யுத்தபூமி

அத்தியாயம் 48 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 41

த. பார்த்திபன்

பெருங்கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

குட்டூரில் இரும்பு உருக்காலை மட்டும் அமைந்திருந்ததை வெளிப்படுத்த, ஆதிச்சநல்லூர், கொடுமணல் ஆகிய இடங்கள் பலவகை தொழிற்பட்டறைகள் செயல்பட்ட இடங்களாகத் திகழ்ந்ததைக் காட்டுகின்றன. இரும்பு முக்கியமானதாக இருப்பினும், செம்பு, தங்கம் உலோகத் தாதுக்கள் இவ்விடங்களில் கண்டெடுக்கப்படுள்ளன. தகரமும் ஈயமும் (Tin & Lead) கலப்பு உலோகப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டதும் இவ்விடச் சான்றுகள் உறுதிசெய்கின்றன. கத்தரிக்கப்பட்ட குவார்ட்ஸ் ஓட்டத்தை ASI, 2004-ல் மேற்கொண்ட ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இது குவார்ட்ஸ் வெட்டியெடுப்பை உறுதிசெய்கின்றன. இவ்விடங்களுக்கு இணையாக கிருஷ்ணாபுரமும் பலவகைத் தொழிற்பட்டறை செயல்பட்ட இடமாகத் திகழ்ந்ததை NIOT (National Institute of Ocean Technology) மேற்பரப்பாய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆதிச்சநல்லூர் பற்றிய செய்திகள் கிடைத்துள்ள அளவுக்குக்கூட கிருஷ்ணாபுரம் பற்றிய மேற்பரப்பாய்வுச் செய்திகள் வெளிப்படவில்லை. இந்நாள்வரை கிருஷ்ணாபுரத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

மேல்சிறுவலூர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வராயன் மலையின் சாய்தளப் பகுதிகளிலும், அதனை ஒட்டிய விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டப் பகுதிகளிலும் இரும்பு கனிமவளம் மிகுதியாகக் காணப்படுகிறது. மேல்சிறுவலூர் தவிரவும் பாக்கம், புதியன்பட்டி, ராவத்நல்லூர் ஆகிய இடங்களிலும் சங்க காலத்தைச் சேர்ந்த இரும்புத் தொழில் நடந்த இடங்கள், திருமதி சாரதா சீனிவாசன் அவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. மாமண்டூருக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், மூங்கில்துறைப்பட்டுக்குத் தெற்கே சங்கராபுரம் செல்லும் சாலையில் எட்டு கி.மீ. தொலைவிலும் மேல்சிறுவலூர் அமைந்துள்ளது. இங்கு இரும்பு உருக்காலை அமைந்திருந்த சான்று கிடைத்துள்ளது. குடியிருப்புகளுக்கும் நீண்டோடும் குழிகளுக்கும் பின்புறமாக 25 × 8-9 மீட்டர் பரப்பும் 5 மீட்டர் உயரமும் கொண்ட மேட்டுப் பகுதியில் உலோகத் தொழில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தற்பொழுது இங்கு வசிக்கும் மக்கள் இங்கு செயல்பட்ட சிறப்பான உலோகத் தொழில் குறித்து ஏதும் அறியாதவர்களாக உள்ளனர்*1. இந்த மேட்டுப் பகுதிக்கு அரை கிலோமீட்டர் தூரத்தில் ஓடும் பழைய நீரோடைக்கு அருகில் சேகரிக்கப்பட்ட பானை ஓடுகள், மக்கள் வசித்தமைக்குச் சான்றாக உள்ளன. எஞ்சியுள்ள உலோகக் கசடுகளின் கூலங்களும், உலைக்கலனின் சிதைந்த துண்டுகளும் இந்த ஓடைப் பகுதியில் காணப்பட்டன. இங்கு காணப்பட்ட 3 செ.மீ. தடிமன் கொண்ட கழுத்துப் பகுதி பானை ஓடுகள் குறிப்பிடத்தக்கவை. அவை 60 செ.மீ. விட்டம் கொண்ட பெரிய சேகரிப்புக் கலனுக்குரியவை. பளபளப்பற்ற இந்த ஓடுகள், நெல் உமியால் எளிதில் உருக்குலையாது திடமாக்கப்பட்டிருந்தன*2. இங்கு செயல்பட்ட உருக்குலை தொழில்நுட்பம், கொடுமணல் உருக்குலையை நினைவுபடுத்துவதாக இருக்கின்றன.

தமிழகத்தில் சென்னையை அடுத்து அதன் தெற்கில் காட்டாங்குளத்தூர், தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்துச் சாலையில் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெருங்கல்லூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் வேப்பங்குடி ஆகிய இடங்களிலும் இரும்பு உலைக்கலங்கள் அமைந்திருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவ்விரண்டின் காலமும் மு.பொ. ஒன்றாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ 3-ம் நூற்றாண்டு வரையும் என கணக்கிடப்பட்டுள்ளது*3.{pagination-pagination}

பண்டையத் தமிழகம் முழுவதும் பரவலாக அமைந்திருந்த இவ்வகையிலான உலைக்கலன்கள் இரும்பாயுதங்களையும், உழுபடைக் கருவிகளையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் அதிக அளவில் உற்பத்தி செய்தன. பெரும்பாலும் இவை எஃகு இரும்பைக் கொண்டே உற்பத்தி செய்தமையால், இவை தரமானவையாகவும் நீடித்து உழைப்பவையாகவும் இருந்தன. பண்டையத் தமிழகத்தில் இருந்து எஃகுக் கட்டிகளாகவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்களோ, உழுபடைக் கருவிகளோ, வீட்டு உபயோகப் பொருட்களோ ஏற்றுமதி செய்த சான்றுகள் இந்நாள் வரை கிடக்காமல் உள்ளது என்பது இதன் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

Assemblage of steel-making crucible fragments from surface finds at Mel-siruvalur, Tamil Nadu. புகைப்படம் நன்றி - சாரதா சீனிவாசன்

உழுபடைக் கருவிகள், காட்டை திருத்தி வயல்களை உருவாக்கும் முயற்சிக்கு மிக்க உறுதுணையாக இருந்தன. சங்கப் புலவர்கள் காடு திருத்தி நாடாக்கிய மன்னர்களைப் புகழ்ந்துப் பாடியுள்ளனர். இம்முயற்சியில், சோழ மன்னர்கள் முன்னிலையில் இருந்தனர். இக்காலத்தில் பொருளாத பலம் வேளாண்மை வளர்ச்சியோடு வளர்ந்தது.

இரும்புப் பொருட்கள் அப்பண்பாட்டுக்கு அப்பெயரை வழங்கியிருந்தாலும், இரும்புப் பண்பாட்டை இரும்பால் மட்டும் அளவிட்டுவிட முடியாது. மண்பாண்டங்களின் வளர்ச்சி, வெங்கலம், செம்பு, தங்கம் போன்ற பிற உலோவியல் அறிவு, அணிமணிகள் தயாரிப்பு, கட்டடக் கலை மற்றும் கற்களின் பயன்பாட்டு அறிவு, மற்றும் வேளாண்மை ஆகிய கூறுகளும், மக்களின் நம்பிக்கை, மற்றும் கருத்துருவங்கள், தொன்மங்கள், அயலகத் தொடர்புகள் அயலக் குடியேற்றங்களும், அயலர் குடிபுகுதலும், எழுத்துகளின் பயன்பாடு என பண்பாடு பரந்த பல்வேறு காரணிகளால் கட்டமைக்கப்படுகிறது.

அதே சமயத்தில், தென்னிந்தியாவில் இரும்புக் கருவிகளுக்கிடையே நிலவும் ஒருமித்த குணத்துக்கு பெருங் கற்படைக் காலத்தில் நிலவிய சமூக, பொருளாதார பின்னணியும் ஒரு காரணமாக இருந்துள்ளது.

பல்வகையான குழுக்கள் எழுச்சிபெற்ற காலம் இதுவே என சமூகவியளார்கள் இக்காலம் குறித்து தெரிவிக்கின்றனர். இதே சமயத்தில் நில உடைமை, எல்லைத் தகராறு, நில ஆக்கிரமிப்பு, செல்வம் கைக்கொள்ளல் போன்ற காரணங்களை மையமாகக் கொண்டு இக்குழுக்களிடையே அடிக்கடி சிறுசிறு பூசல் முதல் பெருயுத்தங்கள் வரை நிகழ்ந்தன. பெருங் கற்படைச் சின்னங்களில் காணப்படும் பலவகையான போர்க் கருவிகள், இத்தகையதோர் சமூகப் பின்னணியைக் காட்டுகின்றன.

திணை நிலமும் திணை வாழ்வியலும் திரிந்த காலக்கட்டம் இதுவே. இயற்கை அமைப்பு காரணமாக காடுகளை அழித்து விளைநிலமாக்கியபொழுதும், ஐந்திணை வாழ்க்கை எதிர்பார்த்ததைப்போல குறிஞ்சித் திணையாகி ஒரு திணை வாழ்க்கை நிலைத்துவிடவில்லை. ஏனெனில், காடு திருத்தம் மட்டும் விளைச்சலை உறுதிபடுத்திவிடாது; நீர் ஆதாரமும் பெருக்கப்பட வேண்டிய நிலை இருந்தது. சங்க காலத்துக்குப் பிறகான ஆட்சிக் காலங்களில்தான் நீர் ஆதாரங்களைக் பெருக்கும் முயற்சி தீவிரப்பட்டது. இம்முயற்சி, நாயக்கர் காலம் வரை அதாவது 17-ம் பொ. நூற்றாண்டு வரை தமிழகத்தில் செய்யப்படதற்கான ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. எனில், தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் காட்டும் ஐந்திணை வாழ்க்கை முறை என்பது முன்னரே நிலைபெற்றிருந்த வாழ்நிலையையும், தமிழரின் தனித்தப் பண்பாட்டு அடையாளத்தையும் காட்டுவதாகும்.{pagination-pagination}

இப்புரிதல், பண்டையத் தமிழகத்தின் அல்லது தென்னிந்தியாவின் பெருங் கற்காலப் பண்பாடு குறித்த புதிய பார்வைகளுக்கு வழி அமைக்கிறது. தொல்காப்பியம் குறிப்பிடும் திணை வாழ்வியல், திணை நிலப் பகுப்பு என்பது முன்னரே இங்கு நிலைபெற்றிருந்த ஒன்று என்பதும், அது உலோகக் காலங்களுக்கு முற்பட்டதான புதிய கற்காலத்திலிருந்து வளர்ச்சி அடைந்து, காலகதியில் பெருங் கற்படைப் பண்பாடாக வெளிப்பாடாகாவும், அதன் ஊடாக இரும்பு உலோகப் பண்பாடு வெளிப்பட்டதும் துலக்கமாகிறது.

இரும்புக் காலப் பண்பாட்டுக் காலத்தில், உலகின் பிற நாகரிகங்களில் ஒருமுகப்பட்ட அதாவது வேளாண் சமூகத்தின் அடர்த்தி கூடிய பண்பாடு வெளிப்பட்டபொழுது, தென்னிந்தியா மருதப் பண்பாடான வேளாண் பண்பாட்டில் குவிந்துவிடவில்லை. இங்கு ஐந்திணை வாழ்க்கையே நிலைபெற்றது. இங்கு வரலாறு ஆசிரியர்களால் முன்னர் கருதப்பட்டதுபோல், “தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த புதிய கற்கால மக்களை வெளியில் இருந்தவந்த பெருங் கற்கால மக்களைக் காடுகளுக்குத் துரத்திவிட்டு, தமது பெருங் கற்படைப் பண்பாட்டை இங்கு வளர்த்தனர்” என்பது தவறு என்பதும், புதிய கற்காலப் பண்பாட்டு மக்களில் இருந்து கிளைத்த பெருங் கற்படை மக்களே பெருங் கற்படைச் சின்னங்களையும், இரும்புப் பண்பட்டையும் படைத்தனர் என்பதும், இவர்கள் தென்னிந்தியா முழுவதும் பரவலாக ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்தமையும் உறுதியாகிறது.

இதனால், தென்னிந்தியப் பண்பாடு குறித்து அல்சின் தம்பதியினரின் கருதுகோள்களில் கவனிக்கத்தக்கதான, “புதிய கற்காலத்துப் படைகளோடு ஒப்பிடும்பொழுது, பெருங்கற்படைக் காலத்தில் ஏற்பட்ட மக்கள்தொகைப் பெருக்கமும் அதனால் ஏற்பட்ட புலப்பெயர்ர்சியுமே இரும்புக் காலத்துப் படைகள் கனத்தில் குறைவாகக் காணப்படுவதற்கு காரணம் என்பதுடன், தென்னகத்தைப் பொருத்தமட்டில், இரும்பின் உபயோகத்தால் அக்கால மக்கள் வாழ்வில் எவ்வித புரட்சிகரமான மாற்றமும் நிச்சயம் நடைபெறவில்லை” என்பதும் “புதிய கற்காலத்தில் நிலைகொண்டு வளர்ச்சிபெற்ற பண்பாட்டு மிச்சங்களும், புதிய கற்காலத்திலேயே மக்கள் வாழ்வில் குடிகொண்டிருந்த பழைமை பேணும் பண்பும், இரும்புக் காலத்திலும் தொடர்ந்து நீடித்தன”*4 என்ற கருத்தும் புதிய விளக்கம் பெறுகிறது.

Mel-siruvalur crucible: high carbon steel prill (1.2% carbon) (50 μm at original magnification 400×) showing pearlite surrounded by a cementite network. புகைப்படம் நன்றி - சாரதா சீனிவாசன்

அல்சின் தம்பதியினர் தமிழரின் திணை வாழ்வியலின் பின்னணியில் பெருங் கற்படைப் பண்பாட்டையும் இரும்புப் பண்பட்டையும் வைத்துப் பார்க்கவில்லை. தமிழரின் முதல் நால்வகை நிலப் பண்பாட்டையும் அண்மைக் கால அகழாய்வுச் சான்றுகளையும் உற்று நோக்கினால், அல்சின் தம்பதியினர் தென்னிந்திய புதிய கற்கால மக்களே இப்பகுதியின் பெருங் கற்படை – இரும்புக் கால பண்பாட்டைத் தொடர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டதுபோல், இங்கு வாழ்திருந்த பெருங் கற்கால மக்களே, இப்பகுதியின் நுண் கற்காலப் பண்பாட்டுக்கும், அதன் முடிவுக் காலங்களில் புதிய கற்காலப் பண்பாட்டை வளர்த்தொடுத்தனர் என்பதையும் இன்று நாம் விளக்கிக்கொள்ள முடியும். இம்மக்களின் வாழ்வில் குடிகொண்டிருந்த பழைமை பேணும் பண்பே, குறிஞ்சி நிலத்தில் வேட்டுவ வாழ்க்கையும், முல்லை நிலத்தில் மேய்த்தல் வாழ்க்கையும், மருத நிலத்தில் வேளாண் வாழ்க்கையும், நெய்தல் நிலத்தில் பரதவர் வாழ்க்கையும் வாழச் செய்தது. இவர்களே, இயற்கைக் காரணங்களால் திரிபடைந்த பாலை நிலங்களில் பாலை வாழ்வியலை கைக்கொண்டனர் எனலாம்.{pagination-pagination}

தென்னிந்தியாவில் பண்பாட்டு கலப்புகளும், வெளியில் இருந்து வந்தவர்களின் குடியேற்றங்களும் நிகழ்ந்தனவே தவிர, வெளியில் இருந்து வந்தவர்களால் முன்பிருந்தவர்களை துரத்திவிட்டு, புதிய பண்பாடு உருவாக்கப்படவில்லை. பண்பாட்டுத் தொடர்பு தென்னிந்தியா மக்களின் காலத்தில் மூத்த கடலோடிப் பண்பும், அயலகங்களில் காலூன்றிச் செய்த வணிகப் பண்பும் காரணமாகியுள்ள என்பது தற்பொழுது துலக்கமாகிறது எனலாம்.

தமிழரின் தனிப் பண்பாடாக உள்ள திணை வாழ்வியல் தொல்காப்பியருக்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னரோ அல்லது சங்க காலத்தில் சட்டென்றோ உருவாகியிருக்க முடியாது. இலக்கியமும், அதனை வகைபடுத்தும் இலக்கணமும் தோற்றம் கொண்டிருக்க முடியாது. அது தென்னிந்தியப் பூர்வகுடி மக்களின் பரிணாம வளர்ச்சி நிலைகளுடனும், அயலகத் தொடர்புகளால் பெற்ற செழிப்பும் கூடி உருவாகியுள்ளது.

அதே சமயத்தில், சங்க காலத்தையும் அதற்கு முன்னரும் இம்மக்கள் மருத நில மாக்களை விரும்பினர். இரும்பு அதற்குக் கூடுதல் வாய்ப்பளித்தது. இதன் காரணமாக இம்மக்களின் திணை வாழ்வியலில் பெருத்த மாற்றங்கள் நிகழவில்லை. ஆனால், பெருத்த அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. குடித் தலைமை நீங்கி, வேளிர்த் தலைமை உருவாக்கமும், வேளிரை நீக்கி வேந்தர் தலைமை உருவாக்கமும் நிகழ்ந்தன. அது, அந்நாள் வரையிலான அரசியலை சாய்க்க முற்பட்டது; சாய்த்தது. இதனை அகழாய்வுச் சான்றுகளால் அடையாளம் கண்டு உறுதிசெய்ய வாய்ப்பில்லை. இலக்கியச் சான்றாக சங்க இலக்கியங்களும், கல்வெட்டு மற்றும் பிற தொல்பொருள் சான்றுகளுமே இதனை உறுதிப்படுத்த உதவுகின்றன.{pagination-pagination}

ஏறத்தாழ, யுத்தபூமி தொடரின் மையப் புள்ளியான யுத்தங்கள் கருக்கொள்ளும் இடமும் இங்குதான் உள்ளது. யுத்தங்களுக்குப் போகும் முன், யுத்தங்களை அரசியல் மற்றும் நாடு பெருக்கத்துக்கான யுத்தங்கள் மற்றும் சமூகக் காரணிகளுக்கான யுத்தங்கள் என இருபெரும் பிரிவாகப் பகுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சமூகக் காரணிகளுக்காக மாய்ந்தவர்களே வணக்கத்துக்கு உரியவர்கள் ஆனார்கள். மூத்தோர் வழிபாட்டு நிலையினைப் பெற்றவர்களானார்கள்.

யுத்தங்களுக்குப் போகும் முன், மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்குகள் குறித்தும், நம் முன்னோர்களையும், நம் முன்னோர்களை அடையாளப்படுத்தும் சான்றுகளைகளையும் நாம் தெளிவாக்கிக்கொள்ளவேண்டி உள்ளது. ஏனென்றால், உலகப் போக்குகளுக்கு ஊடாக, தனித்துத் தெரியும் பண்டுகளை நாம் அடையாளப்படுத்திக்கொள்ளவும், அர்த்தப்படுத்திக்கொள்ளவும் வேண்டியுள்ளது.

(தொடரும்)

சான்றுகள்

1. Sharada Srinivasan, Wootz Crucible Steel: A newly discovered production site in South India, papar, Institute of Archaeology, (pp.49-59), 1994 ,p.52.

2. Sharada Srivivasan, Carla M. Sinopoli, Kathleen D. Marrison, Rangaiah Gopal and Srinivasa Ranganathan, article_new, “South Indian Iron Age and Higher Carbon Steel: With Reference to Kadebekele and Comparative insight from Mel-Siruvalur”, p.117

3. Sasisekaran.B, Metallurgy and Metal Industry in Ancient Tamil Nadu- An Archaeological study, article_new in, Indian Journal of History of Science 37.1, (2002), pp.17-29.

4. Allichin.B and Allchin. F.R, The Birth of Indian Civilization, Harmondsworth, 1968, p.232.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT