காற்றிலே மிதக்க...!

கன்னங்கள் குழி விழந்து, தோள் பட்டை எலும்புகளுக்கு அருகே 100 மி.லி. எண்ணெய் கொள்ளும் அளவுக்கு சதைப் பிடிப்பற்று, மிக... மிக... ஒல்லியாக சிலர் இருப்பார்கள்.
காற்றிலே மிதக்க...!

கன்னங்கள் குழி விழந்து, தோள் பட்டை எலும்புகளுக்கு அருகே 100 மி.லி. எண்ணெய் கொள்ளும் அளவுக்கு சதைப் பிடிப்பற்று, மிக... மிக... ஒல்லியாக சிலர் இருப்பார்கள். "கொஞ்சம் குண்டாக மாட்டோமா?' என்று அவர்கள் ஏங்கித் தவிப்பார்கள். ஆனால் அவர்களே சில ஆண்டுகள் கழித்து "கன்னாபின்னா'வென்று உடல் எடை மிகவும் அதிகமாகி "தஸ்புஸ்'ùஸன்று மூச்சுவிட்டுக் கொண்டு மாடிப்படி ஏறுவார்கள்; நடப்பார்கள். இந்த உடம்பை எப்படிக் குறைப்பது என்று தெரியவில்லையே என்று சலித்துக் கொள்வார்கள். வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி கொஞ்சமாகச் சாப்பிட்டு, பலகாதம் தூரம் நடைப்பயிற்சி செய்தும்... எடை குறையாமல் தங்களைத் தாங்களே நொந்து கொள்வார்கள். கண்ணாடியில் தெரியும் தங்களின் உருவத்தை வெறுப்புடன் பார்த்து உதட்டைச் சுளிப்பார்கள்.
 ஒல்லியாக இருப்பதாகட்டும், குண்டாக ஆவதாகட்டும் இரண்டுக்குமே காரணம், உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றம்தான். வளர்சிதை மாற்றம் என்றால் நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அருந்து நீர் ஆகியவற்றில் உள்ள சத்துகளை உடல் எடுத்துக் கொண்டு, அதன் மூலம் நாம் உடலுக்குத் தருகிற வேலைகளுக்கான ஆற்றலை உருவாக்கி, அதன் பிறகு ஏற்படும் கழிவுகளை வெளியேற்றி, உடலின் தேவைக்கு அதிகமாக நாம் உண்டவற்றை உடலில் தசைகளாக, கொழுப்புகளாக சேமித்து... இப்படி நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான உடலின் நடவடிக்கைகளையும் வளர்சிதை மாற்றம் என்கிறோம். உடலுக்குத் தேவையான ஆற்றலை உணவிலிருந்து பெற உடல் மேற்கொள்ளும் உயிரி வேதியல் செயல்முறைகளே வளர்சிதை மாற்றம் என்று கறாராகச் சொல்லலாம்.
 இந்த வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெற வேண்டுமானால் நமது உடலில் சில சுரப்பிகள் தேவையான அளவு சுரக்க வேண்டும். குறிப்பாக தைராய்டு சுரப்பி சரியான அளவில் சுரக்க வேண்டும். இது அதிகமாகச் சுரந்தால் வளர்சிதை மாற்றம் வேகமாக நடைபெற்று, உண்ணும் உணவெல்லாம் மிக வேகமாகச் செரித்து, ஆற்றலாகி, அதிக கழிவுகளை வெளித்தள்ளி எடை குறைந்துவிடும். இது குறைவாகச் சுரந்தாலோ வளர்சிதை மாற்றம் மெதுவாகி, உடல் மந்தமாகி, தேவையில்லாத கழிவுகள் எல்லாம் உடலில் சேர்ந்து, தேவையான அளவுக்கு உடலில் சக்தி உருவாகாமல், எடை அதிகரித்துவிடும்.
 வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறாமல் போவதற்கு பரம்பரைத் தன்மை கூட காரணமாக இருக்கலாம். வயதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
 எனவே, எடையைக் குறைக்க உடற்பயிற்சி, குறைந்த அளவில் சாப்பிடுவது போன்றவை மட்டுமே போதுமானதாக இல்லை. வளர்சிதை மாற்றத்தின் மந்தத்தன்மையைத் தூண்டிவிடக் கூடிய உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
 காரம் சாப்பிடுங்கள்
 மிளகாயில் உள்ள கேப்சாய்சின் (இஅடநஅஐஇஐச) என்ற வேதிப் பொருள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் செய்த ஆராய்ச்சியின்படி, காரம் அதிகமாக உள்ள உணவுகளை உட்கொண்டால் - உணவு உண்ட இரண்டு மணி நேரங்களுக்குப் பின்பு - உடலில் வளர்சிதை மாற்றம் 15 இலிருந்து 20 சதவீதம் அதிகரிக்கிறதாம். அதுமட்டுமல்ல, உடலில் உள்ள கரையாத வெள்ளை, பழுப்பு கொழுப்பு செல்களை வளர்சிதை மாற்றத்துக்கு உட்பட வைத்து கரைய வைக்கிறதாம்.
