மகான் ஆதிசங்கரர் அவதரித்த ‘காலடி’ மண் தேடி ஒரு பயணம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ளது காலடி. இந்த நகரத்துக்குச் செல்ல வேண்டும் என்று வெகு நாட்களாக திட்டமிட்டு வந்தேன்.
மகான் ஆதிசங்கரர் அவதரித்த ‘காலடி’ மண் தேடி ஒரு பயணம்!


கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ளது காலடி. இந்த நகரத்துக்குச் செல்ல வேண்டும் என்று வெகு நாட்களாக திட்டமிட்டு வந்தேன். அது அண்மையில் நிறைவேறியது.
காலடி ஏன்? காலடியில் என்ன சிறப்பு? காலடியில்தான் மகான் ஆதிசங்கரர் அவதரித்தார். அனைத்து ஜீவராசிகளிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை போதித்தவர் இந்த மகான்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து எர்ணாகுளம் சென்றடைந்தேன். அங்கு நண்பர் பாலமுருகன் பணிபுரிந்து வருகிறார். அவரையும் சந்தித்து நீண்ட காலம் ஆனதால் இந்தப் பயணத் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.
மாலை 3 மணியளவில் திருவனந்தபுரம் ரயிலில் ஏறி கேரளத்துக்குப் பயணமானேன். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டுவிட்டேன். ரயில் பயணத்தை நான் மிகவும் விரும்புவேன். அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன். பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று இளைப்பாற கிடைக்கும் நாள்களில் இதுபோன்ற ரயில் பயணங்களை விரும்புவேன். இருள் சூழும் வரை இயற்கை காட்சிகளை ரசித்த படியே அமர்ந்திருந்தேன். தமிழர்கள், மலையாளிகள், வட இந்தியர்கள் என்று ரயிலில் பலவித மனிதர்களின் தரிசனம் கிடைத்தது. அதிகாலை 3 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைந்தேன்.
பால முருகன் வரவேற்று அழைத்துச் சென்றார். சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு, காலடி செல்வதற்கு தயாரானேன். அங்கிருந்து ஆலுவா நகருக்கு பேருந்தில் சென்று பின்னர் அங்கிருந்து வேறொரு பேருந்தில் காலடி செல்ல வேண்டும்.
காலை 9 மணி என்பதால் அனைத்து நகரங்களிலும் இருப்பது போல் கூட்டம் அலைமோதியது. பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் என்று பரபரப்பாக இருந்தனர் கேரள மக்கள். சமீபத்தில் புரட்டிப் போட்ட வெள்ள பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு மீண்டிருந்தது எர்ணாகுளம். சில இடங்களில் வெள்ள பாதிப்பின் தடங்களை பார்க்க முடிந்தது. 1 மணி நேரத்தில் ஆலுவா சென்றடைந்தோம்.
கேரளத்துக்கு எப்போது சென்றாலும் காலை உணவாக புட்டு கடலை உண்பதை மிகவும் விரும்புவேன்.
நம்ம ஊரில் இட்லி, சாம்பார் போல் கேரளத்தில் புட்டும், கடலையும் மிகவும் விரும்பப்படும் காலை உணவாக இருந்து வருகிறது.
பெரும்பாலான உணவகங்களில் புட்டு கடலை, இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா ஆகியவை காலை உணவாக அங்கு கிடைக்கின்றன.
ஆலுவா பேருந்து நிறுத்தம் அருகே வரிசையாக சில உணவகங்கள் இருந்தன. அதில் ஒரு உணவகத்துக்குச் சென்று அமர்ந்தோம். நண்பர், என்ன வேண்டும் ? இட்லி அல்லது தோசை சாப்பிடுகிறயா? என்று கேட்டார்.
நான், புட்டுக் கடலை ! என்றேன் விழி விரிய.
புட்டுக் கடலை சாப்பிட்டுவிட்டு, சாயா (தேநீர்) குடித்தோம். காரசாரமாக இருந்த கடலை பின்னர் சூடான சாயா என்று நாவிற்கு இதமாக இருந்தது.
அங்கிருந்து காலடிக்கு செல்லும் பேருந்துக்காக 15 நிமிடங்கள் வரை காத்திருக்க நேர்ந்தது. பின்னர், அந்தப் பேருந்தும் வந்தது. காலியாக இருந்த பேருந்தில் எங்கள் இருவரையும் சேர்த்து 10 பேர் வரை மட்டுமே இருந்திருப்போம்.
வெயில் சற்று அதிகம் என்றாலும் சாலை இருப்பதே மரங்களுக்கு நடுவில் என்பதால் குளிர் தென்றல் வீசிக் கொண்டே இருந்தது.
நெடுஞ்சாலை வழி இல்லாததால், பல சிற்றூர்கள் வழியாக பேருந்து வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது.
கேரளத்தில் பேருந்துகளை அதிவேகமாகவே ஓட்டுநர்கள் இயக்குகின்றனர் என்று எனக்கு தோன்றுகிறது. நண்பரும் அதை வழிமொழிந்தார்.
அவ்வப்போது விபத்துகள் நேர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களின் வேகத்துக்கு பேருந்தும் ஈடுகொடுக்கிறது. மலை பகுதிகளில் செல்வதற்கு ஏற்ற வகையில் டாடா தயாரிப்பிலான பேருந்துகள் அங்கு இயங்குகின்றன.
நம்மூரில் நடத்துநர் விசில் அடிப்பது போல் அங்கில்லை. ஏறும் வழி மற்றும் இறங்கும் வழி இருக்கும் பக்கத்தில் பேருந்தின் ஒரு கோடியிலிருந்து ஓட்டுநர் இன்ஜின் வரை கயிறு ஒன்று கட்டப்பட்டு மணி தொங்கவிடப்பட்டிருக்கிறது. யாராவது இறங்க வேண்டுமானால், அந்தக் கயிறை இழுக்கின்றனர். ஓட்டுநர் அருகே இருக்கும் மணி ஒலித்ததும் வேகம் குறைக்கப்பட்டு வண்டி நிறுத்தப்படுகிறது.
காலடி செல்லும் வழியில் சில இடங்களில் சாலை வசதி சரியாக இல்லாததால் வெகு நேரம் பயணிப்பது போல் இருந்தது. இயற்கையை ரசித்தபடியே 1 மணிநேரத்தில் காலடி சென்றடைந்தோம்.
அந்த ஊர் பேருந்து நிறுத்தத்துக்கு எதிரே பெரிய உயரமான கோபுரம் இருந்தது. பேருந்தை விட்டு இறங்கி சாலையில் நின்றுகொண்டிருந்தவரிடம் அங்கு என்ன?
இருக்கிறது என்று பாலு விசாரித்தார். பின்னர், என்னிடம் எதுவும் கூறாமல் அங்கு அழைத்துச் சென்றார்.
ஆவலுடன் அந்த இடத்துக்குச் சென்றேன். கோபுர வடிவில் இருக்கும் அதற்குள் நுழைந்தோம். படிகள் ஏதுமின்றி வளைந்து ஏறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றி ஏறியபடி நாம் செல்லும்போது ஒரு பக்கத்தில் மகான் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பார்த்து வியந்தேன்.
நாம் எதையும் தொடக் கூடாது என்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அதை கண்காணிப்பதற்கான கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன.
அந்த மண்டபத்தை முழுமையாக பார்த்தால், சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவு அறிந்துகொள்ள முடியும். தமிழர்கள் கணிசமான அளவில் காலடிக்கு வருவதால், தமிழிலும் அவருடைய வரலாறு தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எட்டுமாடி கொண்ட அந்த மண்டபத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே வழிதான். சற்று தலை சுற்றும் மாதிரியாக இருந்தது. அங்கிருந்து அவர் பிறந்த இடம் இருக்கும் இடத்துக்குச் செல்ல திட்டமிட்டோம். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது கொஞ்ச தூரத்தில் இருப்பதாக கூறினார். அதனால், நடந்து செல்லலாம் என்று முடிவு செய்து நடந்தோம். வழியில் சங்கராச்சார்யா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் அமைந்திருந்தது.
இங்கு, சம்ஸ்கிருதம் மற்றும் பிற மொழிகளின் எழுதப்பட்ட முக்கியமான புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன.
புத்தகம் அச்சிடவும் படுகின்றன. பிரதானமாக சம்ஸ்கிருத ஆராய்ச்சிக்கு இந்த பல்கலைக்கழகம் பயன்படுகிறது. காலடியில் இருப்பது பிரதான மையம் (மெயின் காம்பஸ்). இதன் கிளை மையங்கள் தலைநகர் திருவனந்தபுரம் பையனூர், திருச்சூர், பன்மனா, துரவூர், எட்டுமானூர், திரூர், கோயிலாண்டி ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன என்பது கூடுதல் தகவல்.
உச்சி வெயில் எட்டிப்பார்க்கும் நேரம் என்பதால் சோர்வடைந்துவிட்டோம். செல்லும் வழியில் ஒரு கடையில் லெமன் சோடா அருந்தினோம். சற்றே தாகம் தணிந்ததுடன் அந்த வெயிலுக்கு வயிறு குளிர்ந்தது. கடைக்காரரிடம் விசாரித்தபோது சங்கரர் பிறந்த இடம் சற்று தூரத்தில் இருப்பதாகவே தெரிந்தது. ஆனால், புதிய இடம் என்பதாலோ என்னவோ நெடுந்தூரம் செல்வது போலவே இருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு நிச்சயம் இருக்கும்.
பூர்ணா நதிக்கரை அருகே இருந்த மடத்தை கண்டு சென்றடைந்தோம். சிவபெருமானின் வரம் வேண்டி கிடைத்த செல்வம் சங்கரர். இப்போது அங்கு மடம் இருக்கிறது. அவரது தாயார் உடல் தகனம் செய்யப்பட்ட இடமும் இந்த மடத்துக்குள் அமைந்துள்ளது.
அதற்கு வெளியே பூர்ணா நதி ஓடிக்கொண்டிருந்தது. அண்மையில் மழை பெய்திருந்ததால் நீரின் அளவு அதிகமாக இருந்தது.
ஆதிசங்கரரின் இளமைப் பருவத்தில் அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவரால் வெகுதூரத்தில் இருந்த நதியில் சென்று நீராட முடியவில்லை. தாயாருக்காக இறைவனைப் பிரார்த்தித்து நதியை வீடருகே ஓடச் செய்தார் சங்கரர். அந்த நதி இன்றும் காணப்படுகிறது. ஒரு நாள் அவர் நீராடிக் கொண்டிருந்தபோது முதலை அவரது காலை கவ்வியது. அப்போது, அருகில் இருந்த தாயார் செய்வதறியாது தவித்தார். உடனே, எனக்கு நீங்கள் துறவறம் மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு வேண்டினார் சங்கரர். தாயார் சம்மதம் தெரிவித்ததும், முதலை அவரை பிடியிலிருந்து விடுவித்ததாகக் கதை உண்டு.


அந்த இடத்தையும் நம்மால் இன்றும் காண முடியும். தாயாரின் இறுதிகாலத்தில், சங்கரர் ஆகாய மார்க்கமாக வந்ததாக அங்கு வந்த பக்தர் ஒருவர் எங்களிடம் பகிர்ந்துகொண்டார். இன்றளவும், விமானகள் காலடி வழியாக பறந்து செல்லும்போது அவரே இங்கு வந்து செல்வது போல் உணர்வதாக அந்த பெண் கூறக் கேட்டு ஆச்சரியமடைந்தோம்.
நாங்கள் சென்ற வேளை பிற்பகல் என்பதால் மடத்தை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது. அருகில் இருந்த கிருஷ்ணர் கோயிலின் மூலவர் சன்னிதானம் மூடப்பட்டிருந்தது.
எனினும், கோயிலுக்குள் சென்று வலம் வந்தோம் (கேரளத்தில் பெரும்பாலான ஹிந்து கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது என்ற வழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது). மீண்டும் மாலை 4 மணிக்கு மேல்தான் கோயில் சன்னிதானம் திறக்கப்படும் என்று தெரியவந்தது. மறுமுறை வாய்ப்பு கிடைக்கும்போது அங்கு சென்று கிருஷ்ணரை வழிபட வேண்டும் என்று விரும்புகிறேன். மகான் பிறந்த மண்ணில் நின்றுகொண்டிருந்தது ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
பின்னர், அங்கிருந்து ஆட்டோவில் காலடி பேருந்து நிலையம் வந்தோம். ஆட்டோ கட்டணம் ரூ.30! (2 கி.மீ. முதல் 3 கி.மீ. தொலைவுக்கு இந்தக் கட்டணம். நம்மூரை நினைத்துக் கொண்டேன்.) பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டிருக்கும் நேரத்திலும் அங்கு ஆட்டோ கட்டணம் கி.மீ.-க்கு இவ்வளவு என்று விதிகளை பின்பற்றி வருவது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. பின்னர், அங்கிருந்து கல்லூரி நண்பர் சஞ்சய் ஜெயப்பிரகாஷை சந்திக்க திரிபுனித்துராவுக்குச் சென்றோம்.
மாலை 3 மணி இருக்கும். மழை பொழியத் தொடங்கியது. நான் சென்ற அக்டோபர் மாதம் இப்படிதான் இருக்குமாம். காலையில் சுட்டெரிக்கும் வெயில். பிற்பகலுக்கு பிறகு மழை.
நண்பர் சஞ்சய் இல்லத்தில் நன்கு உபசரித்தார். பின்னர், பலத்த மழைக்கு நடுவில் அந்நகரில் இருந்த சென்ட்ரல் திரையரங்கத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். ஃபகத் பாசில் நடிப்பில் வர்த்தன் என்ற படத்தை பார்த்தோம்.
திரையரங்கமும், படமும் சிறப்பாக இருந்தது. அந்த மாநில ரசிகர்களின் எண்ண ஓட்டத்தையும் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது.
அங்கிருந்து மீண்டும் எர்ணாகுளத்துக்கு இரவு 9 மணிக்கு வந்தோம். அடுத்த நாள் கொச்சியில் மேனகா என்ற இடத்துக்கு சென்றோம். சென்னையில் உள்ள தி.நகர் போல் உள்ளது. ஆடைகள், உணவுப் பண்டங்கள், முந்திரி, பாதம், ஏலக்காய், மிளகு போன்ற பொருள்கள் குறைந்த விலையில் கிடைத்தன.
ஷாப்பிங்கை முடித்துவிட்டு அங்கிருந்து எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்துக்கு வந்தோம். அங்கு ஒரு கடையில் இளநீர் மில்க் ஷேக்கை வாங்கிக் கொடுத்தார் நண்பர். இளநீரையும், தேங்காயையும் மிக்ஸியில் அரைத்து பால் சேர்த்து கொடுக்கிறார்கள். உடலில் உஷ்ணத்தை உடனடியாகக் குறைக்குமாம். மிகவும் இனிப்புச் சுவையுடன் இருந்தது.

சிறப்பாக அமைந்தது காலடி பயணமும் !

எப்படி செல்வது?
சென்னையிலிருந்து காலடி செல்ல விரும்புவர்கள் திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் ஆலுவா வரை முன்பதிவு செய்துகொள்ளலாம். விழா காலம் தவிர்த்து மற்ற தினங்களில் ஒரு மாதத்துக்கு முன்பு கூட ரயிலில் இருக்கை கிடைக்கும். அந்நகரில் இருந்து காலடிக்கு சுமார் 1 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
காலடியில் மேலும் பல கோயில்களும், பார்க்க வேண்டிய இடங்களும் உள்ளன.
தங்கும் விடுதி வசதிகளும் இருப்பதால் 2 தினங்கள் தங்கினால் பல அனைத்து இடங்களையும் ஆட்டோவில் சென்று கூட சுற்றி பார்த்து விடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com