அத்தியாயம் 82 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

இந்திரன் இன்றி ரிக் சமூகத்துக்கு வெற்றியும் இல்லை; படை பலமும் இல்லை; மேலாக, போர்க்களம் இமில்லை எனும்பொழுது, இந்திரன் யார் என்ற தேடுதல் அவசியமாகிறது.
அத்தியாயம் 82 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

முந்தைய அத்தியாயத்தில் (அத்தியாயம் 81), யஜுர் வேத காலத்திய இருடிகள் தம்மைச் சுற்றியிருந்த சமூகங்கள் பற்றிய சித்தரிப்பைக் கொண்டு பார்த்தால், அவர்கள் எச்சமூகத்தையும் தம் பகைச் சமூகமாகவோ அல்லது தம்மிடமிருந்து விலகியிருக்க வேண்டியவர்கள் யாவர் என்றோ தெரிவிக்கவில்லை என்பதைக் கண்டோம். கிருஷ்ண மற்றும் சுக்கில யஜுர்களில் வேறு எங்கும் நண்பர்கள் - பகைவர்கள் பற்றிய செய்தியைக் காணமுடிவதில்லை. இது ரிக் காலகட்டத்துக்குப் பிறகு ஏற்பட்ட சிந்தனை மாற்றமாக இருக்கலாம். ஆனால், நான்கு வேதங்களுக்குப் பின்னரான பிராமணங்களின் காலத்தில் இருந்து பகைச் சமூகங்கள், நட்புச் சமூகங்கள், விலக்கி வைக்கப்பட வேண்டிய சமூகங்கள் பற்றிய செய்திகள் கட்டமைக்கப்பட்டு, அவை தற்காலம் வரை நீடித்திருக்கும் வகையில் உறுதியாகக் கெட்டிப்படுவதைக் காண்கிறோம்.

யஜுர் காட்சிக்கு மாறாக, ரிக் சமூகம் தம் பகைவர்களை, தாம் வெற்றி கொண்டவர்களை, தம்மை அச்சுறுத்துபவர்களைப் பற்றி தொடர்ச்சியாகவும் திரும்பத் திரும்பவும் பேசுகின்றன. காலத்தால் மூத்த அல்லது ரிக்கை இயற்றிய முதல் தலைமுறையினரான வசிட்டர், பரத்வாஜரும், காலத்தால் மிகவும் பிற்பட்ட 10-ஆம் மண்டலத்து இருடிகளும், இடைச்சேர்க்கைப் பாடல்களும், இச்செய்திகளை ஏறத்தாழ தம்தம் சமகாலத்திய நிகழ்வுகளாகப் பெருமிதத்துடனும் அகங்காரத்துடனும் சித்தரித்துப் பாடுகின்றன.

ரிக் சமூகம் தாம் புரிந்த யுத்தங்களைப் பண்பாட்டு ரீதியிலான அல்லது இன ரீதியிலான யுத்தமாகக் காட்சிப்படுத்துவதில்லை. அவ்வாறு உணர்த்தும் தொனியையும் அவை கொண்டிருப்பதில்லை. இவற்றின் பகைமையின் அடிப்படையாக இருப்பது தம் சொத்துக்களான ஆநிரைகளுக்கான மேய்த்தல் நிலம் தேடிய பரவல் மற்றும் பொருளியல் காரணங்களே. மேய்த்தல் நிலத்தைத் தேடுவதுடன் மருதத் திணை சார்ந்த வேளாண் நிலங்களையும் மேய்த்தல் நிலமாக்கும் பேரவாவும் இதில் தோய்ந்துள்ளது. இதனால், வேளாண்மைக்கு உருவாக்கப்பட்ட நீர்வள ஆதார அமைப்புகளை உருவாக்கியவர்கள் எல்லோரும் ரிக் இருடிகளால் தூற்றப்படுகின்றனர். அந்நோக்கில் எழுப்பப்பட்ட கட்டுமானங்கள் யாவும் எவை எதற்காக எழுப்பப்பட்டன என்ற புரிதல் இன்றி துகளாக்கப்படுகின்றன.

பகைவர் மற்றும் போர்கள் குறித்த செய்திகளூடே, சப்த சிந்துவில் ரிக் சமூகம் குடியேறியிருந்த இடங்களை அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு அவசியத் தேவையாகிறது. இது ரிக் சமூகம் நிகழ்த்திய போர்கள் எங்கிருந்து எவர் மீது எவ்விடத்தில் நடத்தப்பட்டது என்பதை அறிய உதவும். உண்மையில், தாம் குடியேறியிருந்த இடங்களைத் தெரிவிக்கும் ரிக் பாடல்கள், தம் பகைவர்களின் இடங்களைத் துல்லியமாகத் தெரிவிப்பதில்லை. ஆனால் சில யூகங்களைத் தருகின்றன.

இவ்வட்டவணை, புருஷ்ணி ஆற்றினை மையப்படுத்தி, அதன் இருபுறமுள்ள விபாஷ் மற்றும் அஸிக்னி ஆறுகளுக்கு இடையே கூட்டமாக இவர்கள் குடியேறியிருந்தனர் என்பதைக் காட்டுகிறது. சுதுத்ரி, விபாஷுக்கு மேற்கே ஓடும் ஆறாகும். சப்த சிந்து என்று குறிப்பிடப்படும் ஏழு ஆறுகளில் மூன்று ஆறுகளுக்கு இடையே இவர்கள் முதற்கட்டமாக நெருங்கி வாழ்ந்தனர் என்பது இதன்மூலம் வெளிச்சமாகிறது.

இவ்வாறுகளின் தற்காலப் பெயர்களைக் காண்போம். புருஷ்ணி - ‘ராவி’ என்றும் ‘இராவதி’ என்றும் அழைக்கப்படுகிறது. அஸிக்னி -‘சீனாப்’ என்றும் ‘சந்திரபாகா’ என்றும் அழைக்கப்படுகிறது. விபாஷ் அல்லது விபாட் - ‘விதஸ்தா’ என்றும் ‘ஜேலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. சிந்து - ‘சிந்து’ என பெயர் மாறாமல் உள்ளது. சுதுத்ரி - ‘சதுக்கி’ எனவும், சரஸ்வதி - இன்று ‘கக்கர்’ எனவும் உள்ளன.

இந்த இடம் தொடர்பான செய்திகளுடன், ரிக் வேத இருடிகள் எதிர்கொண்ட தாசர், தஸ்யு போன்ற பகைச் சமூகத்தினரின் படைத் தளபதிகள் குறித்த செய்திகளை ரிக் வேத இருடிகள் தங்கள் பாடல்களில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

சம்ரன் – ரிக் சமூகத்தின் முதல் பகைவன்

தாசன், தஸ்யு, பணி ஆகிய மூன்று பெயர்கள் ரிக் சமூகத்தின் முக்கியப் பகைவர்களின் பெயர்களாக இருக்கின்றன. இவற்றுடன், பெரும் அழிவைச் சந்தித்த கிருஷ்ணர்களையும் இணைத்துக்கொள்ளலாம். ரிக் சுட்டும் யுத்தங்களில், இச்சொற்கள் பெயரற்ற அரசன், தளபதி, தலைவன் போன்று தனிநபரையும் அல்லது பகை இனத்தையும், சமூகத்தையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

பெயர் குறிப்பிடப்படுபவர்களுள் ரிக் சமூகத்தினரின் முக்கியமான எதிரிகள் சம்பரனும் அவனைச் சார்ந்த மலைவாழ் மக்களுமாவர். சம்பரனின் முக்கிய எதிரி திவோதாஸ். இவர்களுக்கு இடையேயான பகை இன்ன காரணத்துக்காக உருவானது என்பதோ, அது எவ்வாறு உண்டானது என்பதோ நேரடியாக எங்கும் சொல்லப்படவில்லை. தம் எதிரி எனக் கருதுபவர்கள் மீது ரிக் இருடிகள் எழுதும் சித்தரிப்புகள் வழியாக சில காரணங்களை நாம் அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த அடையாளங்களைத் தாண்டி, ரிக் சமூக மக்களின் மேய்த்தல் நிலங்கள் தேடிய முன்னேற்றத்தை வலிமையாகக் தடுத்ததால் இப்பகை உருவானது என்பதை யூகித்துக்கொள்ள முடிகிறது.

சம்பரன், வெற்றிகொள்ள இயலாத நூறு மலைக் கோட்டைகளை வைத்திருந்தான். ரிக் இருடிகள், மலைக் கோட்டைகளைப் ‘புரங்கள்’ என்று குறிப்பிடுகின்றனர். இப்புரங்களை திவோதாஸ் அழித்தொழித்தான். ரிக் இருடிகள், பல தலைமுறைகள் கடந்தும் இவ்வெற்றியினை அசை போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். ரிக் சமூகத்தினர் சந்தித்த பெரும் யுத்தங்களில் சம்பரனுடனான யுத்தமே மிகப் பெரியது. அவர்கள் புரிந்த நீண்டகால யுத்தமும் இதுவே. நாற்பது ஆண்டுகள் இப்போர் நிகழ்கிறது. இப்போர், பரதர் இனக் குழுவுக்கும் சம்பரன் இனக் குழுவுக்கும் நடத்த போர் என்று நாம் குறித்துக்கொள்ள வேண்டும். இப்போரை நடத்திய மன்னன் திவோதாஸ். இப்போருக்குப் படை நடத்திச் செல்ல பணிக்கப்பட்டவர்கள் முதலில் பரத்வாஜர், பின்னர் வசிட்டர்.

முதலில், இவ்வெற்றி திவோதாஸுக்கு உரித்தாக்கப்படுகிறது. ‘சம்பரனை வென்ற திவோதாஸை நூறு புரங்களை அழித்தவன். அதாவது, நூறு கோட்டைகளை அழித்தவன்’ என்று புகழ்வதே ரிக் மந்திரங்களின் சாரம் என வேடிக்கையாகக் குறிப்பிடப்படுவதுண்டு. இது வேடிக்கையும் இல்லை; மிகையான கூற்றும் இல்லை.

சம்பரனும் அவனது தளபதிகளும்

சம்பரனின் தளபதிகள் இவர்கள் என எப்பெயரும் ரிக்கில் இல்லை. சம்பரனின் பக்கம் நின்றவர்கள் குறித்த சில பெயர்கள் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன. அவர்களின் வீரதீரங்கள், படை யுக்திகள் அவர்களை சாதாரண படைவீரனில் இருந்து உயர்ந்த நிலையைப் பெற்றவர்கள் என்பதைக் காட்டுகிறது. இதன் காரணமாக இவர்களை தளபதிகளாகப் பார்க்கலாம். இந்தவகையில், சுஷ்ணன், பிப்ரு வங்கிருத், கரஞ்ச், பர்ணய், வர்ச்சி ஆகியோர் சம்பரனுக்குத் தளபதிகளாக இருந்துள்ளனர். இந்திரனுடன் இவர்கள் போரிட்டு மாய்ந்ததை பல பாடல்களால் அறியலாம். இதனூடே, இந்திரன் முதலானவர்களின் சாகசச் செயல்கள் மற்றும் புகழுரைகள் நமக்குப் பல ரிக் சமூகத்தினரின் எதிரிகளையும், நண்பர்களாக மாறிப்போன வேற்று சமூகத்தினரையும் அறிமுகம் செய்துவைக்கிறது. இது குறித்து, வரும் அத்தியாயங்களில் காண்போம்.

இந்திரனுக்குரியதாகும் திவோதாஸ், பரத்வாஜர், வசிட்டரின் வெற்றி

சம்பரன் மீதான இவ்வெற்றி, அரசனான திவோதாஸுக்கு உரியதாகக் குறிக்கப்படும் அதேவேளையில், இவ்வெற்றி இந்திரனுக்கும் உரியதாகிறது. ஆனால் திவோசாஸ், இந்திரன் அல்லன்; அவன் இந்திரனாக உருவகிக்கப்படுவதில்லை. உண்மையில், இப்போருக்குத் தலைமையேற்று நடத்தியவர்களான பரத்வாஜருக்கோ, வசிட்டருக்கோ இவ்வெற்றியின் புகழ் உரித்தாக்கப்படவில்லை; இவர்களும் இந்திரர்களாக்கப்படவில்லை. மன்னனும் தளபதியும் இந்திரனாகவில்லை என்னும்பொழுது, யாரெல்லாம் இந்திரனாக்கப்பட்டனர்; யாரெல்லாம் இந்திரப் புகழுக்கு உரித்தானவர்களாக இருந்தனர் என்ற கேள்வி எழுகிறது. மீண்டும் ஒன்றை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டுகிறேன். புராணங்கள் காட்டும் இந்திரன், ரிக் வேத இந்திரனில் இருந்து வேறுபட்டவன். ரிக் வேத இந்திரனின் வேர்தான் புராண இந்திரனாக கிளைக்கிறது. சந்தேகமில்லை. ஆனால், புராண இந்திரனின் எல்லா குணங்களையும் ரிக் இந்திரன் பிரதிபளிப்பவனல்லன். பெருவீரன், வெற்றியினை ஈட்டுபவன், வஜ்ராயுதத்தை ஏந்தியவன் என்ற ஒற்றுமையைவிட வேறு ஒற்றுமைகள் இல்லை.

திவோதாஸாலும், பரத்வாஜராலும் வசிட்டராலும் ஈட்டப்பட்ட இவ்வெற்றி, பின்னர் இந்திரனுக்கு உரித்தாக்கப்படுவது முரண் போன்று தோன்றினாலும், உண்மையில் மேய்த்தல் சமூகமான ரிக் சமூகத்தின் ஆநிரைப் பூசல்களின் கடவுள் இந்திரன். சரியான பொருளில் தமிழக மரபில் ஆநிரை காக்கும், மீட்கும், ஈட்டும் (அதாவது காக்கும் அல்லது கொள்ளையிடு என்ற கொள்ளும்) வீரனான வேடியப்பன்-ஆக இருக்கிறான். தமிழகப் பின்னணியில், வீரமரணத்துக்குப் பிறகு வேடியப்பன் நடுகல் தெய்வமாகின்றார். ரிக் சமூகத்தில் வெற்றியை ஈட்டி உயிருடன் உள்ள வீரன் வேடியப்பன் ஆகிறான். அதாவது, இந்திரனாகிறான். இந்திரனுக்குப் பிறகு இவ்வெற்றியில் வருணன், அக்னி, இந்திராக்கினி, சோமன், மருத்துக்கள் போன்றோருக்கும் தொடர்பு தரப்படுகிறது. ஒரு சாரம் கொண்ட சித்தரிப்புகளில், இந்திரன் பெயருக்கு மாற்றாக இவர்கள் பெயர் இடம்பெறும்.

தம்தம் காலத்துக்கு முற்பட்டதாயினும், சம்பரனுடனான இவ்வெற்றியை பின்னாள்களில் எல்லா ரிக் சமூகங்களும் தமது வெற்றியைப்போல கொண்டாடுகின்றன. எல்லா இருடிகளும் தம் வெற்றியென சித்தரிக்கின்றனர். இருடிகளும், இந்திரனைப் புகழும் எல்லா இருடிகளின் வார்த்தைகளும் சம்பரனை அழித்தவனே என்று ஓயாமல் புகழ்கின்றன. அவ்வெற்றியைப்போல தங்களின் எல்லாப் போர்களின் முடிவும் இருக்க வேண்டும் என்பதே ரிக் இருடிகளின் பேரவா.

விருத்திரனும் மகத்தான போரும்

ரிக்கில் ‘விருத்திரன் என்ற சொல்’ ரிக் சமூகத்தின் பகைவர்களைக் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகவும் இருக்கிறது. அதேசமயத்தில், ரிக் சமூகத்தினர் செய்த மகத்தான போர் என்பது விருத்திரனுடன் நடந்த போர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், அது சம்பரனுடன் நடத்திய போரைவிட எவ்வளவு பெரியது என்பதை தெரிவிப்பதில்லை.

ரிக் சமூகத்தினரின் பகைவர்களும் அவர்களது குணங்களும்

அத்தியாயம் 80-ல், ரிக் சமூகத்தின் பகவர்களான தாசர் மற்றும் தஸ்யு சமூகங்கள் குறித்தும், ரிக் மற்றும் அதன் பகைச் சமூகங்களின் பண்பாடு, பொருளியல், வாழ்வியல் மற்றும் தத்துவ வேறுபாடுகள் பற்றியும் கண்டோம். இங்கு, அப்பகைவர்களின் தலைவர்கள், தளபதிகள், வீர்ர்கள் போன்றோர் குறித்துச் சொல்லப்படும் குணங்களின் குறிப்புகள் சிலவற்றைக் காணலாம்.

ரிக் சமூகத்தினருக்கு சம்பரனைத் தவிரவும், பகைச் சமூகத்தினராக உள்ள விருத்திரன், அஹி, சுஷ்ணா, நமூசி, பிப்ரு, சம்பரா, உரணா (1:4-9. உ.கு. = உரை குறிப்பு) ஆகியோர், நீர்த்தாரைகளைத் தடுத்து வறட்சியை ஏற்படுத்தும் அரக்கர்கள் என்று காட்டப்படுகின்றனர். இவர்களோடு வியம்சனும் இணைக்கப்படுவான்.

சுஷ்ணா, மாயாவியான சுஷ்ணா (1:11-7) என்று குறிக்கப்படுகிறான். உலரவைத்தல் அல்லது வறட்சியை ஏற்படுத்துபவன் என்றும் பொருள்கொள்வர். இது, இவன் நீரைத் தேக்கிவைத்ததால் உருவான சூழலைச் சுட்டுகிறதாகவும் கொள்ள முடியும். இவனே, கொம்புகள் உள்ள சுஷ்ணா எனவும் குறிப்பிடப்படுகிறான். இது அவனது தலையலங்காரத்தைக் குறிக்கலாம். கொம்புகள் அணிவது பலத்தைக் குறிக்கப் பயன்பட்டு இருக்கலாம் என்பது உரை குறிப்பு. இது இவனது சாமியாடிப் பண்பையும், தலைமை நிலையையும் காட்டுகிறது எனக் கொள்ளலாம். வசிட்டர், பரத்வாஜர் போன்ற இருடிகளும் சாமியாடி நிலையில் இருந்தவர்கள் என்று அத்தியாயம் 76-ல் ஆய்ந்து கண்டதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

வலன் அல்லது வலா என்பவன் விருத்திரனின் சகோதரன் (1:10-5). கிருஷ்ணர்கள், பணி, தஸ்சு (செல்வனான தஸ்யு), யக்ஞங்கள் செய்யாதிருப்பவர்கள் (1:33-4); காஞ்சன், பர்ணயன், வங்கிருதன் (1:53-8), சிம்யுக்கள், குயவான், ரெளஹிணன், திரிபீகன், அத்வர்யு, சுவசனன், வியம்சன், ருத்திக்கிரான், சுமுரி, துனி, கிரிவி, மிருகயன் மற்றும் பிப்ரு, வானில் சஞ்சரிக்கும் அரக்கர்கள் என சித்தரிக்கப்படுகின்றனர்.

ரிக் சமூகத்திலிருந்து பெண்கள் போர்க்களத்தில் நின்றது குறித்த செய்தி இல்லை. ஆனால், தாசர்களின் பெண்களும் போர்க்களத்தில் உறுதியாக நின்று போர் புரிந்தனர். இதனை, ‘தாசனான நமூசி, ஸ்திரீகளைத் தன் ஆயுதங்களாகச் செய்துகொண்டான்’ என்ற இருடி பிப்ரு ஆத்திரேயனின் வார்த்தைகளில் இருந்து அறியமுடிகிறது. இதனையும் ஒரு முக்கியப் பண்பாட்டு வேறுபாடாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்திரன் யார் என்பது பற்றிய குறிப்புகள்

இந்திரன் இன்றி ரிக் சமூகத்துக்கு வெற்றியும் இல்லை; படை பலமும் இல்லை; மேலாக, போர்க்களம் இமில்லை எனும்பொழுது, இந்திரன் யார் என்ற தேடுதல் அவசியமாகிறது. இந்த அத்தியாயம் உள்பட, முன் சில அத்தியாயங்களில் இந்திரன் யார் என்ற தேடுதலில் பெற்ற சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளோம். ஆனால், ரிக் சமூகத்துக்கு வெற்றிகளை ஈட்டித்தரும் இந்திரன் யார் என்ற கோள்விக்கான பதிலை இன்னும் ஆழமாகத் தேட வேண்டும்.

இங்கு குறிக்கப்படும் இரு குறிப்புகள், ரிக் சமூக இந்திரனை அடையாளப்படுத்தும் முக்கிய இரு புள்ளிகளாகக் கொள்ளலாம்.

இந்திரனை ‘குசிகனின் மகன்’ என்று சுட்டும் இருடி மதுச்சந்த வைசுவாமித்திரனின் பாடலான (1:10-11), ‘இந்திரனே! குசிகனின் மகனே! துரிதமாக வரவும்’ என்பது முதற்புள்ளி. இவ்வரிகளை நம் தோடுதலுக்கான முதல் படியாகக் கொண்டும் துவக்கலாம்.

இந்திரன், பகைச் சமூகத்துக்கும் உரியவன்

இரண்டாவது புள்ளி, இந்திரன் ரிக் சமூகத்தினரின் கடவுள் மட்டுமல்லன்; அவன் பகைச் சமூகத்தினராலும் வணங்கப்பட்டான் என்பது. இதனை, இருடி சுஹோத்ர பரத்வாஜ், இந்திரனை நோக்கிக் கூறும் வார்த்தைகளில் இருந்து தெளியலாம். ‘... நீ மானிடர்களை உன்னுடைய இரு கைகளில் ஏந்துகிறாய். அவர்கள், புதல்வர்களையும் வீரப் போர்களையும் அடைய பல துதிகளோடு உன்னைப் போற்றுகிறார்கள்’. (ரிக்: 6:31-1) இவ்வரிகள், இந்திரன் ரிக் சமூகத்துக்கு மட்டும் உரியவனாக இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com