ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கண்களுக்கு வலிமை!

என் மனைவி அடிக்கடி கண்களை மூடித் திறக்கிறார். இதற்கு முன் இந்தக் குறைபாடு இருந்ததில்லை. பிரபல கண் மருந்துவமனை ஒன்றிலும் காட்டியாகிவிட்டது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கண்களுக்கு வலிமை!

என் மனைவி அடிக்கடி கண்களை மூடித் திறக்கிறார். இதற்கு முன் இந்தக் குறைபாடு இருந்ததில்லை. பிரபல கண் மருந்துவமனை ஒன்றிலும் காட்டியாகிவிட்டது. அவர்களுக்கும் தீர்வு சொல்லத் தெரியவில்லை. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை ஏதேனும் உள்ளதா?

-த.ரெங்கராஜன், மதுரை. 

கண்கள் வறண்டு விடாமலிருக்க, கண்ணீர் கசிவு எப்போதும் கண்களில் இருக்கும்படியான விதத்தில் நீர் சுரப்பிகள் வேலை செய்து கொண்டேஇருக்கின்றன. கருவிழிகளில் இரத்த நாளங்கள் இல்லாமையினால், அதற்குத் தேவையான புத்துணர்ச்சி தரும் சத்தான பகுதிகள் வராததால், கண்ணீர் வழியாக அவை புத்துணர்வு பெறுகின்றன. அதனால் உங்கள் மனைவிக்குக் கண்களில் நீரின் வரத்து குறைந்து போனதற்கான வாய்ப்புகளிருப்பதால், இந்தக் குறைபாடு ஏற்பட்டிருக்கக் கூடும். ஒரே பொருளை உற்று நோக்க வேண்டிய சூழ்நிலையும், பல மணி நேரம் கணினி முன் அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டு,  குளிரூட்டப்பட்ட அறையில் வேலை செய்பவர்களுக்கும் இந்த உபாதை அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கண்களுக்குப் போதுமான அளவு ஓய்வு கொடுக்காதிருப்பதாலும் இந்த உபாதை தலைதூக்க வாய்ப்பிருக்கிறது.


கண்களை மூடிக் கொண்டு, வாயில் நீர் நிரப்பி, கண்களைத் தண்ணீரால் கழுவிவிடுவதால், கண்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்படும். இதை ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறைக் கூடச் செய்யலாம். கண் இமைகளில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று நன்கு தேய்த்து, அதனால் ஏற்படும் சூட்டை கண் இமைகளின் மீது வைத்து ஒத்தடம் கொடுப்பது நலம். துணியை சிறிய பந்து போலச் சுருட்டி, வாயின் மீது வைத்து ஒத்தடம் கொடுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது போலச் செய்வதும் நல்லதே. ஒரு நாளில் இரண்டு மூன்று முறை செய்யலாம்.


தஞநஉ ரஅபஉத  எனும் பன்னீரில் உள்ள வைட்டமின் "ஏ' சத்து கண் இமைகளை வலுப்படுத்துகிறது. பன்னீரில் கைவிரல் நுனிகளை நனைத்து கண் இமைகளை மூடி, அதன் மீது ஒரு நாளில் இரு முறைதடவி விட்டு, இதமாக மசாஜ் செய்து கொள்ளலாம். ஆலிவ் எண்ணெய் அல்லது தூய தேங்காய் எண்ணெய்யையும் இது போலப் பயன்படுத்தலாம். உடலில் நீர்சத்து குறையாதிருக்க, நிறைய நீர்த் திரவங்களைப் பருக வேண்டும். 


மேலும்  ஈரப்பசையே இல்லாத காற்றுப் பகுதிகளில் சஞ்சரித்தல், கடும் கோடையில் வெயிலில் குளிர் கண்ணாடி அணியாமல் செல்லுதல், கால்களில் காலணி அணியாமல், சூடான தரையில் நடத்தல், தலைக்கு எண்ணெய் தடவாமல், வெந்நீரைத் தலைக்கு விட்டுக் குளித்தல், தலை கவிழ்ந்து உறங்குதல் போன்ற சில காரணங்களால், கண் இமைகள் வலுவிழந்து கொட்டக் கூடும்.


கண்களையும், கண் நரம்புகளையும் வலுப்படுத்தக் கூடிய பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, பசும்பால், பசு நெய், கேரட், கோழி முட்டை, பப்பாளிப் பழம், நெல்லிக்கனி, இந்துப்பு போன்றவற்றை அதிகம் பயன்படுத்தலாம். உடலில் நீர்வறட்சி, கண்களையும் வறட்சியாக்குவதால், அதைத் தவிர்க்க - இளநீர், பனைநுங்கு, முலாம்பழம், வெள்ளரிப்பழம், வெள்ளரிப்பிஞ்சு சாப்பிடலாம். விலாமிச்சை, வெட்டிவேர் போட்ட பானை நீர் குடிக்கப் பயன்படுத்தலாம்.


மூக்கினுள் 4 சொட்டு க்ஷீரபலா தைலத்தைவிட்டு  உறிஞ்சுவது, தலைக்கு கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம் இளஞ்சூடாக தலையில் தேய்த்துக் குளித்த பிறகு, உச்சந் தலையில் ராஸ்னாதி சூரணம் பூசுவது, கண்களில் தர்பனம், புடபாகம், அஞ்சனம் போன்ற விசேஷ கண் சிகிச்சைகளைச் செய்து கொள்வது ஆகியவை தங்களுடைய மனைவிக்கு, குணம் தரக் கூடிய சிகிச்சை முறையாகும்.


தலையில் மூலிகைத் தைலமாகிய கார்ப்பாஸாஸ்த்யாதி அல்லது க்ஷீரபலாவை தேக்கிவைக்கும் முறையான "சிரோவஸ்தி' எனும் சிகிச்சை செய்து கொள்வதும் நலமே. வயிறு, குடலைச் சுத்தப்படுத்தும் வாந்தி, பேதி சிகிச்சை, உடலுக்கு எண்ணெய் தேய்த்து வியர்வையை ஏற்படுத்தும் சிகிச்சை முறைகளைச் செய்த பின் மாலையிலோ, காலையிலோ முழுங்கால் அளவு உயரமுள்ள இருக்கையில் அமர்த்தி, நெற்றியின் வழியாக தலையைச் சுற்றி துணி ஒன்றைக் கட்டி, அதன்மேல் தோல்பட்டையைக் கட்டுவார்கள். தோல்பட்டை தளராமலிருக்க நாடா ஒன்றினால் இறுக்கமாகச் சுற்ற வேண்டும். உளுந்து பிசைந்த மாவை அதைச் சுற்றிப்பூசினால், நன்கு பிடித்துக் கொள்ளும், எண்ணெய் வழியாது. இளஞ்சூடாக தைலத்தை தலை முடியின் வேரிலிருந்து மேலே இரண்டு அங்குல உயரம் தேங்கி நிற்கும்படி, சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை, தலையில் வைத்திருக்க வேண்டும். தைலத்தின் சூடு ஆறினால், பிழிந்தெடுத்து, மறுபடியும் வெது வெதுப்பாக ஊற்றி வைக்க வேண்டும். இந்த வைத்திய முறையை தொடர்ச்சியாக மூன்று ஐந்து அல்லது ஏழு நாட்கள் வரை செய்யலாம்.


தலையைச் சார்ந்த வாத நோய்களை நீக்கவும், கண், காது போன்ற புலன்களுக்கு அதிகத் தெளிவு ஏற்படுத்துவதுடன், குரல், முகவாய்க்கட்டை, தலை இவற்றிற்கு வலுவையும் உண்டாக்குகிறது. 


 (தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com