தமிழ்நாடு

புதுவைக் கடலில் டிசம்பர் முதல் டால்பின் சுற்றுலா: வனத் துறை திட்டம்

DIN

புதுவைக் கடலில் டிசம்பர் முதல் டால்பின் சுற்றுலா: வனத் துறை திட்டம்
கோவாவைப் போல புதுச்சேரியிலும் நடுக்கடல் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளை படகில் அழைத்துச் சென்று, டால்பின்களை காண்பிக்கும் திட்டத்தை, வருகிற டிசம்பர் முதல் செயல்படுத்த வனத் துறை திட்டமிட்டுள்ளது.
 கடலில் வாழும் பெரிய மீன் இனங்களில் ஒன்றான டால்பின்கள் மனிதனுடன் நெருங்கிப் பழகும் தன்மையுடையது.
 இந்த டால்பின்கள், புதுவை கடல்பரப்பில் அரிதாக காணப்படுகின்றன. குறிப்பாக, டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை புதுவையை ஒட்டிய நடுக்கடல் பகுதியில் அதிகமாகக் காணப்படும் டால்பின்களை சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்க்கும் வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில் புதுவை வனத் துறை ஈடுபட்டுள்ளது.
 இந்தத் திட்டம் குறித்து புதுவை வனப் பாதுகாவலர் குமார் கூறியது: புதுவையில் சூழலியல் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக, பயணிகளை படகில் அழைத்துச் சென்று டால்பின்களை காட்டும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 பொதுவாக டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையில் புதுவை கடல்பரப்புக்கு டால்பின்கள் வரும்.
 அவை கரையில் இருந்து சுமார் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவில் நீந்தும். டால்பின்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவற்றின் வருகையிடங்கள் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்படும்.
 அதன் பின்னர் சுற்றுலா பயணிகளை படகு மூலம் டால்பின்கள் வரும் இடங்களுக்கு அழைத்துச் செல்வோம்.


 இதற்காக அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இது போன்ற டால்பின்களை காட்டும் திட்டம், கோவாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் உதவி பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
 டால்பின் சுற்றுலாவுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் படகின் விலை சுமார் ரூ.48 லட்சம். அதனால் முதலில் வாடகை படகு மூலம் திட்டத்தை செயல்படுத்தி விட்டு, வருவாய் அதிகரிக்கும்போது சொந்தப் படகு வாங்கப்படும்.


 சூழலியல் (எகோ-டூரிஸம்) சுற்றுலாவின் ஒரு பகுதியாக உள்ள இதனை வனத்துறையே செயல்படுத்தலாம். சுற்றுலாத் துறையின் பங்களிப்பு தேவைப்படாது. அநேகமாக இந்த டிசம்பர் மாதத்திலேயே டால்பின் சுற்றுலாவை தொடங்கும் முனைப்பில் வனத்துறை உள்ளது என்றார் குமார்.
வனத்துக்குள் சைக்கிள் சவாரி
 சூழலியல் சுற்றுலாவின் ஒரு பகுதியாக காட்டுக்குள் சைக்கிளில் சென்று சுற்றிப் பார்க்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
 காடுகளே இல்லாத புதுச்சேரியில், வனத் துறை உருவாக்கப்பட்ட பிறகு பல இடங்களில் அதிகளவு மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பசுமைப் போர்வையை அதிகரிக்கும் நோக்கில் ஒரே இடத்தில் அதிக மரங்களை நட்டு காடுகளும் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் புதுவையின் பசுமைப் பரப்பு 17 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.


 இது போன்ற செயற்கை வனப்பகுதிகள் மணப்பட்டு, காட்டேரிகுப்பம், வாதானூர் உள்ளிட்ட இடங்களில் உள்ளன.
 இந்த வனப்பகுதிகளில் சிறிய காட்டு உயிரினங்கள், பறவைகள் ஆகியவை வசிக்கின்றன. இவ்வாறு வனப்பகுதிகளில் சூழலியல் சுற்றுலா திட்டத்தை வனத் துறை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுவை நகரப் பகுதிக்கு அருகில் உள்ள மணப்பட்டு வனத்தில் சைக்கிள் சவாரி செய்யும் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வனப்பகுதியில் சைக்கிள் செல்லும் அளவுக்கு சிறிய பாதை ஏற்படுத்தப்படும்.
 இந்தப் பாதையில் சைக்கிள்களை ஓட்டிச் சென்று சுற்றுலாப் பயணிகள் வனத்தை சுற்றிப் பார்க்கலாம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வனத் துறைக்கு வருவாய் கிடைக்கும் என்று வனப்பாதுகாவலர் குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT