ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: "நல்ல' எண்ணெய்!

சமீப காலமாக அறுபது வயதைக் கடந்தவர்கள் பலர் ஞாபகமறதியால் அவதியுறுவதாகவும், மலம் ஜலம் தங்களை அறியாமலேயே கழித்து விடுவதாகவும் கூறி மருந்துவமனைக்கு வருகின்றனர்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: "நல்ல' எண்ணெய்!

சமீப காலமாக அறுபது வயதைக் கடந்தவர்கள் பலர் ஞாபகமறதியால் அவதியுறுவதாகவும், மலம் ஜலம் தங்களை அறியாமலேயே கழித்துவிடுவதாகவும் கூறி மருந்துவமனைக்கு வருகின்றனர். இதற்கு ஆயுர்வேதத்தில் தீர்வு உள்ளதா ?

- கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.

"வாதம் ஸ்நேஹேன மத்ரவத்' என்று கூறுகிறது ஆயுர்வேதம். அதாவது நெய்ப்புப் பொருட்களாகிய நெய், மஜ்ஜை, வûஸ, தைலம் எனும் நான்கும் வாதம் எனும் தோஷத்தை அடக்கி வைப்பதில் நண்பர்கள் என்று கூறலாம். வயோதிகத்தில் வாத தோஷத்தின் சில குணங்களாகிய வறட்சியும், குளிர்ச்சியும், சலனமும் இயற்கையாகவே உடலில் சீற்றமுறுவதால், நாடி நரம்புகளில் அவற்றின் தாக்கம் உணரப்படுவதாலும், அவற்றிலுள்ள நெய்ப்பும், சூடும் மாறுவதாலும், ஞாபகமறதி, தாம் அறியாமலேயே மலம், சிறுநீர் கழித்துவிடுவதையும் உணரத் தொடங்குவர். இந்த பாதிப்பைத் தவிர்ப்பதற்கான சில வழிகளில் ஒன்றான, உச்சி முதல் உள்ளங்கால் வரை அடிக்கடி எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும், உணவில் நெய் சேர்த்துக் கொள்வதையும் நம் முன்னோர் கடைப்பிடித்து வந்தனர். நல்லெண்ணெய் அல்லது மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்பட்ட நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி, நரம்புகள் தொய்வடையாமல் பார்த்துக் கொண்டனர். மறைந்து போன இந்த சம்பிரதாயம், மறுபடியும் தொடங்கினால் தான் வயோதிக உபாதைகளை நாம் இனி பெருமளவில் தவிர்க்க இயலும். இதில் ஏற்படும் சலிப்பு, நேரமின்மை, குடும்பச்சூழ்நிலை, பொருளாதாரம் போன்றவை எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்கு பெரும் தடையாக இருக்கிறது. தானே செய்து கொள்வதைக் காட்டிலும், பிறர் வெதுவெதுப்பான எண்ணெய்யை தலையில் தேய்த்து விடுவதும், முதுகுத்தண்டுவடம், இடுப்பு, கை, கால், மார்பு, வயிறு எனும் அனைத்துப் பகுதிகளிலும் நீவிவிட்டு, சுமார் முக்கால் மணி நேரம் ஊறி, காலை வெயில் உடலில் படும்படி அமர்ந்திருந்து, கிணற்று நீரின் வெதுவெதுப்பான தன்மையைப் பயன்படுத்தி குளித்த கிராமங்கள் இன்று இல்லாமற் போனதன் விளைவே, நீங்கள் குறிப்பிடும் பாதிப்புகளுக்குக் காரணமாகின்றன. மன அமைதியில்லாத, மரியாதையும் குறைந்து போன வயோதிகத்தில் உள்ளவர்களுக்கு, வாயுவின் தாக்கமானது மிக விரைவில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மகிழ்ச்சியும், பிறர் தன்னைப் பெருமைப்பட பேசுவதும், அன்பான வாழ்க்கைச் சூழலும், மன அழுத்தமில்லாத வாழ்க்கையும் அமைந்தவர்களுக்கு, இயற்கையாகவே மூளையைச் சார்ந்த நரம்பு மண்டலத்தில், நெய்ப்பும், கனமும் ஒருங்கே பாதுகாக்கப்படுவதால், நரம்பு உபாதைகள் பெருமளவில் ஏற்படுவதில்லை.

புத்தி, ஞாபகசக்தி, ஞாபகத்திலுள்ள விஷயங்களைச் சரியான தருணத்தில் வெளிப்படுத்தும் திறமை, பசி சீராக எடுத்தல் ஆகியவற்றை விரும்பும் நபர்கள் அனைவரும், பசு நெய்யை பயன்படுத்துவதின் மூலமாக அவற்றைப் பெறுகின்றனர். பசு நெய்யில் மூலிகைகளைக் கொண்டு காய்ச்சப்படும் சில ஆயுர்வேத மருந்துகளாகிய ஸாரஸ்வதக்ருதம், பிராம்மீக்ருதம், கல்யாணக கிருதம், பஞ்சகவ்ய கிருதம் போன்றவை ஞாபகமறதியைக் குணப்படுத்தக் கூடிய சிறப்பான மருந்துகளாகும். அவரவர் உடலின் தன்மைக்கேற்ப தேர்ந்தெடுத்துச் சாப்பிடப்பட வேண்டிய அற்புதமான மருந்துகள் இவை.

வயோதிகத்தில் ஏற்படும் கொழுப்புக் கட்டிகள், புரையோடிய புண், பௌத்திரம், குடல்கிருமிகள், கபத்தின் தாக்கத்தால் ஏற்படும் இருமல், மூச்சிரைப்பு, உடல்பருமன் மற்றும் வாதநோய்களுக்கு நல்லெண்ணெய்யும், அதைக் கொண்டு காய்ச்சப்படும் மூலிகை மருந்துகளும் தரமானவை.

காற்று, வெயில் , அதிகநடை, பாரம் சுமத்தல்,  உடற்பயிற்சி போன்றவற்றால் உடல் மெலிந்தவர்கள் நீர்வற்றிய உடல் நிலை, அதிக உழைப்பைத் தாங்கும் திடம் கொண்டவர்கள், அதிகப்பசி, வாயுவினால் உட்புற குழாய் அடைப்பு உள்ளவர்களுக்கு வûஸயும், மஜ்ஜையும் ஏற்றவை. அதிலும் முக்கியமாக, மூட்டுகளில் வலி, எலும்பு வலி, மர்மஸ்தானங்களில் வலி, வயிற்று வலி, நெருப்புக்காயம், அடிபட்டதால் ஏற்படும் புண்கள், கருப்பை இடம் நழுவுதல், காது மற்றும் தலைவலி, தான் அறியாமலேயே மலம், சிறுநீர் கழித்தல் போன்றவற்றுக்கு வûஸ எனும் மிருகக் கொழுப்பு சிறந்தது.

உணவில் சேர்த்தும், எனிமா எனும் ஆசனவாய் வழியாக குடலில் செலுத்தியும், மூக்கினுள் பிழிந்துவிடுவதாலும், உடலில் தேய்ப்பதாலும், வாய் கொப்பளிப்பதாலும், தலையில் நிறுத்துவதாலும், காதினுள் ஊற்றுவதன் மூலமாகவும், கண்களில் நிறுத்திவைப்பதன் மூலமாகவும் இந்த நான்கு நெய்ப்பு பொருட்கள், நரம்புகளை வலுவூட்டுகின்றன. வாத உபாதைகளைத் தவிர்க்கப் பயன்படுகின்றன. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com