திரைக் கதிர்

இயக்குநர் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்ற அமலாபால் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அம்மா வேடம், அண்ணி வேடம் என்று ஒதுங்காமல் சில சமயங்களில் கவர்ச்சியாகவும் நடிக்கிறார்.
திரைக் கதிர்

இயக்குநர் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்ற அமலாபால் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அம்மா வேடம், அண்ணி வேடம் என்று ஒதுங்காமல் சில சமயங்களில் கவர்ச்சியாகவும் நடிக்கிறார். 'திருட்டு பயலே 2'-ஆம் பாகத்தில் அவர் கவர்ச்சியாக நடித்தது வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழில்  2 படங்கள், மலையாளத்தில் ஒரு படம் என 3 படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது அவரது கைமூட்டில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது குணம் அடைந்திருக்கிறார். நேற்று முன் தினம் தனது இணையதள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் ஒரு புகைப்படம் வெளியிட்டார். அதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்துகொண்டிருக்கும் காட்சியை அமலாபால் வெளியிட்டிருந்ததுடன், "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா' என பக்தி பஜனைப் பாடலையும் அவர் வெளியிட்டிருந்தார். அவர் ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  

'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா,  தற்போது  "சூப்பர் டீலக்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரது கேரக்டர் பெயர் ஷில்பா. பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட இறுதிக் கட்டப் பணிகளை முடித்து விட்டு, படத்தை உலக பட விழாக்களில் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரு வருடம் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்கவும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சமீப காலமாக படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே பட விழாக்களுக்கு அனுப்புவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் வெளியான "மேற்கு தொடர்ச்சி மலை' இந்த பாணியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தனது தயாரிப்புகளால் கவனம் பெற்ற நிறுவனம் விஜயா புரொடக்ஷன்ஸ். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர்களின் படங்களைத் தயாரித்த இந்நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் நடித்த "வீரம்', விஜய் நடித்த "ஜில்லா' படங்களையும் தயாரித்தது. தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தைத் தயாரிக்க உள்ளது. "ஸ்கெட்ச்' படத்தை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. "96', "செக்க சிவந்த வானம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில், இப்படத்துக்கு விஜய்சேதுபதி கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இது ஒரு கமர்ஷியல் படம் என்று விஜய் சந்தர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர் சாய் பல்லவி. மலையாளத்தில் "பிரேமம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டுகள் கிடைத்தன. நிவின் பாலி கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில், மலர் டீச்சராக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். பின்னர், துல்கர் சல்மான் ஜோடியாக "களி' என்ற மலையாளப் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து "ஃபிடா' என்ற தெலுங்குப் படத்தில் வருண் தேஜ் ஜோடியாகவும், "எம்சிஏ' என்ற தெலுங்குப் படத்தில் நானி ஜோடியாகவும் நடித்தார். விஜய் இயக்கிய "தியா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சாய் பல்லவிக்கு, அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. தனுஷ் ஜோடியாக "மாரி 2' படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, தற்போது சூர்யா ஜோடியாக "என்.ஜி.கே.' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சுட்டுரையில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்துள்ளார் சாய் பல்லவி. "ஒரு மில்லியன் அன்புக்கு மிகப்பெரிய நன்றி' என அந்த பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாய் பல்லவி.

சினிமா தவிர்த்து பல்வேறு சமூகப்  போராட்டங்களிலும் நடிகர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இந்தியாவையே திரும்பி பார்த்த தமிழக இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின் பல நடிகர்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் குரலுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். நடிகர் ஆரி இந்த வரிசையில் தன்னை இப்போது முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில்  "நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்' என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை தொடங்க உள்ளார்.   இது குறித்து அவர் பேசும் போது... ""தமிழில் கையெழுத்திடுவதை எல்லாரும் அவமானமாக கருதும் சூழல் வந்துள்ளது. இதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என் இலக்கு. என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. இனி அவர்கள் தங்களது கையெழுத்தை மாற்ற வேண்டும். உலகிற்கே தாய் மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்குக் காரணம் நம் ஆங்கில கல்வி மோகம்தான்'' என்கிறார் ஆரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com