 எடையைக் குறைக்க நெல்லிக்காய்
 நெல்லிக்காயின் மருத்துவ குணங்களைக் கேட்டால், நீண்ட நாள் உயிரோடு வாழ அதியமான் ஒளவையாருக்கு கொடுத்த நெல்லிக்கனி கதை ஒன்றும் பொய்யல்ல என்றே தோன்றுகிறது.
 சாதாரணமாக சளி, காய்ச்சல், மலச்சிக்கல், உடல் வீக்கம் ஆகியவற்றுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் இந்த நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்குண்டு. உடலில் கொழுப்புச் சத்து சேராமல் தடுக்கும் பண்பும் நெல்லிக்காய்க்கு உண்டு என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிக கொழுப்பு சேர்ந்து உடலின் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது.
 மஞ்சளின் மகிமை
 நெல்லிக்காயும், மிளகாயும் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால், உடலில் வீக்கம் ஏற்படுவது குறையும். உலக அளவில் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சியில் உடலில் வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கக் கூடிய மருந்துகளை உட்கொண்டவர்களின் எடை அதிகரிக்கவில்லையாம். நெல்லிக்காயும், மிளகாயும் போல மஞ்சளுக்கும் இந்த வீக்கத்தைத் குறைக்கும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. நமது சமையலில் மஞ்சளுக்கு எப்போதும் உரிய இடம் தர வேண்டியது அவசியம்.
 ஓமம் அவசியம்
 ஓமத்தின் மருத்துவகுணங்கள் ஏராளம். இது உடலின் வீக்கத்தைக் குறைக்கும். வயிற்றுப் புண் ஏற்படாமல் தடுக்கும். புண்கள் ஆற உதவும். (வயிற்று வலியால் ஓயாமல் அழும் குழந்தைகளுக்கு அந்த காலத்தில் "ஓம வாட்டர்' கொடுப்பார்கள்) ஓமத்தை நமது மசாலாப் பொருட்களுடன் சேர்த்து அரைத்து சமையலில் பயன்படுத்தினால் உடல் எடையைக் குறைக்க அது உதவும்.
 மஞ்சளை ஒரு கிருமிநாசினி என்பார்கள். ஓமத்தையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
 உடல் எடை ஏற்ற இறக்கத்தில் இன்சுலினுக்கும் பங்கு
 உடலின் வளர்சிதை மாற்றத்தில் தைராய்டைப் போலவே இன்சுலினுக்கும் பங்கு உண்டு.
 நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்தை உடலின் திசுக்களுக்குக் கொண்டு செல்வதில் இன்சுலினுக்கு முக்கிய பங்குண்டு. உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காவிட்டால், உண்ணும் உணவில் உள்ள குளூகோஸ் உடலின் திசுக்களுக்குச் செல்லாமல், கொழுப்பாக மாறிவிடும். அதனால் உடல் எடை அதிகரித்துவிடும்.
 உடலின் வளர்சிதை மாற்றம் சீராக நடைபெற இன்சுலின் உரிய அளவில் சுரப்பது அவசியம்.
 பருப்பு வகைகள், பயறு வகைகள்
 மாவுச்சத்து குறைவாக உள்ள, புரதச் சத்து அதிகமாக உள்ள பயறு வகைகள், பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்காது. இந்த பயறு, பருப்பு வகைகளில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பி வைட்டமின் ஆகிய சத்துகள் அதிகம் உள்ளன.
 வாரத்தில் நான்குமுறை இந்த பயறு, பருப்பு வகை உணவை உட்கொண்டால், உடலின் கொழுப்புச் சத்து குறைந்து, உடல் எடை குறைந்துவிடுவதாக ஓர் ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்கள். இவற்றை உண்ணாமல் மாவுச் சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டவர்களின் உடல் எடை அதிகரித்திருப்பதையும் கண்டறிந்துள்ளார்கள். இந்த பயறு, பருப்பு வகை உணவுகள் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறதாம்.
 ஏற்கெனவே நீங்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகாசனம் எல்லாம் செய்து உடல் எடையைக் குறைக்க தலைகீழாக நின்றிருந்தால், அதைத் தொடர்ந்து செய்யுங்கள். விட்டுவிடாதீர்கள். கூடவே இந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் எடை குறைந்து காற்றிலே மிதப்பதைப் போல உணர்வீர்கள்.
 - ந.ஜீவா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com