தினமணி கதிர்

இருவர்!

""எத்தனை மணிக்கு இண்டர்வியூ?'' என்று முப்பதாவது தடவையாக அப்பா கேட்டார்.
""பதினோரு மணிக்கு'' என்று அலுக்காமல் பதில் சொன்னான் ஜானகிராமன். அவருடைய டென்ஷனை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. இது அவனது பதினாறாவது இண்டர்வியூ.
""வழக்கமா நல்ல ராகு காலமா பாத்து கூப்பிடுவாங்க . இன்னிக்கு பொழச்சுப் போகட்டும்னு ராகு காலத்தை விட்டுட்டாங்க போல. எல்லாம்  நல்லதுக்குத்தான். கடவுள் கண் தொறந்து பாக்கட்டும்'' என்றாள் ஈசிசேரில் உட்கார்ந்திருந்த பாட்டி.
""சாமிக்கு ரெண்டு மந்திரம் சொல்லிட்டு வந்து சாப்பிடு'' என்று அடுப்பாங்கரையிலிருந்து  அம்மாவின் குரல் கேட்டது. 
நல்ல வேளையாக வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை அவ்வளவுதான். இன்னும் இரண்டு பேர் இருந்தால் இன்னும் இரண்டு பரிதாபத்தை, இறைஞ்சலை, ஏக்கத்தை, பயத்தை காண்பிக்காமல் காண்பிக்கும் குரல்கள் கிளம்பி வந்திருக்கும். இவர்களுக்காகவாவது, இந்தச் சூழலுக்காகவாவது அவனுக்கு சீக்கிரம் வேலை கிடைத்து விட வேண்டும். கிளம்புவதற்கு ரெடியாக  ஹாலுக்குள் சென்றான்.
ஹாலில் இருந்த பழைய மர மேஜையின் டிராயரின் உள்ளே இருந்த ஃபைலை எடுத்து மேஜை மீது வைத்துக் கொண்டான். படிப்பு வயது நன்னடத்தை சான்றிதழ்கள் அடங்கிய  ஃபைல். நிறையக் காகிதங்கள் அடங்கிக் கனமாக இருந்தது. டிராயரைத் துழாவும் போது கையில் இடறிய பர்ûஸயும் எடுத்து மேஜை மீது வைத்தான். அது அவ்வளவு கனமாக இல்லை.
பூசை  அறைக்குள் சென்றான். சுவரில் சிவனும் பார்வதியும் , வெங்கடாசலபதியும், ரமணரும், சீரடி சாயியும், காஞ்சி முனிவரும்  தத்தம் கருணை நிறைந்த பார்வைகளுடன் இருந்தார்கள். அவன் ஆர்.ஸி.ஸ்கூலில் நாலாவது படிக்கும் போது மரகத மேரி டீச்சர் ஒரு நாள் எல்லா குழந்தைகளிடமும், ""கடவுளை எப்போதும் நினைத்து வணங்கி வர வேண்டும்'' என்று சொல்லிக் கொடுத்தாள். அன்று ஆரம்பித்த தினசரிப் பழக்கம் நிற்கவேயில்லை. படித்து முடிக்கிற காலம் வரை படிப்பில் நன்றாக முன்னுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். இப்போது படிப்பு இருந்த இடத்தில் வேலை வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது.
அவன் டிபன் சாப்பிட வந்த போது அம்மா  தயாராக ஒரு தட்டில் பொங்கலும் அதைச் சுற்றி சட்டினியும் - குழம்பும்  கையில் வைத்துக் கொண்டிருந்தாள்.
"" நான் வந்து எடுத்துகுவேன்ல?'' என்று கேட்டபடியே வாங்கிக் கொண்டான். 
சாப்பிடுவதற்கு பொங்கல் நன்றாக இருந்தது. அது அவனுக்குப் பிடித்த ஐட்டம் என்பதாலும் அம்மாதிரி தோன்றி இருக்கலாம்.
அம்மா ஒரு தட்டில் இன்னும் கொஞ்சம் பொங்கலை எடுத்துக் கொண்டு வந்தாள்.
""போதும்.. போதும்'' என்று அவன் எழுந்தான். 
""தம்பி, நீ இப்பல்லாம் சரியாவே  சாப்பிடறதில்லே'' என்றாள் அம்மா.
அவன் மறுத்து எதுவும் பேசாமல் பின் பக்கம் கை
கழுவச்  சென்றான். இப்போதெல்லாம்  தொண்டையில் ஏதோ கல் சிக்கிக் கொண்ட மாதிரி அவ்வளவாக சாப்பாடு இறங்க மாட்டேன் என்கிறது. கிடைக்காத வேலைதான் கல்லாக உட்கார்ந்திருக்கிறதோ என்று அம்மாவின் பார்வையில் முள் எகிறுகிறது. 
ஜானகிராமன் இஸ்திரி போட்ட உடைகளை அணிந்து கொண்டு கிளம்பும் போது அப்பா  ""ஆல் தி பெஸ்ட்'' என்றார்.
அம்மா ""எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்'' என்று அவன் கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தாள்.
""எதுக்கும்மா?'' என்ற அவனிடம்  ""இந்த வெய்யில்ல பஸ்ல போயி கச கசன்னு இண்டர்வியூல நிக்க வேணாம். போறப்ப  ஆட்டோல போயிடு. வரச்ச வேணா பஸ்ல வரலாம்'' என்று சிரித்தாள்.
அவன் வாசலைக் கடக்கும் போது பாட்டி ஈசிசேரில் படுத்தபடியே தூங்கி விட்டிருந்தாள். விழித்திருந்தால் அவனை ஆசீர்வதித்து விட்டு இண்டர்வியூக்காரனை  நாலு திட்டு திட்டி... 
வேலைக்குச் செல்லும் ஜனங்கள் எதிரும் புதிருமாக விரைந்து  கொண்டிருந்தார்கள்.
கார்களும்,  ஆட்டோக்களும் அடுத்த யுகத்தைப் போய்ப் பிடிக்கும் வேகத்துடன் பறந்து கொண்டிருந்தார்கள். இந்த ஓட்டத்தைக் கேலி செய்வது போல ஒரு தெரு நாய் பாதி ஈரமும் பாதி உஷ்ணமும் நிரம்பிய தரையில் தன்  உடலைப் போட்டுப் புரண்டு புரண்டு படுத்து இளைப்பாறிக் கொண்டு இருந்ததைப் பார்த்தபடி ஜானகிராமன் சென்றான். 
பஸ்களின் மீது மனிதர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உணர்த்துவது போல பஸ் ஸ்டாப்பில் கூட்டம் இல்லை. அவன் அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டை  அடைந்த போது வாசுவின் ஆட்டோவைப் பார்த்தான். 
 வாசு,  ""ஏறுங்க சார் வண்டியில'' என்று அவனைப் பார்த்து நட்புடன் சிரித்தான். அவனுக்கு சந்தோஷம் வந்து விட்டால் இப்படித்தான் கூப்பிடுவான். ஒரே வயதுக்காரர்கள்தான். ஜானகிராமன் இருந்த தெருவிலேயே வாசுவும் இருந்தான். படிப்பு ஏறவில்லை. இருந்தாலென்ன? மூன்று வருஷங்களாக ஆட்டோ ஓட்டி சம்பாதித்துக் கொண்டு தானே இருக்கிறான்!
ஜானகிராமன் ஏறி உட்கார்ந்து ""வாசு கன்னிங்காம் ரோடு போகணும்'' என்றான்.
அவன் கையிலிருந்த ஃபைலைப் பார்த்து "'இண்டர்வியூவா?" என்று கேட்டபடி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
""ஆமாம். கஜனி முகமதுவோட ரெகார்ட்டை முறியடிச்சிருவேன் போல இருக்கு'' என்றான் ஜானகிராமன். 
அப்போது  ""ஆட்டோ'' என்று கத்திக் கொண்டே கையை அசைத்தபடி ஒரு யுவதி ஓடி வந்தாள்.
 வாசு வண்டியை நிறுத்தி அவளைப் பார்த்து  " சவாரி உள்ள  இருக்கில்ல? பாக்கலையா?'' என்றான். 
""நீங்க எங்க போகணும்?'' 
