அத்தியாயம் 81 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ரிக் வேத இருடிகள் பிராமணர்களாகவும் சத்திரியர்களாகவும், சூத்திரர்களாகவும் தொழில் முறையில் பிரிந்திருக்கவில்லை என்பது தெளிவாக்குகிறது.
அத்தியாயம் 81 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ரிக் சமூகத்தின் பகைவர்கள் யார் அவர்களது குணக்கங்கள் என்ன என்பது குறித்து சென்ற அத்தியாயத்தில் (யுத்தபூமி 80) அறிமுகம் காணப்பட்டது. பகைச் சமூகங்களுடன் ரிக் சமூகம் தொடுத்த மற்றும் எதிர்கொண்ட போர்கள் குறித்து ரிக் தெரிவிக்கும் செய்திகளை ஆராயும் முன், ரிக் சமுதாயத்துக்கும் அதற்குப்பின் யசூர் வேதம் அடையாளப்படுத்தும் சமுதாயத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாட்டை நாம் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. யஜுர் காலத்தில் விரவியிருந்த சமூகங்களை அது நமக்கு காட்சிப்படுதுகிறது. ரிக் சமுதாயத்தை நமக்கு வேறு வகைப்பட்ட தனி ஒன்றாக அது அடையாளப்படுத்துகிறது.

ரிக் சமுதாயம்

உண்மையில், ரிக் சமுதாயம் என்பது எது? அவர்களின் பூர்வீகம் எது? அவர்களை நாம் அழைப்பதுபோல் இந்தோ-ஈரானியர், இந்தோ- ஆரியர், ஆரியர், பிராமணர் போன்ற பெயர் அடையாளங்கள் அல்லது இனக்குழு அடையாளங்கள் எந்த அளவு பொருந்தும்; ரிக்கில் இவற்றுக்கான சான்றுகள் என்ன? இப்பெயர்கள் நாம் குறிப்பிடும் பொருளில்தான் இருக்கின்றனவா? அல்லது நமக்குக் கற்பிக்கப்பட்ட பொருளில் இருக்கின்றனவா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். ஏனெனில், ரிக் சமுதாய அமைப்பு பற்றி அறிவது, அவர் நடத்திய போர் நிகழ்வுகளின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள உதவும். இவ்வுதவுதல் இன்றி மேல் செல்வதும் கடினமாகும். மேலும், பிற்காலத்தில் கட்டமைக்கப்பட்ட சாதிய ரீதியான சமூக நெறிமுறைகள் அல்லது வாழ்வியல் தளங்களும் ரிக் - யஜுர் கால சமூக அமைப்புகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிவதற்கும் இது உதவும்.

ரிக் சமூகத்தின் பகைவர் யார் என்பதை ரிக் வேதத்தின் பழைய இருடிகள் முதல் கடைசி இருடி வரை தெளிவாக உரைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அக்காலத்தின் ரிக் சமுதாய அமைப்பு எவ்வாறு அமைந்திருந்தது என்று அறிய போதுமான குறிப்புகளை அவர்கள் விட்டுச்செல்லவில்லை. மண்டலம் 10 தெரிவிக்கும் குறிப்பாக நான்கு வர்ணங்களாகப் பிளவுற்றிருந்த சமூகங்களில், போர் மற்றும் ஆட்சியாளராக இருக்கும் சத்திரியச் சமூகம் குறித்து தெளிவான சான்றுகளை ரிக் அளிப்பதில்லை. வைசியன் என்ற பிரிவினையும் காணமுடியவில்லை. வணிகர்களும் விவசாயிகளுமான வைசியன் இடத்தில் ‘பணிகள்’ என்ற அவர்களின் எதிரிகளே சித்தரிக்கப்படுகின்றனர். சூத்திரர்களும் தனித்துத் தெரிவதில்லை. ரிக் சமூகத்தின் பகைவர்கள் அனைவரையும் சூத்திரன் என்று அழைக்கின்றார்களோ என்று எடுத்துக்கொள்ளவும் இடமுண்டு.

ரிக் முழுவதும் புரோகிதர்களாகவும் மத குருக்களாகவும், குழுத் தலைவர்களாகவும், படைத் தலைவர்களாகவும், போர்க்களத்தில் முன்னிற்பவர்களாகவும் இருக்கும் இருடிகளையே காட்டுகிறது. இந்நிலையால், ரிக் வேத இருடிகள் பிராமணர்களாகவும் சத்திரியர்களாகவும், சூத்திரர்களாகவும் தொழில் முறையில் பிரிந்திருக்கவில்லை என்பது தெளிவாக்குகிறது.

யஜுர் வேதத்தின் சில குறிப்புகள் கொண்டு, ரிக்குக்குப் பிந்தையச் சமுதாய அமைப்பை அறிய முடிகிறது. இந்த அமைப்புதான் ரிக் காலத்திலும் இருந்ததா அல்லது ரிக் காலச் சமுதாய அமைப்பிலிருந்து யஜுர் வேத காலச் சமுதாய அமைப்பு எந்த அளவு வேறுபட்டதாக உள்ளது என துல்லியமாக அறியமுடியாது உள்ளோம்.

சுக்கில யஜுர் அத்தியாயம் 26, அநுவாகம் 392-இன் 2-ஆம் பாடல், அதன் காலத்தில் எத்தகைய சமுதாய அமைப்பினைக் கொண்டிருந்தது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றது. ‘நான் (மங்களமான வேதத்தை உபதேசம் செய்பவன்) பிராமணனுக்கும், சத்திரியனுக்கும், சூத்திரனுக்கும், ஆரியனுக்கும், அருகில் உள்ளவனுக்கும், அந்நியனுக்கும் எல்லா சனங்களுக்கும் இம்மங்களமான வேதத்தை உபதேசம் செய்கிறேன்’.

இப்பாடலில் உள்ள சமுதாயத்தின் பிரிவுகள் அல்லது சமூகங்கள், அன்றைய சமுதாயத்தில் இடம்பெற்றவர்களை அல்லது வேள்வி நிகழ்வின்பொழுது இடம் பெற்றவர்களைப் பற்றி அறிய உதவுகிறது. அவர்கள் பிராமணன், சத்திரியன், சூத்திரன், ஆரியன், அந்நியன் மற்றும் அருகில் உள்ளோன் ஆகியோர்.

முதலில், மங்களமான வேதத்தை உபதேசம் செய்பவன் யார் என்றால் ரிக் வேத இருடி என்று கொள்ளலாம். இவர் தன்னை பிராமணன் என்று குறிப்பிடுகிறாரா என்று தெளிவில்லை. ஆனால், அவர் பிராமணர்களுக்கும் தன் மங்களமான வேதத்தை உபதேசம் செய்வதாகக் குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் முதல் மூவர், பிரம்ம சூத்திரத்தின்படி பிறப்பின் அடிப்படையானவர்கள். பிரம்ம சூத்திரம் தெரிவிக்கும் வைசியர் இதில் இடம்பெறவில்லை. வணிகர்களாகவும், விவசாயம் புரிபவர்களுமாக, தொழிலாளர்களுமாக உள்ள வைசியர் குறிப்பிடப்படாமை ஏனென்று விளக்கிக்கொள்ள முடியாத புதிராக இருக்கிறது. ஒருவேளை, இக்காலத்தே இவர்களுள் இப்பிரிவினர் தோன்றியிருக்கவில்லை என கூறமுடியாது உள்ளது. அதே சமயத்தில், அந்நியன், அருகில் உள்ளோன் மற்றும் எல்லா சனங்களும் என்று குறிப்பிடும் பிரிவினருள் இவர்கள் அடங்கியிருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். இதனால், இப்பாடல் அக்கால சமூகங்கள் அனைத்தையும் காட்டுகிறது என்று கொள்ள முடியாது. சூத்திரனை கூறிய பிறகு இவர் ஆரியனையும், அருகில் உள்ளோனுக்கும், அந்நியனுக்கும் பிற எல்லா சனங்களுக்கும் என வரிசைப்படுத்துகிறார்.

இப்பாடலில் பிராமணர்கள் தனியாகவும், ஆரியர்கள் தனியாகவும் இருந்த சமுதாய அமைப்பைக் காணமுடிகிறது. அதாவது, இவ்விரு சமூகங்களைச் சார்ந்தவர்களும் வேறுவேறானவர்கள் என்று காட்டப்படுகின்றனர். இது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. வேறுவகையில் குறிப்பிட்டால் அல்லது வரலாறு நெடுக நமக்குப் போதிக்கப்பட்டுவருவதுபோல், எல்லா ஆரியர்களும் பிராமணர்கள் இல்லை என்பதும், பிராமணர்கள் எல்லோரும் ஆரியர் மட்டுமல்லர் என்பதையும் இது காட்டுகிறது எனலாம். இது நுட்பமாக ஆராயப்பட வேண்டியதும், வரலாற்று நோக்கிலும், மானுடவியல் நோக்கிலும் கவனிக்க வேண்டிய குறிப்பாகும்.

மேற்படி யஜுர் பாடல், ஆரியரை வேறாக, தனி சமூகமாகக் காட்டுவதால், நம்மிடை கற்பிதத்தில் உள்ள ஒருமுகப்படுத்தப்பட்ட ரிக் சமூகம், ஆரியச் சமூகம், பிராமணியச் சமூகம் பற்றிய செய்திகள் உண்மைக்கு மாறுபட்டவை என்பது தெளிவாகிறது. இத்தெளிவு இரண்டு உண்மைகளை நமக்கு அளிக்கிறது. முதலாவது, அக்காலத்தே பிராமணச் சமூகம் வேறு. அது தனியாக விளங்கிய ஒன்று என்பது. இரண்டாவது ஆரியச் சமூகம். இது, பிராமணியச் சமூகத்தில் இருந்து தனித்து இயங்கியது என்பது. இத்தெளிவின் காரணமாக, ரிக் வேத சமூகத்தை முழுமையான ஆரியர் சமூகம் என்று குறிப்பிடுவது சரியல்ல என்பதை உணர்த்துகிறது. இது குறித்த மேலாய்வுக்கு மானுடவியலாளர்களிடம் விடுகிறேன். ரிக் வேதத்தில் தனி பிராமணர்கள் இல்லை என்பதால், யஜுர் காலத்தில் யாகம் இயற்றும் பிராமணர்கள் என்ற தொழில் முறை சமூகத்தினர் உருவானார்கள் என்பது எளிதில் விளக்கமாகிறது.

இந்த சுக்கில யஜுர் பாடல், நமக்கு பகைவர்கள் யாரையும் அடையாளப்படுத்தவில்லை. அல்லது யார் தம் மங்கள வேதத்தை கேட்கக் கூடாதவர்; யார் விலகியிருக்க வேண்டியவர் என்பதை தெரிவிப்பதில்லை. சரியாகச் சொன்னால், இந்த யஜுர்ப் பாடல் சூத்திரன், அந்நியன் உள்பட தம்மைச் சுற்றி வாழும் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறது. யாகத்தில் பங்கேற்கச் செய்கிறது. இம்மங்களமான வேத உபசேதத்தை அளிக்கச் செய்கிறது. விதிவிலக்காக, ரிக் வேதம் தனி குழுவாகக் காட்டும் பணிக்களைத் தவிர.

ரிக் சமூகமும் பஞ்ச சமூகமும்

ரிக் காலச் சமூகம் பற்றிய ஒரு குறிப்பாக, ‘பஞ்ச சனங்கள் மற்றும் நாடோடிகளான நிசாதர்கள்’ என்று ரிக் காட்டுகிறது (ரிக் 9:77-1). பஞ்ச சனங்கள் என்று மட்டும் ஒரு பாடல் குறிப்பிடுகிறது (ரிக் 3:7-9). சாயானர், பஞ்ச சனங்கள் யாவர் என்பதற்கு நான்கு வர்ணத்தினர் மற்றும் நிசாதர்களைக் குறிக்கும் என்பார் (1:7-9 உ.கு. = உரைக் குறிப்பு). சாயானர் மற்றொரு இடத்தில் தேவதைகள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், அசுரர்கள் மற்றும் ராட்சதர்கள் என்போர் என்கிறார். ஆனால் இது, துருவாசர்கள், யதுக்கள், அனுஷுக்கள். திருஹ்யுக்கள் (துருஹ்யுக்கள்) மற்றும் புருக்கள் ஆகிய ஐந்து ரிக் சமூகத்தினரைக் குறிப்பதே தகும் (1:7-9 உ.கு.). இந்த ஐந்து இனக் குழுவினர் அல்லது இக்குழுக்களில் இருந்து பிரிந்த கிளைக் குழுவினருடன் ரிக் வேத இருடிகளில் முக்கிய இருடிகள் அனைவரும் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். பிருகு திருஹ்யுவுடனும், அத்திரி மற்றும் கிருத்மைத் இருவரும் புருவுடனும்; கன்வர் யதுக்களுடனும்; பரஜ்வாஜர், வசிட்டர், விசுவாமித்திரர் மூவரும் புருவின் கிளைக் குழுவினரான பரதவர்களுடனும் தீர்க்கதாமா, மாதேயா ஆகியோர் பரத - திருஹ்யுவுடனும் தொடர்புடையவர்களாகவும் உள்ளனர். திருஹ்யுவும் புருவின் கிளைக் குழுவில் ஒன்றே.

பஞ்ச சனங்களில் திருஹ்யு குழுவுடன் பிருகு தொடர்புடையவர் என்பதும், அத்ரி, கிருதசமத் புரு குழுவுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெளிவாக உள்ளது. யதுக்களின் தலைமை புரோகிதர் அல்லது இருடி பற்றிய குறிப்பு கிடைக்கவில்லை. யதுக்களே பின்னர் யாதவர் குழுக்களாக அறியப்பட்டனர். வசிட்டரின் சகோதரரான அகத்தியர், இந்திரனை நோக்கி யதுக்களையும், துர்வஸுக்களை சந்தித்து அவர்களுக்கு மங்களம் வழங்க வேண்டுகிறார். இச்செயல், இவர் இவ்விரு குழுவுக்கும் ஆதரவாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. ஆனால், இவரது ஆதரவு ஆயுதமேந்திய ஆதரவல்ல.

புரு இனக் குழுவில் அறிய வரும் மன்னர்கள்: புருகுத்ச, அவர் மகன் திரஸ்தஸ்யு, அவர் மகன் குருஸ்ரவன். பிற்காலத்தில் புகழ் பெற்ற மற்றொரு குழுவான புருவில் இருந்து பிரிந்த ‘குரு’ வம்சம், இந்த குருஸ்வரன் உருவாக்கிய கிளைக் குழு என கருதப்படுகிறது. உண்மையில், குரு வம்சம் தோன்றியது ரிக் காலத்துக்குப் பிறகே.

ஐந்து பண்டைய இனக் குழுவில், நாம் மிகவும் போற்றும் ‘பரதர்’ இனக் குழுவுக்கும் இடமில்லை. புரு என்ற பழைமை வாய்ந்த இனக் குழு பின்னர் பல குழுக்களாகப் பிரிந்துள்ளது. பரத, த்ரித்ஸீ, குஷிக் ஆகிய இனக்குழுப் பெயர்கள், புருவின் கிளைக் குடிகளாக அறியமுடிகிறது. குஷிக் இனக் குழுத் தலைவர் விஸ்வாமித்திரர். பரதர்களின் தலைவர்களாக தாத்தா, மகன், பேரன் உறவுமுறை உள்ள வத்ரயஷ்வன், திவோதாஸ் மற்றும் சுதாஸ் ஆகியோர் உள்ளனர். திவோதாஸ் மற்றும் சுதாஸ் இருவரும் புரு-பரதர் என அழைக்கப்பட்டதுடன், திரித்ஸு கிளை இனக் குழுவின் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். பிற்காலத்தில், மூலக் குழுவினரான புரு இனக் குழுவினர், தம் கிளைக் குழுவினரான பரத கிளைக் குழுவினருடன் வேறுபட்டுப் பிரிந்தனர். இப்பிரிவின் ஆழத்தை, ‘பத்து மன்னர்கள் யுத்த’த்தில் காண்கிறோம்.

புருவினர், பரதவர்கள் பக்கமில்லாமல் அவர்கள் எதிரிகள் பக்கம் நிற்கின்றனர். இங்கு, கிளைக் குழுவினர் என்ற பகுப்பை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளலாம். திவோதாஸ்தான் முதன் முதலாக புரு-பரதர் என குறிக்கப்படுகிறான். இது, பரத குழுவின் தலைவனான திவோதாஸ் புரு இனக் குழுவினரை தன் ஆளுமைக்குக் கீழ் கொண்டுவந்த நிகழ்வின் பொருட்டாகவும் இப்பெயரடையை பெற்றிருக்கிறான் எனலாம். பரதர்களின் ஒரு பிரிவு திரித்ஸு என்பதும், திரித்ஸு என்ற இனக்குழுவை தம் ஆளுமைக்குக் கீழ் கொண்டுவந்ததால், அக் குழு பரதர்களுக்கு உள்பட்ட குழு என்பதன் பொருளாக, பரதர்களின் ஒரு பிரிவு எனக் குறிக்கப்பட்டதாகக் கொள்ளலாம். இவ்வாறே குஷிக் குழுவையும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கட்டத்தில், புருவினர் பரதர்களிடமிருந்து விடுபட்டு தனித்துவம் பெற்றிருக்கின்றனர். தனித்துவம் பெற்ற நிலையில்தான், அவர்கள் பத்து மன்னர்கள் யுத்தத்தில் பரதவர்களுக்கு எதிராக அணி திரண்டனர்.

பஞ்ச சனங்கள் என்ற எண், ஐந்தின் அடிப்படையிலான தொகுப்பை பிற்காலத்திலும், பிராமணர்களின் இரு பெரும் பிரிவான பஞ்ச திராவிடர் மற்றும் பஞ்ச கெளடர் என்று பிரித்துக் காண்பதிலும் எதிரொலிக்கக் காண்கிறோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com