அத்தியாயம் 54 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 47

பிராமணிய சமயம், ஒரு வரையறுத்த அளவில்தான் திராவிடத்தை ஏற்றது. ஆனால், பிற்கால திராவிடம், வரையறையற்று பிராமணியத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டது.

திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமுதாயத்தை தேடி மேற்கொண்டு நாம் பயணிக்கும் முன், மொழிக்கும் சமூகத்துக்கான தொடர்பு, மொழிக்கும் இனத்துக்குமான தொடர்பு, மொழி அடையாளம் உறுதிப்படும் இடம், இன அடையாளம் அழியுமிடம் ஆகியவை குறித்து அறிய வேண்டியவர்களாக உள்ளோம்.

இன அடையாளம் அழிந்து மொழி அடையாளம் மட்டும் நிலைபெறல்

ஆரியர், திராவிடர் இன அடையாளம் நிச்சயமாக மொழி சார்ந்ததே. ஆனால், குறிப்பிட்ட காலகட்டத்தில் இனத்தின் அடையாளமாக மொழி இருந்த நிலை மங்கி, பண்பாடு முக்கிய இடத்தைப் பெற்று, மொழி - இன வழி பாகுபாடு அழிந்து, பண்பாடு வழி பாகுபாடு முதன்மையான அடையாளமாகிறது. ஆரிய மொழிகள் (ரிக் வேத மொழி, பிராகிருதம், செம்மை சம்ஸ்கிருதம் உள்பட) பரவலுடன் இப்பண்பாடுகளின் கலப்பின் காலகட்டமும் இடத்துக்கு இடம் மாறுபாடு கொண்டதாகிறது. இக்காலகட்டத்தை முன்னர் விவரித்த நான்கு காலகட்டங்களோடு தொடர்புகொண்டு பார்க்கலாம். (இக்காலகட்டம் குறித்து பின்னரும் வேறொரு அத்தியாயத்தில் விளக்கப்படவுள்ளது).

மொழியும் சமூகமும்

மொழியின் உற்பத்திக்கும் சமூகத்துக்குமான தொடர்பும், சமூகத்தின் கூட்டியக்கத்துக்கும் மொழிக்குமான தொடர்பும் முக்கியமானவை.

எவ்வாறாயினும், சமுதாயத்தின் கூட்டு உற்பத்தியாக இருப்பதால், மொழி குறுகிய அளவில் ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வாழிட மக்களையோ வரையறுக்க உதவுகிறது. பேரளவில் ஒரு மக்களினத்தை, சமயங்களில் நாட்டு எல்லைகள் கடந்தும் அடையாளப்படுத்தவும், வரையறுக்கவும் உதவுகிறது.

சமூகத்துக்கும் மொழிக்கும் உள்ள ஊடாட்டம் அளவிடமுடியாதது. நூல்கண்டு வலைப்பின்னல் ஆனதுபோல் புதிய களத்தைச் சமைப்பது; பின்னப்பின்ன வளர்ந்துகொண்டே இருப்பது. துவக்கக் காலத்தில், இனத்தையும் வரையறுக்கும் உபகரணமாக மொழி இருந்ததால், இனம், சமூகம், மொழி என மூன்றின் ஊடாட்டமாக இது இருந்தது. ஒன்றின் இயக்கத்துக்கு மற்றொன்றின் இயக்கம் நிச்சயத் தேவையாக இருந்தது. வெவ்வேறு பிற்காலங்களில் மொழிவழி இன அடையாளம் பல்வேறு காரணங்களால் அழியத் துவங்கியுள்ளது. வரலாற்றுப்போக்கில், சில மொழிகளும் அழிந்துள்ளன; ஆனால், இனத்தின் அழிவு முற்றாகாமல் வேறு மொழியைப் பேசுவதாகப் பரிமாணம் கொள்கிறது. சமூகத்தின் கூட்டியக்கத்துக்கு மொழி அடிப்படையாக விளங்குவதில் இருந்து இதனை முற்றாக அறிந்துகொள்ளளாம்.

ஒரு சமூகத்தின் கூட்டியக்கத்துக்கு அடிப்படையாக இருப்பது மொழியாகும் என்று மானுடவியலாளர்களும், மொழியியலாளர்களும் குறிப்பிடுவர். புறத்தோற்ற மாறுபாடும் (உம் - தோல் நிறம், உயரம், முடியின் நிறமும் இயல்பும், மண்டையோடு வடிவம் போன்றவை) இனத்தினை அடையாளப்படுத்தினாலும், மொழியின் இயங்குதளம் சமூகம் என்பதால், மொழிவழி இன அடையாளம் இன்னும் வலிமைகொண்டதாக விளங்குகிறது. காரணம், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மொழி இயங்குகிறது என்று சுட்டப்படுவது கவனிக்கத்தக்கது. சமூகத்தை வரையறுக்கும் பல அளவுகோல்களில், மொழி மிகமுக்கியப் பங்களிக்கிறது. “மொழியின் பொதுமைகள் அந்தச் சமூகத்தின் பொதுமைகளாக விளங்குகின்றன” என்ற சசூரின் விளக்கத்தில் இருந்து இதன் விரிவைப் பெறலாம். “மொழி, தனிமனிதன் வழியாக வெளிப்படுகிறது (சசூர் இதனை பேச்சு என்று சுட்டுவார்). அதேசமயம், ஒட்டுமொத்த சமூகமும் ஒரு மொழியின் பொதுமைகளைக் கொண்டிருக்கிறது (இதனை சசூர், மொழிக்கிடங்கு எனச் சுட்டுவார்). பேச்சு என்பது தனி மனிதனின் மூலம் வெளிப்பட்டாலும் அது மொழியின் பொதுமைகளை வெளிப்படுத்துகிறது” என்பார். இதன்மூலம், மொழி தனிமனிதன் மூலம் வெளிப்பட்டாலும், அது அவன் காலச் சமூகத்தின் பொதுமைகளையே வெளிப்படுத்துகிறது எனலாம்.{pagination-pagination}

மொழிவழிச் சமூகத்தின் பன்முகங்கள்

ஒரு மொழிக்குரிய சமூக அமைப்பு அம்மொழியில் பிரதிபலிப்பதால், அம்மொழிவழியே அச்சமூகத்தின் அமைப்பைப் புரிந்துகொள்ள முடியும். பொதுவில், ஒரு மொழியினைப் பேசும் சமூகம் ஒற்றைக் கூறாக இருப்பதில்லை; அது பல உள்பிரிவுகளைக் கொண்டதாகவே விளங்குகிறது. சமூக வாழ்வியல் காரணிகளின் இதனை தீர்மானித்துள்ளன. அது, சமூகம் வாழும் நிலப்பரப்பின் வேறுபாட்டின் அடிப்படையில் வேறுபட்டு உள்பிரிவுக்குக் காரணியாகலாம். மதம், சாதி, கல்வி ஆகிய காரணிகளால் உருவான உள்பிரிவுகளும் அதனில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அதாவது, இங்கு உள்பிரிவு என்று குறிப்பிட்டதை கிளைமொழிகள் (dialects) எனக் குறிப்பிடலாம். ஒவ்வொரு மொழியும் கிளைமொழிகளைக் கொண்டுள்ளன. அது இரு வகைகளாகக் கிளைக்கின்றன. முதல் வகை, நிலத்தின் சார்பானது; மற்றது, சமூகத்தின் உள்பிரிவுகளால், அதாவதும் ஆண், பெண் பாலின வேறுபாடு உள்பட கற்றோர் மொழி, கல்லாதார் மொழி, தொழில்முறை மொழி, குலவழி மொழி போன்ற சமூகத்தின் உள்பிரிவுகளின் காரணத்தின் அடிப்படையில் பல்வேறாகக் கிளைக்கிறது. இக்கிளைமொழிகள், மூல மொழியின் அகமாற்றத்துக்குக் (internal change) காரணமாகின்றன என்பர் மொழியியலாளர்கள். இக்கிளைமொழிகளில் இருந்து செந்தர மொழி (standard language) பல சொற்களைப் பெறுகின்ற காரணத்தில், அம்மொழிக்குள் மொழிமாற்றம் (language change) நிகழ்கிறது என சுட்டுவர்.

இருமொழியமும் பன்மொழியமும் அடையாளப்படுத்தும் சமூகம்

மாந்தரினத்தின் இடப்பெயர்ச்சியும், அண்டைச் சமூகங்களுடன் உருவாகும் தொடர்பும், மனிதனை அல்லது பலரை அல்லது ஒரு சமூகத்தை இருமொழியராகவோ (bilinguals), பன்மொழியராகவோ (multilinguals) பரிமாணம் கொள்ள வைக்கிறது. அதாவது, சமூகங்களின் வழி மொழிகள் தொடர்புகொள்கின்றன. ஆம், சமூகங்களின் தொடர்பின்றி மொழிகளின் தொடர்பு இல்லை.

சமமற்ற பங்களிப்புகள்

சமூகங்கள் தொடர்புகொள்ளும்போது, ஒவ்வொரு சமூகமும் சம அளவில் தம் பங்களிப்பைச் செய்துகொள்வதில்லை. சமமற்ற பங்களிப்புக்குப் பல காரணங்களைக் காணமுடியும். முதல் காரணமாக இருப்பது தேவைப்பாடு. அடுத்தநிலையில், சொற்களஞ்சியத்தின் குறைவு மற்றும் புதிய சொற்களை உருவாக்கும் தகவமைப்பு இன்மை காரணமாக உருவாகும் நிர்பந்தம், சமூகங்களுக்குள் ஏற்றத்தாழ்வு மனப்போக்கு என வரிசையை அமைத்துக்கொண்டு தொடரலாம்.

மொழியின் இரட்டை வழக்கு

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்குமான வேறுபாடே, மொழியின் இரட்டை வழக்கு (diglossia) என குறிக்கப்படுகிறது. நவீன காலத்தில், மொழியின் இரட்டை வழக்கு என்பது மிகுந்த முக்கியமான இடத்தைப் பெறுகிறது. எழுத்து வடிவமும், இலக்கியம் படைக்காத திருந்தாமொழிகளைப் பொருத்து, மொழியில் இரட்டை வழக்கு என்ற கேள்விக்கு இடமில்லாது போகலாம். ஆனால், எழுத்தும், இலக்கியமும் கொண்ட மொழிகள் யாவற்றுக்கும் மொழியின் இரட்டை வழக்கு என்பது பொருள்படுத்தத் தகுந்த பிரச்னைக்குரியதாகும். உண்மையில், மொழியின் இரட்டை வழக்கானது, மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பவர்களுக்கே பிரச்னையாக உள்ளது என மொழியியலாளர்கள் அடையாளப்படுத்துவது கவனிக்கத்தக்கது.

பொதுவாக, பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் வேறுபாடு இருப்பது இயல்பு. சில மொழிகளில், இவ்வேறுபாடுகள் இரண்டும் தனிமொழிகள் என்று கருதும் அளவுக்கு நிறைந்துள்ளன. இந்த மொழிகளுக்கு நீண்ட இலக்கிய இலக்கண வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கும் என்பர் மொழியியலாளர். பெர்கூசன் அவர்கள், மொழியின் இரட்டை வழக்கு குறித்து “இரட்டை வழக்குச் சூழல் அராபி, கிரேக்கம் முதலிய மொழிகளுடன் தமிழிலும் உள்ளது” என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இதனை, இம்மொழிகளை இரண்டாம் மொழியாக கற்பவர்கள் நன்றாக உணர்கின்றனர் என்பார் அவர்.{pagination-pagination}

பெர்கூசன் கூற்றிலிருந்தும், மொழிகளுக்கிடையே சமமற்ற பரிவர்த்தனை பங்களிப்பில் ரிக் வேதத்தில், அதாவது இலக்கிய மொழியில் திராவிடமயமாதல் என்பது திராவிடத்தின் குறைந்த அளவிலான பங்களிப்போடு இருக்கிறது. அதேசமயத்தில், அக்காலப் பேச்சுவழக்கில் திராவிடத்தின் தாக்கம் மிகையாக உள்ளது. அதாவது, இதனை ரிக் வேத சமூகத்தின் மொழிக்கும், ரிக் வேத படைப்பு மொழிக்குமான வேறுபாட்டில் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அது, பேச்சு வழக்கு மொழி வேறாக பிராகிருதமாக பரிமாணம் கொண்டதையும், ரிக் மொழி பேச்சு வழக்கற்ற மொழியாகத் தனியாக தனித்த நிலையினைக் கொண்டதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆரியன், திராவிடன் என்ற சொற்கள், இன அடிப்படை இழந்து மொழி அடிப்படையாக மாறிய நிலைக்கு ஐராவதம் மகாதேவன் அவர்களின் வார்த்தைகள் சிலவற்றைப் பொருத்திப் பார்க்கலாம். “மக்கள் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்குத் தாவக்கூடும்; பலமுறை தாவுவது நிகழ்ந்திருக்கிறது. ஆரிய மொழி பேசியவர்கள் திராவிட, முண்டா மொழி பேசியவர்களோடு அடையாளம் காண இயலாதபடி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலந்து, பல சமூகங்களில் இருந்து ஏற்றுக்கொண்ட கூறுகளால் ஆன ஒரு கலப்பு இந்தியச் சமூகத்தை உருவாக்கியுள்ளனர். இக்கலப்பினால்தான், சிந்துவெளிக் கலைகளின், சமயங்களின் பொருள்பொதிந்த கூறுகளும், கைவினை மரபுகளும் காலத்தால் மறையாமல் எஞ்சியுள்ளன. அவை ரிக் வேத காலம் முதல் சம்ஸ்கிருத இயக்கியங்களிலும், சங்க இலங்கியங்களிலும் பதிவாகியுள்ள பண்டைய தமிழ் மரபுகளிலும் காணக்கூடியவையாகும்.”*1

விட்செல்*2 (witzel) முதலான ஆய்வாளர்கள், “ரிக் வேதத்தில், அதுவும் அதன் பின்பகுதிகளில்தான் சிற்சில திராவிடச் சொற்களே காணப்படுகின்றன” என்று சுட்டிக்காட்டுவார். இவர்கள், சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை எதிர்க்கும் அணியினர் ஆவர் என்பதை நினைவில் கொள்வோம். இந்த எதிர்ப்புக்கு இரு வகையில் பதில் தரப்படுகிறது. 1. சிறந்த பயிற்சியுடைய, ஆர்வத்தால் உந்தப்பெற்ற, தொழில் முறை சமய குருக்கள் (இருடிகள்) தாங்கள் இயற்றிய புனித நூல்களில் பிறமொழிச் சொற்களைக் கையாள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. 2. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு கடன் வாங்கிய சொற்களின் புள்ளிவிவரங்கள் மட்டும் போதுமானவை அல்ல. பண்டைய இந்திய ஆரிய மொழிகளில் (மொழிகள் = ரிக் வேத மொழியின் கிளைமொழிகள், பொதுமக்களின் பேச்சு வழக்கு பிராகிருத மொழிகளில் - நான்), திராவிட மொழிகளில் இருந்து சொல்லுக்குச் சொல் நேரடி மொழிபெயர்ப்புகளாகப் பெறப்பட்டவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

புனித வேத செய்யுள்களை மிகுந்த கவனத்துடன் இயற்றிய ஆசிரியர்கள்கூட, அவர்களுக்கு உகந்த குடிப்பெயர்களிலும், பட்டங்களிலும் நடந்துள்ள நேரடி மொழிபெயர்ப்புகளை விலக்க முடியாததற்குக் காரணம், செய்யுள்கள் இயற்றப்பட்ட காலத்தில் அவை தோன்றிய முறை மறக்கப்பட்டதுதான்”. உம் - திராவிட மொழியின் “பொறை” (அதாவது bearer, sustainer என்ற பொருள் தரும் சொல்), ரிக் வேதத்தில் “பரத” (Bharata – ஒரு குடியின் பெயர்) என மொழிபெயர்க்கப்பட்டது. மிகவும் பிரபலமான முந்தைய ஆரியக் குடிவழிப் பெயரான இது, ரிக் வேதத்துத் தொன்மையான மண்டலங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.*3 பரத இனக் குழுவின் முக்கியப் பங்களிப்பாளர்களாக, பெயரில் தாசர் பின்னொட்டு கொண்டுள்ள திவேதாச, சுதாசு ஆகியோர் குறித்து முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பட்டவை இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது. இவர்கள் புரு - பரத என்று அழைக்கப்பட்டதும், திரித்சு கிளைக் குடியின் தலைவர்களாகச் சுட்டப்படுவதும் குறிப்பிடத்தகுந்தது. த்ரித்சு அல்லது த்ரித்ஸு என்ற பெயர், திராவிட தாசர் என்பதன் சுருக்கமா, மரூவுவா என்று ஆராயப்பட வேண்டும். சுருக்கம் / மரூவு என்று ஏற்றுக்கொள்வாமாயின், ஆரியத்தை தழுவிய முதல் திராவிடக் குழுவினர் புரு குழுவில் தனித்து இயங்கினர் என்பதும், பின்னர் நடந்த பத்து மன்னர்களின் யுத்தத்தில் இவர்களின் பங்களிப்பு கணிசமானது என்பதும் அடையாளமாகிறது.

“இன்று ஆரிய, திராவிட மொழிகள் இருந்தாலும், ஆரியர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் இனவாரியாகப் பிரிக்கமுடியாது” என்று ஐராவதம் மகாதேவன் கூறுவது நிச்சய நிலையாக உள்ளது.*4

இதுவே, இன அடையாளம் அழிந்து, மொழி அடையாளம் நிலைபெற்ற தன்மையை விளக்கவல்லது. எனில், மொழி அடையாளம் உறுதிப்பட்ட காலகட்டத்தில், ஆரியர் தமிழ் / திராவிடர், இன்னும் ஆஸ்திராயிடுகள் முதலான மொழிவழி அமைந்த முதல் இன அடையாளம் அழிந்து, மொழியால் பிணைக்கப்பட்ட பல்வேறு இனக்குழுக்களை மொழிவழி அடையாளப்பட்டது.{pagination-pagination}

மொழி அடையாளத்தில் இருந்து பண்பாடு அடையாளத்துக்கு…

இது சிக்கலானது. மொழி இனத்தை அடையாளப்படுத்திய நிலை மாறி, கலவையான இனக்கூறுகள் மொழிகொண்டே அடையாளம் காணும் நிலை. இதனால், பண்பாடு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும். காலந்தோரும் பண்பெறுவதை அடையாளப்படுத்தும் சொல்லே, பண்பாடு ஆகும். பண்பாடு பலமுகம் கொண்டது, அதன் முக்கிய முகம் சமயம் நிலையாகும். ஆரியப் பண்பாட்டை, அதாவது ஆரிய வாழ்வியலைக் கொண்டதே “பிராமணியம்” என்ற சமயம் ஆகும். பிராமணியத்தைத் தழுவியவர்கள், ஏற்றுக்கொண்டவர்கள் என்பதை குறிக்கும்; இது இன அடையாளம் அழியும் இடமாகும். இது எல்லா ஆரியர்களும் பிராமணியர்கள் இல்லை என்பதையும், எல்லா திராவிடர்களும், பிராமணர்கள் அற்றவர்கள் அல்லர் என்பதையும், எல்லா நிசாதர்களும், தஸ்யுகளும் பிராமணர்கள் அற்றவர்கள் அல்லர் என்பதனை விளக்கும். ஆரியர்களில், பிராமிணியத்துக்கு வேறான கொள்கைகளை உடையவர்கள் இருக்கின்றனர். பிராமணியத்தை ஏற்ற திராவிடர் என்ற தாசர்கள் உள்ளனர் என்பது மேலே விளக்கப்பட்டது.

இது மீண்டும் சிக்கலானது, ஆரியமும், பிராமணியமும் ஒன்று என்ற தற்போதைய வரையிலான பாடங்களை மறுதழித்து எழுவது. போலவே, பிராமணியம் துவக்கத்தில் இருந்து பிறப்பின் அடிப்படையில் மட்டும், நால்வகை வர்ணத்துடன் இருந்தது என்பதை மறுதழித்து நோக்குவது என்பது. ஆனால், இது காலத்தின் கட்டாயம். இதனை உள்வாங்கிக்கொள்ளவில்லை என்றால், நாம் பஞ்ச கவுட பிராமணர்களையும், பஞ்ச திராவிட பிராமணர்களையும் மிகச் சரியாக அடையாளம் காண முடியாதவர்களாகவே இருப்போம். மிகப்பெரிய வரலாற்றுப்பிழையை தொடர்பவர்களாகவே இருப்போம்.

பிராமணிய சமயம்தான் இன்று இந்து சமயமாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி பதில் காண முயல இன்னும் அவகாசம் தேவை. ஏனெனில், பிராமணியம் சுவீகரித்துக்கொண்ட பிற சமயத்தின் மேம்மைகளை முதலில் நாம் அடையாளப்படுத்திக்கொண்டும், அவற்றை சரியாக உள்வாங்கிக்கொண்டும், விளக்கிக்கொண்டும் அதுபற்றி பதில் காண வேண்டும். ஏனெனில், வேதத்துக்கும் (ரிக் வேதத்துக்கும்) வேதாந்தத்துக்கும் உள்ள வேறுபாடுகள் அத்தனை பெரியவை. அவை, பிராமணங்களில் இருந்து, ஆரண்யங்களில் இருந்தும் விலகி உபநிடதங்களில் வழி வாழ்வியலை உருவாக்க முனைந்தவை. இங்கு விலகல் என்ற பதம் உவப்பற்றதாக இருக்கக்கூடும். ஆனால், பொருள்வயப்பட்டநிலை சுட்டும் வாழ்வியல் விலகளையே பிசகாமல் காட்டுகின்றன. இது, பிராமணிய மதம் காலத்துக்குத் தக்க மாற்றத்துக்குத் தம்மை ஆளாக்கிக்கொண்டு, தம் வாழ்வியலை உறுதி செய்துகொண்டுள்ளது என்பது யதார்த்தமாகும்.

பிராமணியத்தின் கூறு என்று நாம் வழக்கில் கொண்டுள்ள கடவுளரின் திருவிளையாடல்கள், திருவிளையாடல்களை மையப்படுத்திய வழிபாட்டியக் கோயில் போன்ற இன்னபிறவும், வேதத்தின் அந்தமாகிய அதாவது இறுதியான வேதாந்தங்கள் நமக்கு அளிப்பவையல்ல. இவற்றை புராணங்களே அளிக்கின்றன. இதனால், பிராமணியம் என்று குறிக்கப்படும் சமயநிலையானது, தற்கால பயன்பாட்டுப் பொருளில் “புராண சமயம்” என்றாகவே உள்ளது. இந்து சமயம் என்பது தற்கால பயன்பாட்டுப் பொருளில், நாட்டார் மரபுகளை உள்வாங்கிக்கொண்டும், விழுங்கிக்கொண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனிக்கும் புராண சமயம் என்று விளக்கம் கொள்வது தவறாக முடியாது. இந்து சமயம் கிடைமட்டத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் யதார்த்தமான புள்ளிகளில் இருந்து இதனை அறியமுடிகிறது.

இந்த யதார்த்தமான புள்ளிகள்தான், வேத இலக்கியம் என்றால் என்ன? வேத இலக்கியம் எவை எவை என்ற வினாக்களுக்கும், அவை பிராமணிய சமயமானது எவ்வாறு என்ற வினாவுக்கும் பதில் அளிக்கிறது. (இங்கு இந்து சமயமோ, புராண சமயமோ, ஏன் முன்னர் ஆலோசித்தபடி முன்னிறுத்தப்படவில்லை என்ற கேள்வி எழலாம். இவ்வகை நிலைமாற்றங்களை நிகழ்த்தும் கரங்கள் பிராமணியத்தில் இருந்தே நீள்வதால், அது பிராமணியத்தின் போர்வையிலேயே இருக்கிறது).{pagination-pagination}

பிராமணியமும் திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகமும்

பிராமணியத்துக்கும், திணை வாழ்வியலுக்கும் முந்தைய தமிழ்ச் சமூகத்தினை தேடும் செயலுக்கும் தொடர்பு உண்டா? என்ற கேள்விக்கும், மேற்கண்ட வினாக்களின் விடையே பதில் இறுக்கும் எனலாம். அது, திராவிடத்தில் இருந்து ஏற்றுக்கொண்ட சிறப்புக்கூறுகளில் இருந்து மேலும் விரிவடையும். பிராமணிய சமயம், ஒரு வரையறுத்த அளவில்தான் திராவிடத்தை ஏற்றது. ஆனால், பிற்கால திராவிடம், வரையறையற்று பிராமணியத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டது. இது, சமூகப் பாகுபாடுகளில் இருந்து மேல்நிலையாக்கம் என்ற பொய்யான கட்டுமானத்தை, பிராமணியம் அங்கீகரிக்காத ஒன்றை, பொய்யாகத் தொடர்வதில் நன்கு அடையாளமாகிறது.

பிராமணிய சமயத்தின் வளர்ச்சியில் ஆண் ஆதிக்கம் அல்லது ஆண் தலைமை என்ற உயர் மனோவியலின் செயல்பாடு உள்ளது. இந்தோ - இரானியர்களாக பண்டைய அகன்ற இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்கள், மேய்த்தல் தொழிலுடன் ஆண் தலைமையினைக் கொண்ட குலச் சமூகங்களாக இருந்தனர். இவர்கள், வேளாண் சமூகத்தைப் பற்றியோ, வேளாண்மைப் பொருளாதாரத்தின் பெருவளம், உபரி உற்பத்தி பற்றியோ அறிந்திருக்கவில்லை. துவக்கத்தில், சிந்துப் பகுதியில் வேளாண் நிலத்தை மேய்த்தல்வெளியாக ஆரியர்கள் ஆக்கிக்கொண்டனர் என்பதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன என குறிப்பிடும் கோசாம்பியின் வார்த்தைகளை*5 இங்கு இணைத்துக் காணத்தக்கது.

இதன் பின்னணியில், சிந்துப் பகுதியில் தாய்வழிச் சமூகத்தின் வழிபட்ட வேளாண் குடிகள் நிறைந்து இருந்தன. ஆணாதிக்கம் சமூகம் பற்றிய சிந்தனை அங்கு எழும்பியிருக்க வேண்டும். சிந்துப் பகுதியின் புதிராக உள்ள அரசியல் நிலை அல்லது, அரசு பற்றிய விளக்கமின்மைக்கு, அவை பகிர்ந்துவாழும் வேளாண் / வணிகக் குலச் சமூகங்களாகவே இருந்தன என்பதே காரணமாகும். சிந்துப் பகுதி மக்கள் பல ஆண்டுக்காலமாக தாய்வழிச் சமூகமாகவே, ஆணாதிக்கச் சிந்தனையோ கொண்டிராதவர்களாக இருந்தனர். ஆனால், அதன் செழிப்பு மங்கிய பிற்காலத்தில், தனியுடைமை பற்றிய சிந்தனையைக் கொண்டிருந்தது. ஆளும் குடி மரபுவழிபட்ட துவக்க கால அரசு உருவாக்கத்தில் இருந்தது. இந்த துவக்க கால அரசுகளைத்தான் ஆரியர் முதலில் வென்றனர். வெல்லப்பட்ட அரசுகளில் சாம்பரன் முதலியோர் இருந்தனர்.

நகர வாழ்வியலையும், வேளாண் உற்பத்தியையும் கொண்ட இவர்களை வென்ற பிறகுகூட, மேய்த்தல் தொழிலையோ, அதனைச் சார்ந்த பண்பாட்டையோ ஆரியர்கள் கைவிடவில்லை. மேலும், தங்களின் நாடோடித்தன்மையையும் கைவிடவில்லை. ரிக் இதனையே முற்றாக வெளிப்படுத்துகிறது. ஆணாதிக்கத்தை விரும்பிய வசிட்டர் முதலான இருடிகளும், திரஸ்சு முதலான தலைவர்களும், தங்களின் வேளாண் தொழிலை விட்டு, மேய்த்தல் தொழிலை ஏற்று அக்கால ஆரியப் பண்பாட்டை தழுவினர் எனலாம். சிந்துப் பண்பாடு வளமையான உற்பத்திகளை இழந்து, செழிப்பு குறைந்த, நலிவின் பிடி இறுகியிருந்த காலகட்டத்தின் பிரதிநிதிகளான அவர்கள், ஆரியர்களின் மேய்த்தல் தொழிலின் செழுமையில் உடனடியாகக் கவரப்பட்டிருக்க வேண்டும். மேலும், காவிஸ்டி போன்ற, அதாவது ஆநிரை கவர்தல், பூசல்கள் மூலம் எளியதாக வளத்தைப் பெருக்கிக்கொள்ளல் மற்றும் அதனைச் சார்ந்த போர்த்தந்திரங்களும், அவை தந்த தொடர் வெற்றிகளும் இவர்களது ஆரியச் சார்பை விரைவுபடுத்தியிருக்க வேண்டும்.

இதே சூழலை, முன் – சங்க கால மற்றும் சங்க கால மேய்த்தல் சமூகத்தினரின் வாழ்வியலிலும், நடுகல் பூசலிலும் காணலாம்.

ஆனால், வேளாண்மைப் பொருளாதாரத்தின் அபரிமிதமான வளத்தையும், உபரி உற்பத்தியையையும் அவர்கள் விரைவில் கண்டுகொண்டனர். அநேகமாக, இது குரு, பாஞ்சாலப் பகுதிகளுக்கு ரிக் மக்கள் நுழைந்த காலகட்டத்தில் கண்டுகொண்டனர் எனலாம். இங்கிருந்துதான் தனியுடைமை கூடிய மரபுரிமை வயப்பட்ட ஆளும் குடிப் பண்பாட்டை வளர்த்தெடுக்க முனைந்தனர் என இலக்கிய ஆதாரங்கள் கொண்டு நிறுவலாம். இந்திய அளவில், குலமரபு பகிர்தல் நீங்கிய, முதல் ஆரிய தனியுடைமை அரசுகளான புருக்களின் துவக்கம் இதனை சான்றாக்குகிறது. பிராமணிய சமயம் கருக்கொண்டதும், நால்வகை வர்ணம் வலுப்பெறத் துவங்கியதும் இதே காலகட்டத்தில்தான்.{pagination-pagination}

நால்வகை வர்ண சமூகக் கட்டுமானம், வேளாண் தொழிலுக்கு இன்றியாமையாத தொழிலாள சூத்திர சமூகத்தையும், அதனை கையாளும் வைசிய சமூகத்தையும் அளித்தது. அதனால், வேளாண்மைப் பொருளாதாரத்துடன் நால்வகை வர்ண சமூகக் கட்டமைப்பு தவிர்க்கமுடியாது கட்டாயமாக்கப்பட்டது. பூர்வகுடிகள் மீதும், போரில் வெற்றிகொண்ட குடிகள் மீதும், ஆக்கிரமித்த இடத்துக் குடிகள் மீதும் திணித்தது.

வரலாற்றின் இந்நிகழ்வுகளின் ஊடேதான் ஆரியம் என்று பொதுவில் சுட்டப்படும் பிராமணிய மதத்தை ஏற்க விரும்பாதவர்கள்தான், மலைவாழ் மக்களாக ஆகினர். அவர்கள், நாம் முன்னரே குறிப்பிட்டபடி, வடஇந்திய திராவிட / தமிழ் மொழிகள் பேசும் குடிகளாக உள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான், வேத இலக்கியத்தை நாம் அணுகி, சரியான புரிதலை அடைய வேண்டியவர்களாக உள்ளோம். அதுவே இன்று மொழிவழி இன அடையாளம் இழந்து, பண்பாட்டு அடையாளத்தில் கரைந்துபோன வடஇந்திய திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தை அடையாளப்படுத்தும் காரணியாகிறது.

(தொடரும்)

மேற்கோள்  குறிப்பு

1. முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும், (மொழி - பெ.பா.ரா. சுப்பிரமணியன்) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, 2010, பக்.10, 29-31.

2. Witzel, Michael, “Central Asian Roots and Accularation in Asian”, essay (1996) in ‘Indus Civilization: Text and Context’, (ed), Toshiki Osada, New Delhi, 2006.

3. முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும், (மொழி - பெ.பா.ரா. சுப்பிரமணியன்) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, 2010, ப.10.

4. Iravatham Magadevan, Journal of Tamil Studies, Vol-I, April 1970, IITS, Chennai, pp.82-85.

5. கோசாம்பி.டி.டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com