""கன்னிங்காம் ரோடு'' என்றாள் அவள்.
""அட தேவுடா!'' என்று வாசு பின் பக்கம் திரும்பி ஜானகிராமனைப் பார்த்துச் சிரித்தான்.
""அவங்களும் வரட்டும்'' என்றான் ஜானகிராமன். அவளைப் பார்த்து "'நானும் அங்கதான் போறேன்'' என்றான்.
அவள் அவனுக்கு நன்றி தெரிவித்தபடியே ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். 
கையில் இருந்த கர்சீப்பால் முகத்தை ஒற்றிக் 
கொண்டாள். ஓடி வந்ததில் சிறிது மூச்சு வாங்கியது. வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். கறுப்பு ரவிக்கை . வலது கையில் கடிகாரம். இடது கையில் கறுப்பும் மஞ்சளுமாக ஒரு வளையல். மாநிறம். பார்க்கும்படி இருந்தாள். கையில் ஒரு பை வைத்திருந்தாள்.
வண்டியை ஓட்டிக் கொண்டே வாசு அவளிடம் ""கன்னிங்காம் ரோடுல எங்கம்மா?'' என்று கேட்டான். 
"" சிண்டிகேட் பாங்க் கிட்ட'' என்றாள் அவள்.
""ஜானகி, நீனு?''
""அதே இடத்திலதான்'' என்றான் ஜானகிராமன்.
அவள் இப்போது அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வை அவன் கையில் இருந்த ஃபைல் மீது விழுந்தது.
""இண்டர்வியூவா?'' என்று கேட்டாள்.
அவன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். பிறகு தன் கையில் இருந்த ஃபைலைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.
""இது மேல அப்படி ஒண்ணும் எழுதி இருக்கலையே'' என்றான்.
""மூஞ்சில எழுதி இருக்குல்ல?'' என்றான் வாசு,
அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜானகிராமனும் சேர்ந்து சிரித்தான்.
அவளிடம் ""தயவு செஞ்சு நீங்க பீக்கே இன்டர்நேஷனல் இண்டர்வியூவுக்குப்  போறேன்னு மட்டும் சொல்லிடாதீங்க'' என்றான் ஜானகிராமன்.
அவள் பதிலளிக்காமல் அவனை உற்றுப் பார்த்தாள்.
""எனக்கு உங்களை ஏமாற்றமடையச் செய்வதில் ஈடுபாடு இல்லை. ஆனால் எனக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை'' என்றாள் அவள் ஆங்கிலத்தில்.  
""போகட்டும். ஒரு போட்டியாளருக்கு ஆட்டோவில் இடம் தந்து உதவிய பெருந்தன்மை எனக்குக் கிடைத்திருக்கிறது'' என்றான் ஜானகிராமன்.
""இங்கிலீஷுல என்ன ரெண்டு  பேரும் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிறீங்க?'' என்று கேட்டான் வாசு. 
""இதுதான் உங்க முதல் இண்டர்வியூவா?'' என்று ஜானகிராமன் அவளிடம் கேட்டான்.
"" என்னப் பாத்தா அவ்வளவு சின்னக் குழந்தையாவா தெரியுது?'' என்றாள் அவள். "பத்தாவது இண்டர்வியூ''. 
""எப்படி இருந்தாலும்  எனக்கு ஜூனியர்தான்.''
அவள் அவனை எத்தனையாவது முறை என்று கேட்கவில்லை.
அவர்கள்  அடைய வேண்டிய இடம் வந்து விட்டது. இருவரும் இறங்கிய பிறகு ஜானகிராமன் வாசுவிடம் நூறு ரூபாயை நீட்டினான். அவளும் பர்ûஸத் திறந்து பணம் எடுத்தாள்.
வாசு, "'ரெண்டு பேரும் பணத்தை வச்சுக்குங்க. ஆளுக்கு முப்பது ரூபா. வேலை கிடைச்சதும் தாங்க'' என்றான்.
""எத்தனை வருஷம்னாலும் பணம் வாங்கக் காத்துக்கிட்டு இருக்க நீ தயாருதான். ஆனா உன்னளவு நம்பிக்கையும் பொறுமையும் எனக்கில்ல''  என்று அவன் கையில் பணத்தைத் திணித்துவிட்டு,  நாப்பது ரூபாய் அப்புறம் வாங்கிக்கறேன்'' என்று கூறி விட்டு நடந்தான்.
அவள் ஜானகிராமனிடம் ""இது என் ஷேர்'' என்று மூன்று பத்து ரூபாய்த் தாள்களை நீட்டினாள். அவன் வாங்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.
இருவரும் லிப்டில் ஏறி மூன்றாம் மாடிக்குச் சென்றனர். அவன் ஹாலில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பது நாற்பது என்று காட்டியது. 
""பதினோரு மணி இண்டர்வியூக்கு நாம ரொம்ப சீக்கிரமே வந்துட்டோம்'' என்றான்.
""அங்க பாருங்க'' என்று அவள் சுட்டிக் காட்டிய திசையில் நின்றிருந்த ஹனுமார் வாலைப் பார்த்ததும் அவன் அதிர்ந்தான். இதற்கு முன் கியூவைப் பார்த்து அதிர்ந்தது நோட்டுக் கட்டுக்களை வைத்துக் கொண்டு பேங்க் வாசலில் நின்ற போதுதான்.  
""ஒரு நிமிஷம் இருங்க. நான் போய் கேட்டுட்டு வரேன்'' என்று அவன் வரிசையின் கடைசியில் நின்றிருந்தவரின் அருகில் சென்றான்.
அவரிடம் பேசிய பின் அவளிடம் சைகை காண்பித்து தான் நிற்கும் இடத்திற்கு வரச் சொன்னான்.
""இன்னிக்கு என்ஜினீயர், அக்கெளண்ட்ஸ் ஆபிசர், சேல்ஸ் ஆபிசர்னு மூணு போஸ்டுகளுக்கு இண்டர்வியூவாம். எல்லோரும் ஒரே வரிசைல. அட்லீஸ்ட் பிரிச்சு நிக்கற வரிசையா வச்சிருக்கக் கூடாதா?'' என்று அவளிடம் சொன்னான்.
அவன் பேசியதை யாரோ கேட்டு விட்டதைப் போலப் பத்து நிமிஷம் கழித்து ஒருவர் வந்து மூன்று வரிசைகளாகப் பிரிந்து நிற்கச் சொன்னார். வரிசையில் நிற்கும் போதுதான் அவனுக்குத் தெரிந்தது அவள் தனக்குப் போட்டியல்ல என்று. அவள்  சேல்ஸ் ஆபிசர் வரிசையிலும் அவன்  என்ஜினீயர்  வரிசையிலும் நின்றார்கள். அவன் பார்த்த போது அவள் அவனைப் பார்த்துப்  புன்னகை புரிந்தாள். 
சற்று நேரத்தில் ஒரு பெண் வந்து ஒவ்வொருவரிடமும் இருந்து கம்பெனி அனுப்பிய இண்டர்வியூ அழைப்புக் கடிதத்தை வாங்கிக் கொண்டாள். அவன் வரிசையில் ஐந்தாவது ஆள். அவளுக்கு நான்காம் எண்.
இருவரும் சென்று ஹாலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டார்கள்.
""என் பேர் ஜானகிராமன்'' என்றான் அவன்.
""தெரியும்.  ஆட்டோக்காரர் கூப்பிட்டாரே'' என்றாள் அவள். 
தொடர்ந்து ""என் பெயர் மீனா'' என்றாள்.
""தெரியும்'' என்றான் ஜானகிராமன்.
""எப்படி?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
""எனக்கு பக்கத்து வரிசைல எனக்கு முந்தி  நின்னீங்க.
இண்டர்வியூ லெட்டரை கொடுக்கறப்போ பேர் சொல்றதைக் கேட்டேன்'' என்றான்.
""ஓ அப்படி ஒரு ஆபத்து இருக்குதா?'' என்று சிரித்தாள். பிறகு, ""சீக்கிரம் ஆரம்பித்து சீக்கிரம் கூப்பிட்டா நல்லாயிருக்கும்''  என்றாள்.
""நாலாம் நம்பருக்கே இப்படி சொல்றீங்களே. நான் எவ்வளவோ காத்திருந்திருக்கேன் தெரியுமா?' என்றான் ஜானகிராமன்.
""நீங்க எனக்கு தன்னம்பிக்கை கொடுக்கணும்னு என்னென்னவோ சொல்றீங்க'' என்று அவள் சிரித்தாள்.
""ஆனா முன்னால கூப்பிட்டா பின்னால வர்றவனுக்கு வேலை கிடைக்கும். இந்த பாலிடிக்ûஸ புரிஞ்சுக்கறது ரொம்ப கஷ்டம்''  என்றான் ஜானகிராமன்.
அப்போது அவர்களிடமிருந்து கடிதங்களை வாங்கிய பெண் வந்து இண்டர்வியூ பதினோரு மணிக்குப் பதிலாக பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
""எனக்கு இப்பவே பசிக்கிற மாதிரி இருக்கு'' என்றாள் மீனா. 
""சரி வாங்க இன்னும் நேரம் இருக்கே. வெளில போய் ஏதாவது சாப்பிடலாம்'' என்று ஜானகிராமன் எழுந்தான்.
அவர்கள் கட்டடத்தை விட்டு வெளியே வந்து இடது  பக்கம் திரும்பி மில்லர்ஸ் ரோடில் நடந்தார்கள். சாலையில் குவிக்கப் பட்டிருந்த  குப்பைகள் இப்போது காற்றின் போக்கில் பறந்து ஜனநாயக முறையில் தெருவெங்கும் சிதறிக் கொண்டிருந்தன. நாளை துப்புரவுப் பணிக்கு வரும் ஆட்களுக்கு வேலை வேண்டும் அல்லவா? அக் குப்பைகளிலிருந்து எழுந்து வந்த "நறுமணம்' மாநகராட்சியை நினைவு படுத்தியது. 
""மல்லேஸ்வரத்தில எங்க இருக்கீங்க?'' என்று ஜானகிராமன் கேட்டான்.
""ஆறாவது கிராஸ்ல'' என்றாள்.
""அட! நான் கோகனட் அவென்யூல. ஆனா  உங்களைப் பாத்ததே இல்லையே?'' என்றான் அவன் ஆச்சரியத்துடன்.
""சரிதான். என்னமோ மல்லேஸ்வரத்துல இருக்கற எல்லா பொம்பளைகளையும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கற மாதிரி !'' என்று மீனா சிரித்தாள்.
""அழகாயிருக்கற எல்லா பொண்ணுகளையும்'' என்று அவனும் சிரித்தான்.
""நாங்க இதுக்கு முன்னால மைசூர்ல இருந்தோம். எங்கம்மாவுக்கு டிரான்ஸ்ஃபர்னு இங்க வந்து ரெண்டு வாரம்தான் ஆகுது. அவங்க  இந்தியன் பாங்க்ல இருக்காங்க'' என்றாள் அவள். 
""அப்பா?'' என்று கேட்க நினைத்து விட்டு  விட்டான்.     
அவனது நினைவோட்டத்தைப் படித்தவள் போல ""அப்பா எங்களோட  இல்ல. எங்கம்மாவுக்கும் அவருக்கும் ஒத்துக்கலே. சுமுகமா ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க'' என்றாள். 
அவளது பேச்சு அவனுக்கு வியப்பைத் தந்தது. அறிமுகம் ஆன சில  மணி நேரத்திலேயே இப்படிக் கொட்டி விடுவது என்றால்? நிர்தாட்சண்யமாகப் பேசும் வழக்கமுடையவளாகத்தான் காணப்படுகிறாள்.
""நாம பழகி கொஞ்ச நேரத்திலேயே நீங்க எப்படி என்கிட்டே இப்படி வெளிப்படையா பேசறீங்க?'' என்று கேட்டான்.
""உங்களை பார்த்ததுலேர்ந்து இப்ப வரைக்கும் நீங்க நடந்துக்கற முறைதான் காரணம்'' என்றாள் மீனா.
""புரியல''
""ஆட்டோல வந்தப்போ ஓரக் கண்ணால பாக்கல. ஸ்டைல் பேச்சு ஒண்ணும் பேசாம  வெளிப்படையா இருந்தீங்க. நான் பணம் தந்தப்ப வழக்கமா ஆம்பளைங்க மறுத்து இம்ப்ரெஸ் பண்ணுறதை போல இல்லாம நீங்க  வாங்கி பாக்கெட்டுக்குள்ள போட்டுகிட்டீங்க. தத்துப் பித்துன்னு பேசாம கலகலப்பா இருந்தீங்க. வேலைக்கு மன்றாடுறத மறைக்காம சொன்னீங்க. சிநேகிதத்துக்கு இதெல்லாம் போதாதா?'' என்று கேட்டாள். 
""úஸா நான் ரொம்ப நல்லவன்னு சொல்றீங்க'' என்றான் ஜானகிராமன் புன்னகையுடன்.
""இல்ல. அப்படி ஒண்ணும் கெட்ட  ஆசாமி இல்லேன்னு சொல்றேன்'' என்றாள் மீனாவும் சிரித்தபடி.
""இந்த இண்டர்வியூலயாச்சும் வேலை கிடைச்சா ரொம்ப நல்லா  இருக்கும்'' என்றான் அவன். 
""இன்னும் ரெண்டு மாசத்துல எங்கம்மா ரிட்டையர் ஆயிடுவாங்க. அதுக்குள்ளே எனக்கு வேலை கிடைச்சாகணும்.''
""எல்லா பிரச்னையிலிருந்தும் தப்பிக்க வேலையைத் தேடறோம்.  ஆனா அது கெடக்கிறதே இப்போ பிரச்னையா ஆயிருச்சி'' என்றான் ஜானகிராமன். 
""கவலைப்படாதீங்க. ஐரோப்பாலயும் அமெரிக்காலயும் கூட வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிடிச்சாம்'' என்றாள் அவள் குறுநகையுடன்.
""ஆமா . கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றான் ஜானகிராமன்.
அவர்கள் ஹோட்டல் சாளுக்கியாவை அடைந்து ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்.  அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை விட  சர்வர்கள் அதிகமிருந்தார்கள்.
""சர்வர் வேலைக்கு அவ்வளவா திண்டாட்டம் இருக்காது போல இருக்கு'' என்றாள் மீனா அவன் பார்வையைக் கவனித்து விட்டு.
சாப்பிட்டு விட்டு காபி குடித்தார்கள். அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்து ""கிளம்பலாமா? பதினொன்னரை ஆச்சு''  என்றாள்.
திரும்புகையில் மீனா அவனிடம், "" பெங்களூர்தான் நீங்க பிறந்த ஊரா?'' என்று கேட்டாள்.
ஜானகிராமன் ""இல்ல. மதுரை. ஆனா நான் பிறந்து அஞ்சு வருஷத்துல இங்க வந்துட்டோம்'' என்றான். 
""úஸா படிச்சது எல்லாம் இங்கேதான்?'' என்று கேட்டாள்.
""ஆமா. எம்மெஸ் ராமையால என்ஜினீரிங்'' என்றான். 
பிறகு அவளை பார்த்து  ""நீங்க படிச்சது?''
""மைசூர்லதான். ஜே எஸ் எஸ்ல'' என்றாள்.
""அங்கதான் எம் பி ஏ படிச்சீங்களா?'' என்றான்.
அவள் குழப்பத்துடன் ""எம் பி ஏ வா?'' என்று  திரும்பி அவனைப் பார்த்தாள்.
""இல்ல நீங்க சேல்ஸ் ஆபிசருக்கு இருந்த கவுண்டர்ல போய் நின்னீங்களேன்னு...'' 
""ஆமா. நான் ரெண்டுக்கும்  அப்ளை  செஞ்சேன். ரெண்டுக்கும் கூப்பிட்டிருந்தாங்க. ஆனா  நீங்க என்ஜினீயர் குரூப்ல போய் நின்னதைப் பார்த்ததும் சேல்ஸூக்கு போனேன்'' என்றாள். 
அவன் நடப்பதை நிறுத்தி விட்டான்.       

-  அடுத்த இதழில்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT