகிறது. காரணகாரியங்களுக்கு உட்படாதது சக்தி. அன்னை என்று போற்றப்படுபவளும் அவளே. ஞானப்பால் கொடுத்தவளும் அவளே. இன்னையின் வடிவமும் அரவணைக்கும் தன்மையையும் கொண்டவளே அன்னை உமையாம்பிகை. இவள் தீய சக்திகளைக் கண்டு கோபம் கொண்டு எழுந்தால்தான், அவளது உண்மையான உக்கிரத்தைக் காணமுடியும். அவளே காளி எனும் மகாசக்தி.

ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் அன்னை உமையவள்

சக்தியின் வடிவங்கள்

சக்தி மூன்று வடிவங்களில் காணப்படுகிறாள். அன்பானவள் மற்றும் அமைதியானவள்; ஆவேசமானவள் / ஆக்ரோஷமானவள்; அகோரமானவள். உமையன்னையின் உண்மை வடிவத்தையும் அவர் கொண்ட தோற்றங்களையும் இத்தொடரில் உரிய சிற்பங்களுடன் காணலாம்.

அமைதியான வடிவம்

அமைதியான வடிவில் காணப்படுபவள். மிகவும் அன்பானவளாகவும் அரவணைப்பும் கொண்டவராகவும் திகழ்பவள். இரண்டு கைகள் மட்டும் இருப்பவளாகக் காட்டப்படுபவள். இரண்டு கைகளில் ஒன்றில் தாமரை மொட்டு ஏந்தியவாறு காட்டப்பட்டிருக்கும். இறைவனுடன் இறைவி காட்சி அளிக்கும் இடத்திலும், மகிழ்வாக இருக்கும் இடத்திலும் இரண்டு கைகளே காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக, கோயில் சிற்பங்களில் கல்யாண சுந்தரேஸ்வரருடன் காணப்படும் உமையன்னையின் தோற்றத்தைக் குறிப்பிடலாம். இதுபற்றி பின்னர் விரிவாகக் காணலாம்.

ஆக்ரோஷமான வடிவம்

இறைவி, ஆக்ரோஷத்தடன் காணப்படும்போது, எட்டு முதல் பதினாறு கைகள் வரை காட்டப்பட்டிருக்கும். இதை வைத்தே, அம்மன் ஆக்ரோஷத்தடன் அமர்ந்துள்ளாள் எனக் கொள்ளலாம். அவ்வாறு அவள் ஆக்ரோஷம் அடையக் காரணம் என்ன? அவளது கைகளில் காணப்படும் ஆயுதங்கள் என்னென்ன? இவற்றைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். எங்கெங்கு அம்மன் ஆக்ரோஷத்துடன் எழுந்தருளியிருக்கிறாள்? அதன் விளைவுகள் என்ன? அதனால் உலக மக்களுக்கு ஏற்படும் நன்மை / தீமைகள் என்பதை தாய் தெய்வங்களின் திருவுருவங்கள் மூலம் இத்தொடரில் அறிந்துகொள்ளலாம்.

அகோரமான வடிவம்

அம்மன் அகோரமாகக் காட்சி தருவது ஒரு சில இடங்களில் மட்டுமே. அவரைக் காளி என்று அழைப்பர். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை நீட்டி, ஆவேசமாக நெஞ்சு நிமிர்த்தி, முகத்தில் கோபக்கனல் தெறிக்க, நாக்கு வெளியே நீட்டியபடி, தனது வலது கையில் உள்ள சூலத்தை ஓங்கிக் குத்துவதற்கு ஏற்ப பிடித்தபடி காணப்படுபவள். இவளை அகோரக்காளி என்றழைப்பர்.{pagination-pagination}

சோழர்கள் காலத்தில், நிசம்பசுதனி என்ற கொற்றவையை வணங்கியே, அவ்வம்சத்து அரசர்கள் அனைவரும் தங்களது அனைத்து செயல்களையும் துவங்கியுள்ளதைக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அரசுகள் உருவாக்கத்தின்போது, பழந்தமிழர்களின் தாய் தெய்வம், கொற்றவை என்ற பெயரோடு வழங்கப்பட்டுள்ளதை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. அடுத்து, சோழர்கள் காலத்தைச் சேர்ந்த அம்மன் சிற்பங்கள், மகிஷாசுரமர்த்தினி சிற்பங்கள், துர்க்கையம்மன் போன்றவை குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளன எனலாம்.

விஜயாலய சோழன், தான் போருக்குச் செல்லும்முன், தான் குலதெய்வமாகப் போற்றி வணங்கும் நிசம்பசுதனி எனும் அம்மனை வணங்கியே சென்றுள்ளான். பல வெற்றிகளையும் பெற்றுள்ளான் என்பதற்குச் சான்றாக, தஞ்சாவூரில் காணப்படும் நிசம்பசுதனிக்காக எடுக்கப்பட்ட தனிக்கோயிலை இன்றும் காணலாம். இக்கோயிலில் காணப்படும் சிற்பம், காலத்தால் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தது*2. இக்கோயில், இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினரால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாத்து வரப்படுகிறது. அரசு உருவாக்கத்துக்குப் பின், ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான தாய் தெய்வக் கோயில்கள் இருந்திருக்கின்றன. இக்கோயில் இருந்த இடத்துக்கும் அதற்கு முன்னும் உள்ள முற்றத்துக்கும் அரசர்கள் வரிநீக்கம் செய்துள்ளனர். இவ்வாறு வரிநீக்கம் செய்யப்பட்ட நிலங்களை இறையிலி நிலம் என்று பெயரிட்டு அழைத்துள்ளனர்.

ஒவ்வொரு பகுதியிலும் பல்லவ, சோழ, பாண்டிய அரசுகள் காலத்தில், ஒன்றோ பலவோ தாய் தெய்வக் கோயில்கள் இருந்திருக்கின்றன. இதற்குச் சான்றாக, முதலாம் ராஜராஜன் கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்கல்வெட்டு குறிப்பிடுவதாவது - “மழநாடான …வளநாட்டுப் பாய்ச்சில் கூற்றத்துக் கீழ் பாலாற்றுத்துறையூர்” என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாலாற்றுத்துறையூர் என்ற ஊரிலிருந்த தாய் தெய்வக் கோயில்களை இந்தக் கல்வெட்டு பட்டியலிட்டுக் கூறுகிறது. மேலும், அக்கல்வெட்டில், கோயிலின் பெயரும் அங்கு அமைந்துள்ள தாய் தெய்வத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் உள்ள பிறக வாசகங்கள் - “இவ்வூர் பிடாரி புன்னைத்துறை நங்கைக்கோயிலுந் திருமுற்றமும், பிடாரி பொதுவகை ஊருடையாள் ஸ்ரீகோயிலுந் திருமுற்றமும், இவ்வூர்க்காடுகள் கோயிலுந் திருமுற்றமுமே. இவ்வூர் எறாடு கடக்கம் இவ்வூர்க்காளாபிடாரி குதுரைவட்டமுடையாள் ஸ்ரீகோயிலுந் திருமுற்றமும் இவ்வூர்க்குளமுங் கரையும் ஆக இறையிலி நீங்கு நிலன்…” என்று கல்வெட்டு குறிக்கின்றது. இதில் குறிப்பிட்டுள்ள அய்யனார் கோயில் தவிர பிற அனைத்தும் தாய் தெய்வக் கோயில்களே எனலாம். பொ.ஆ.11-ம் நூற்றாண்டின் துவக்கத்தில், தமிழ்ச் சமூகத்தில் தாய் தெய்வத்தை பெருந்திரளான மக்கள் எவ்வாரெல்லாம் போற்றியுள்ளனர் என்பதை இது உணர்த்துகிறது. அத்துடன், தமிழகத்தில் ஒரே ஊரில் பலவகைத் தாய் தெய்வங்களை வணங்கிவந்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. பல்வேறு சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் தொடர்ந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்பதே உண்மை.

தற்சமயம், இந்து சமய அறநிலையத் துறையால் பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று, சோழர்கள் காலம் தொட்டு விஜயநகர மன்னர்கள் வரை தமிழகத்தில் தொடர்ந்து வந்த மன்னர்கள், பெண் தெய்வங்களைப் போற்றி வணங்கி பல நன்மைகளைப் பெற்றுள்ளனர். அதன் காரணமாக, நாட்டு மக்களுக்கும் பல நற்காரியங்களை செய்து மகிழ்ந்துள்ளனர். அத்தகைய வலிமை படைத்த பெருமைக்குரிய தாய் தெய்வங்களையும், அதன் உருவ அமைப்புகளையும் நாம் அறிந்துகொண்டு, அதன் மகத்துவத்தையும் நம் முன்னோர்களின் கலைச்சிறப்பையும் கண்டு போற்றி மகிழ்ந்து வணங்குவோம்.

இனி, தொடர்ந்து வரும் வாரங்களில், பல்வேறு தாய் தெய்வத் திருவுருவங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி, கிராமங்கள்தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்று கூறுவார். அத்தகு கிராம மக்கள் போற்றி வணங்கிய தாய் தெய்வங்கள், சைவ, வைணவத் தெய்வங்களைவிட சக்தி வாய்ந்தவையாகத் திகழ்வதாகக் குறிப்பர். பெருங்கோயில்களில் காணப்படும் தெய்வங்கள் சாதாரண மக்களால் வழிபட பல தடைகள் காணப்பட்டன. அதன் விளைவாகத் தோன்றியவையே கிராமத் தெய்வங்கள். தாய் தெய்வங்கள் வழிபாட்டில் பெரும்பாலும் சடங்குகளே முதன்மை பெற்று விளங்குகின்றன. தாய் தெய்வங்கள் பெரும்பாலும் சடங்கியல் சமயச் சார்பையே (Ritualistic religion) வெளிப்படுத்துகின்றன*3.{pagination-pagination}

கிராமத் தெய்வங்களை தாழ்ந்தோர் அல்லது வசதியற்றவர்கள் வழிபடும் தெய்வமென தவறான கருத்து ஒரு காலகட்டத்தில் உருவானது. அதனைத் தகர்க்கவும், நாட்டின் பாரம்பரிய தெய்வங்கள் என்றும் உணர்த்தவே,  இத்தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள் என்று குறிப்பிட்டனர். அத்தகைய நாட்டார் தெய்வங்கள்தான், ஒவ்வொரு குடும்பத்துக்கும், அதாவது ஒவ்வொரு குழுக்கூட்டத்துக்கும் வழிகாட்டியாகத் திகழும் குலதெய்வம் ஆகும்*4.

மாரியம்மன், அங்காளம்மன், பட்டாளம்மன், கங்கையம்மன், பேச்சியம்மன், பெரியாண்டிச்சி அம்மன் என்று பல பெயர்களில் உலாவருபவையே குலதெய்வங்களாகவும் பொதுக்கடவுளாகவும் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் அதன் பொருள் உணர்ந்து, அவற்றின் செயல்பாடுகளை அறிந்து, அனைத்து தாய் தெய்வங்களின் திருவுருவங்களையும் தெள்ளத்தெளிவாக அறிந்துகொண்டு, அத்தாய் தெய்வத்தை பார்போற்ற, அதன் புகழ் சிறக்க எடுத்துரைப்போம். நம் பண்பாட்டின் தொன்மையையும் அதன் சிறப்பையும் அனைவரும் அரியச் செய்வோம்.

இத்தொடரில் நாம் பார்க்கப்போவது -

1. பழமையான நாகரிகங்கள் வெளிப்படுத்திய தாய் தெய்வ உருவங்கள்.

2. உலக நாடுகளில் காணப்படும் தாய் தெய்வ உருவங்கள்.

3. அகழாய்வுகள் காட்டும் சங்ககால சமயங்களும், தாய் தெய்வ உருவங்களும்.

4. பௌத்த, சமண சமயங்களில் காணப்படும் தாய் தெய்வங்கள்.

5. சிற்பங்களில் தாய் தெய்வ உருவங்கள்.

6. சோழர்கள் காலம்.

7. விஜயநகரர் காலம்.

8. நாயக்கர், மராட்டியர் காலத்தில் தாய் தெய்வப் பண்பாடு.

9. கிராமத் தெய்வங்கள்; நாட்டார் தெய்வங்கள்

என, இவற்றில் காணப்படும் தாய் தெய்வத் திரு உருவங்களைப் பற்றியும் இனி வரும் வாரங்களில் தொடர்ச்சியாகக் காணலாம்.

சான்றெண் விளக்கம்

  1. H. Krishna Sastry, South India God and Goddess, Madras Govt Press, 1966, pp.187-189.
  2.  Ibid,  pp.185-187.
  3. எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், சோழர் கலைப்பாணி, பாரி நிலையம், சென்னை.
  4. தொ. பரமசிவம். தெய்வம் என்பதோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT