அத்தியாயம் 71 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

இருவகைப்பட்ட விலக்குகளையும் மக்கள் புனிதமான நடத்தை விதிகளாக ஏற்று கடைப்பிடித்து வருகின்றனர். விலக்குகள், சமூகத்தினரால் தடைகள் மற்றும் ஒழுக்க விதிகளாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
அத்தியாயம் 71 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தொல் மனிதர்களின் வழிபாட்டில் முக்கியப் பங்காற்றியதும், இன்றுவரை அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் இருப்பது ‘விலக்கு’ நம்பிக்கை ஆகும். விலக்குகள் பண்டைய மனிதனின் எழுதப்படாத சட்டம் என்ற கருத்தும் (வில்லியம் வுண்ட்), விலக்கு நம்பிக்கைகள் கடவுள் - சமயம் போன்ற நம்பிக்கைகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்டன என்ற கருத்தும் (வில் டியூராண்ட்) இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை. இவை இரண்டும் விலக்கு நம்பிக்கையின் மிகப் பழமையானத் தோற்றம் மற்றும் மனித இனத்தில் அது பெற்றுள்ள இடம் பற்றி விளக்கிவருகின்றன. இன்றைய நிலையில், வில்லியம் வுண்டின் கருத்தை, “விலக்குகள் தொன்மை மனிதனால் உருவாக்கப்பட்டு தற்காலச் சமூகத்திலும் ஆழமானத் தாக்கத்தைக் கொண்டிருக்கும் எழுதப்படாத சட்டம்” என்று விரிவாக்கிக் கூறலாம்.

விலக்கு (Taboo)

குலக்குறி வழிபாடு ஆய்வுகள் மற்றும் அதன் விவாதங்களின் ஊடே மானிடவியல் ஆய்வாளர்கள் கண்டடைந்த ஒன்றுதான் ‘விலக்கு’. இன்றைய அளவில் விலக்கு நம்பிக்கையானது புனிதம், புனிதமற்றது அல்லது சுத்தமானது, தீட்டானது என்ற இரு முனைகளின் இடைவெளிகளில் இருந்து விளக்கப்பெறுகிறது. அடிப்படையில், விலக்கு நம்பிக்கையும் குலக்குறி வழிபாட்டின் பார்ப்பட்டதே என சிலர் கருதுகின்றனர். இதனை குலக்குறியாகக் கொள்ளப்பட்ட விலங்கு, தாவரம் அல்லது இயற்கைப் பொருட்களைப் புனிதமானதாகக் கருதி அதனை தங்களின், தம் சமூகத்தின் தீவிர விலக்காகக் கொள்வது குலக்குறி வழிபாட்டின் முக்கியக் குணங்களில் ஒன்றாகும். குலக்குறியாகக் கொள்ளப்பட்ட விலங்கின் இறைச்சியை உண்ணாது இருப்பதும் விலக்காக எடுத்துக்கொள்ளப்படும். இன்றைய நடைமுறையில் சில சமூகங்களிடையே, “இவ்விலங்கின் கறி எங்கள் சாமிக்கு ஆகாது” என்று விலக்கிவைக்கும் வழக்கம் உள்ளது. இதுவும் விலக்கு நடைமுறையே. அதே சமயத்தில், விதிவிலக்காகச் சிறப்பான சடங்குகளின் பொழுது, குலக்குறியாக விளங்கும் விலங்கின் இறைச்சியை உண்பது புனிதமாகக் கருதப்படுகிறது. இதனால், தனது மூதாதையருடன் தங்களைத் தொடர்புபடுத்திக்கொண்டதாகவும், அவர்களுடன் தாம் இரண்டறக் கலந்துவிட்டதாகவும் நம்பிக்கை உள்ளது. பிற்காலத்தில், சில மனிதர், விலங்குப் பெயர்கள், உணவுகள், கருவிகள் போன்றவையும் விலக்குகளாக அமைத்துக்கொள்ளப்பட்டன.

விலக்கின் இரு வகைகள்

நிரந்தர விலக்கு மற்றும் தாற்காலிக விலக்கு என இருவகைப்பட்டதாக விலக்கு நடைமுறை உள்ளது.

1. நிரந்தர விலக்கு

நிரந்தர விலக்கு என்பது காலம் காலமாக மரபுவழியாகத் தொடரப்படுவது. தலைவர்கள், பூசாரிகள், தெய்வங்கள், இறந்த முன்னோர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்புடைய பொருட்கள் ஆகியவை நிரந்தர விலக்குகள் வரிசையில் இடம்பெறுகின்றன. தெய்வம், பூசை தொடர்பான பொருள்கள் புனிதம் கருதி விலக்கப்பட்ட பொருட்களாக, காலங்காலமாக மக்களால் கருதப்பட்டு வருகின்றன. இதனுடன் நன்றி உணர்ச்சி, அச்ச உணர்ச்சி மற்றும் குற்ற உணர்ச்சி காரணமாகவும் பொருட்கள் சில விலக்கப்படுகின்றன. இம்மூன்று உணர்ச்சிகளின் வயப்பட்டவையே தொல்மனிதனால் விலக்குகளாக முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பிற அனைத்தும், பிற்காலத்தில் அவ்வப்பொழுது இணைத்துக்கொள்ளப்பட்டவையாக இருக்க வேண்டும்.

2. தாற்காலிக விலக்கு

தற்காலச் சமூகத்தின் பெரும்பான்மையான தாற்காலிக விலக்குகள், பெண்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதைக் காணமுடிகிறது. தாற்காலிக விலக்குகள் என்பவை நேரடியாகத் தொல்மனிதனின் வழிபாட்டுடன் தொடர்புடையவையாக இருப்பதில்லை. அவை பெரும்பாலும், மேட்டிமைச் சிந்தனை, அச்ச உணர்ச்சி காரணமாக; குறிப்பாகப் பெண்ணினத்தின் உடல் மாறுபாடு மற்றும் அவர்களது உடலியக்க மாறுபாடு சார்ந்த அச்ச உணர்ச்சி மற்றும் தூய்மைச் சிந்தனையின் காரணமாக உருவாக்கப்பட்டவையாக உள்ளன. சான்றாக மாதவிலக்கு, குழந்தைப்பேறு மற்றும் தொழில் சார்ந்தவற்றிலும், பூசைகளில் பங்கேற்பதற்கான விலக்கு போன்றவை பெண்கள் கடைப்பிடிக்கும், அல்லது கடைப்பிடிக்க விதிக்கப்படும் தாற்காலிக விலக்குகள் ஆகும். இதேபோன்று, தொழில் முனையும்பொழுதும் தங்கள் தொழில் தொடர்பாக பல்வேறு விலக்குகளைக் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பிட்ட அந்த நேரம் மட்டுமே இவ்வகையான விலக்குகள் கடைப்பிடிக்கப்படும். எல்லா பொழுதுகளிலும் அல்ல. உதாரணமாக, மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது, பெண்களுடன் உடலுறவு கொள்வதில்லை. வேளாண்மை மற்றும் மங்களகரமான நிகழ்ச்சிகளின்பொழுது, விதவைகள் விலக்கப்படுகின்றனர் என்பதும் இவ்வகையானதே.

இன்றளவிலும், இருவகைப்பட்ட விலக்குகளையும் மக்கள் புனிதமான நடத்தை விதிகளாக ஏற்று கடைப்பிடித்து வருகின்றனர். விலக்குகள், சமூகத்தினரால் தடைகள் மற்றும் ஒழுக்க விதிகளாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதே சமயத்தில், ஒரு சமுதாயத்தில் விலக்காக உள்ள நடைமுறை ஒன்று வேறொரு சமூகத்தில் விலக்கற்ற ஒன்றாக இருக்கக்கூடும். விலக்குகள் ஒரு குழுவில் அல்லது ஒரு குலத்தின் உட்பிரிவுகளுக்கு இடையேகூட மாறுதல் கொண்டதாகவும், விலக்கு விலக்கற்ற ஒன்றாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.

விலக்குகளின் பண்புகளும் நோக்கங்களும் பற்றி மானுடவியல் அறிஞர்களால் பலப்பலவாக விளக்கப்பட்டிருக்கின்றன. “மனிதன் அல்லது பொருட்களின் புனிதமான அல்லது புனிதமற்ற பண்பு; இதன் காரணமாக சமூக வழக்கில் உருவாக்கப்பட்ட விலக்கு வகைகள்; விலக்குகளை மீறுவதால் ஏற்படும் தூய்மையற்ற தன்மை” ஆகியவை பண்பு நலத்தில் முக்கியமான இடத்தை வகிக்கின்றன என்றும், “சமுதாயத்தில் முக்கிய உறுப்பினர்களாகிய தலைவர், பூசாரி போன்றவர்களைப் பாதுகாத்து, அவர்களது மந்திர சக்திகளின் மூலம் குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாத்தல் மற்றும் நோயிலிருந்து எளியோரைக் காத்தல்; குறிப்பிட்ட சிலவகை உணவுகளை உண்பதாலும், பிணங்களைத் தொடுவதாலும், பார்ப்பதலும் ஏற்படும் தீமையில் இருந்து மக்களைக் காத்தல்; சமூகத்தில் இறப்பு, திருமணம் மற்றும் பாலியல் செயல்பாடுகளில் இடையூறு உருவாகாத நிலையை உறுதிசெய்தல், தீய ஆவிகளில் இருந்து மக்களைக் காத்தல்; சிறு குழந்தைகளையும், கருவிலிருக்கும் குழந்தைகளையும் பாதுகாத்தல்” போன்றவை விலக்கு நம்பிக்கையின் முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன. இவை எக்காலங்களில் விலக்குகள் ஆக்கப்பட்டன என்பதற்கு விடை காண்பது எளிதன்று. அவை அவ்வப்பொழுது தேவைக்கு ஏற்ப நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதை அவ்வவ் சமூகங்களின் மானுடவியல் தெளிவிக்கும்.

தற்கால விலக்குகள் தூய்மை கருதியவை என்ற கருத்தியல், குறிப்பாக பெண் தொடர்பான விலக்குகள் சமூகத்தில் புகுத்தப்பட்ட ஆண் மையவாத கருத்தியல்களின் பின்னணியில் உருக்கப்பட்டவையா என்ற கேள்வி எழுகிறது. தொல்மனிதனின் வளமை சார்ந்த, குறிப்பாக உயிர்மைப்பொருளாகக் கருதப்பட்ட மாதவிலக்கு ரத்தம் பற்றிய கருத்தியல்களுக்கும், இது தொடர்பான விலக்கு நம்பிக்கைக்கும் பெருமளவு வித்தியாசம் உள்ளதால் இதற்கான பதில் ஆம் என்ற முனையையே அடைகிறது. பயிர் வளர்ச்சி, தானியப் பெருக்கம், கால்நடைகளின் பெருக்கம் என்பதோடு உடலுறவு செயல்பாடு பெற்றிருந்த பண்டைய நம்பிக்கையும் இதனோடே இணைத்துக் காண வேண்டியதே.

தூய்மை கருதி விலக்கப்பட்டதாக விளக்கப்படும் பெண்ணின் உடலியக்கம் சார்ந்த மாதவிலக்கு போன்றவை பண்டையச் சமூகத்திலும், பழங்குடி நம்பிக்கையிலும் இன்றைய விளக்கத்தோடு பொருந்துவதாக இல்லை என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது. ஆதியில் இவை இறந்தோரை மறுவுயிர்ப்பிக்கும் வளமைச் சக்திகளாகவே இருந்தன. தொல் மனிதர்கள், வேட்டையின்பொழுது அடிபட்ட விலங்கானது ரத்தம் சிந்துவதன் வாயிலாக உயிரிழப்பதைக் கண்ணுற்றனர். ரத்த இழப்பானது உயிர் இழப்பை ஏற்படுத்துவதால், ரத்தமே உயிர்மைப் பொருள் எனத் தெளிந்தனர். இதனைத் தொடர்ந்து, இறந்தோர் மீது ரத்தத்தைச் சேர்ப்பதன் வழியே அவர்க்கு மீண்டும் உயிர்ப்பு அளிக்க இயலும் என்று உறுதியாக நம்பினர். அதாவது, இறந்தோரை மறுஉயிர்ப்பதற்கும் ரத்தமே உணவு என்று கருதினர். இதனால் ரத்தப்படையல் தொடங்கி, உயிர்ப்பலி வரை மறுஉயிர்ப்பிக்கும் சடங்கியல் மரபானது மனித சமூகத்தால் தொடர்ந்து நிகழ்த்தப்படலாயிற்று. (யுத்தபூமி தொடரில், சன்னியாசிக்கல் வழிபாடு அத்தியாயங்களை இதனுடன் பொருத்திக் காண்க). காலம் செல்லச்செல்ல, ரத்தத்தின் செந்நிறமே மறுஉயிர்ப்பிக்கும் தன்மை கொண்டது என்ற நம்பிக்கையில் செந்நிறம் கொண்ட பொருள்கள் அனைத்துமே உயிர்மைப்பொருளாகக் கருதப்படலாயின. இவ்வகையில் செந்தூரம், செந்நிறமி, செந்நிறத் துகில் (செந்நிறத் துணி), செஞ்சுடர்த் தீ என்பனவும், மறுபக்கம் மாதவிலக்கு ரத்தம், உமிழ்நீர், சிறுநீர் என்பனவும் உயிர்மைப் பொருளாகக் கருதப்படுகின்றன. உயிரற்ற பயன்பாட்டுக் கருவிகளுக்குச் செந்தூரம் இடுவதும், புனிதப் பொருட்களைச் செந்நிறத் துகிலில் பொதிந்துவைப்பதும், இயல் தெய்வத்துக்காக மேற்கொள்ளும் ரகசியச் சடங்கின்பொழுது அதன் வரைஓவிய உருவுக்கு செந்நிறமிப் பூச்சு பூசுவதும், இறந்தோரை செஞ்சுடர்த் தீயில் இடுவதும், மங்கல நிகழ்வுகளின்பொழுது மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த செந்நிற ‘ஆலத்தி’ எடுத்தலும் இதற்குச் சான்றுகளாகக் காட்டலாம். இங்கு, “சவரர் பழங்குடியினர் தமது அம்பு முனையில் உறைந்து வாழும் மீயியல் ஆற்றலான மனா சக்தி, தொடர் பயன்பாட்டினால் தனது ஆற்றலை இழக்க நேரிடுவதாகக் கருதி, அதனை மறுஉயிர்ப்பிக்க மகளிரின் மாதவிலக்கு ரத்தம் படும்வகையில், அவர்கள் வந்துபோகும் நீர்நிலைக்கான பாதைகளில் தம் அம்புகளைப் போட்டு வைக்கின்றனர்”*1 என்ற கருத்தும் காட்டத்தக்கதாக உள்ளது. இது தொல்குடியின் விலக்கு நம்பிக்கையில் தீட்டு சுத்தம் என்ற பொருள்பெற்றதாக மாதவிலக்கும், அதன் உடலியல் செயல்பாடான ரத்தப்போக்கும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

“நெருப்பினை உண்டாக்கும், அதாவது யாகத்தீ உருவாக்கும் செயலில் ஆண்-பெண் சேர்க்கையைக் கற்பனை செய்வது ஆரம்பகால வேதகால மக்களுக்கு முக்கியமானதாகும். மேலும், வாஜஸ்னேயி சம்கிதையின் அஸ்வமேத யாகத்தில் உரையாடலுடன் கூடிய பாலுறவு நிகழ்ச்சி மிக முக்கியமானதாகும்” என எடுத்துக்காட்டுவார் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா.*2 தாந்த்ரீகத்தின் பகுதியான வாமசாரத்தினை மீதான இக்கால அறிஞர்களிடையே எழுந்துள்ள பலத்த வெறுப்பே, இந்த மாதரியான பெண் சார்ந்த விலக்குகள் விதிக்கப்பட்டன எனலாம். ரிக் முதல் பிராமணங்கள் வரை, இவ்வகையான விலக்குகள் பற்றி குறிப்பிடவில்லை. மாதவிலக்கு பற்றி அவை பேசவில்லை எனினும், அஸ்வமேதம், சோமயாகச் சடங்குகளின்பொழுது ஆண்-பெண் உடலுறவு கொள்வது குறித்து நிறையப் பேசுகின்றன எனும்பொழுது, இவ்விலக்குகள் பிற்காலத்தில் புகுத்தப்பட்டவை என்பதை எளிதில் அடையச் செய்துவிடுகிறது. பழங்குடிச் சமூகத்தினரிடையே பெண் உடலியக்கம் சார்ந்த நம்பிக்கைகள், உதாரணமாக பேறுகாலத்தில் பெண்கள் தனிக்குடிலில் தங்குவது, பூப்பெய்திய பெண்கள் குறிப்பிட்ட காலம் தனிக்குடிலில் தங்குவது போன்றவை வேறுவகைப்பட்டவை. அவை நேரடியாக இறை வழிபாட்டோடு, சடங்கு நிகழ்வோடு தொடர்புடைய விலக்குகள் அல்ல.

நிரந்தர விலக்கோ, தாற்காலிக விலக்கோ எதுவாயினும், விலக்கின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள, பழங்குடிச் சிந்தனை மரபின் பின்புலத்தில்தான் காண வேண்டுமமே தவிர, தற்காலச் சிந்தனை பிடிக்கு உட்பட்டல்ல. இப்பின்னணியில், தொன்மைச் சமூகத்தின் குலக்குறி வழிபாட்டையும் விலக்கு நம்பிக்கையினையும் நுட்பமாகப் பகுத்துப் பார்த்தால், விலக்கு நம்பிகையானது அடிப்படையில் தொல் மனிதர்களிடையே நிலவிய அச்ச உணர்வு, நன்றி உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, இயற்கை வழிபாடு, ஆவி வழிபாடு மற்றும் மூதாதையர் வழிபாடு போன்று பல நம்பிக்கைகளில் இருந்தும், வளமை குறித்த சிந்தனையும் கொண்டு கிளைத்துள்ளதைக் காணலாம்.

விலக்குப் பற்றிய மிகச் சரியான புரிதல், முன் அத்தியாயத்தில் கண்ட குலக்குறி கோட்பாட்டுடனும், அடுத்துக் காண இருக்கும் போலியுரு வழிபாட்டுக் கோட்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் இருந்தே பிறக்கும். இம்மூன்றும் நெருங்கிய தொடர்புடையவை.

மேற்பார்வை நூல்கள்

1. ஜார்ஜ் தாம்சன், மனித சமூக சாரம், (மொ.பெ), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2. வில் டியுரண்டு, உலக மதங்கள் ஒரு தத்துப்பார்வை, (மொ.பெ), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

3. தே.ஞானசேகரன், நாட்டுப்புற சமயம் தோற்றமும் வளர்ச்சியும், காவ்யா, சென்னை.

4. தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயுதம், (மொ.பெ), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

5. சமூக விஞ்ஞானம், காலாண்டிதழ், மலர் - 13, இதழ் - 50, செப். 2016.

6. Durent Will, Our Orietal Heritage, Simen Schuster, New York, 1954.

7. Sir James George Frazer, Taboo and perils of the Soul, The Macmillan, London.

சான்றெண் விளக்கம்

1. மகேசுவரன். சி, ‘உயிர்ப்பலி’, வாழ்வியல் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை, 1985, மற்றும், மகேசுவரன், ‘பண்பாட்டு ஆய்வில் பயின்றுவரும் சில வளமைக் குறியீடுகள்: ஒரு சமூகப் பண்பாட்டு மானிடவியல் பார்வை’, சமூக விஞ்ஞானம் காலாண்டிதழ், மலர் - 13, இதழ் - 50, சன-மார்ச் 2016, ப.32.

2. தேவிபிரசாத் சத்டோபாத்யாயா, உலகாயுதம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2014, ப.80.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com