30 ஆண்டு கனவு

இரா.இளங்குமரன் எழுதிய "செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம்-10 தொகுதிகள்' வெளியீடு என்பது சென்னை புத்தகக் கண்காட்சி வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். 
30 ஆண்டு கனவு

செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம்
இரா.இளங்குமரன் எழுதிய "செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம்-10 தொகுதிகள்' வெளியீடு என்பது சென்னை புத்தகக் கண்காட்சி வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். 
சங்க இலக்கிய சொற்களில் 8 ஆயிரம் சொற்களுக்கான விளக்கங்கள் சுமார் 3254 பக்கங்களில் வெளியாகி இருக்கிறது.
இந்நூல் குறித்து செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலர் முனைவர் க.ராமசாமி எழுதியுள்ள அணிந்துரையில், "எல்லா சொற்களும் பொருள் குறித்தனவே' என்பது தொல்காப்பியத்தின் 640-ஆவது நூற்பா. இதனை மூல முழக்கமாகக் கொண்டு, அகர முதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச் சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் இதில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அது தவிர இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் எனத் துறை சார்ந்தும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார்.
"இந்த சொற்பொருட் களஞ்சியத்தைக் கையிலெடுத்தால் சிற்றிலக்கியங்கள் அனைத்துக்கும் தேவையான விளக்கம் கிட்டும்'- என்கிறார் இதன் பதிப்பாசிரியர் பி.தமிழகன்.
பிறமொழிச் சொற்கள் என இதுநாள்வரை காட்டப்பட்ட பல சொற்கள் தமிழ்ச் சொற்களே என்றும் நிறுவுகிறார் (உ-ம்) பஜ்ஜி (பக் 104-105, தொகுதி-8). இதுபோன்ற விளக்கங்கள் அளிக்க என்னவெல்லாம் தகுதி இருக்க வேண்டும் என்று அவர் கூறுவதாவது- "மொழிப் புலமை, இலக்கிய இலக்கணப் புலமை, தமிழ் முழுதறி தகுதி, வட்டார வழக்குகள், அந்தப் பகுதியிலேயே இருந்து அதன் பயன்பாடு அறிதல், சொற்பொருளாய்வு, தொல்லியல் நெறிமுறைகள் மற்றும் வேர்ச்சொல் ஆய்வில் கூர்மதி ஆகியவை நிரம்பப் பெற்றிருக்க வேண்டும். இவை அத்தனையும் நிறைந்தவர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார்' என்றும் நிறுவுகிறார்.
நூலில் வினைச்சொற்களாகிய "அடி'த்தல் சொல்லடியாக 145 சொற்கள், உண்ணல் வகைகள்-ஊர்ப் பெயர்கள் 504, நோய் வகைகள்-229, நோய் வினைகள் 216, மதில் பொறி வகைகள்-28, மலை வகைகள்-25 இவ்வாறு எத்தனையோ வகைகள் இக்களஞ்சியத்தில் அடங்கியுள்ளன என்றும் அவர் தெரிவிக்கிறார்.
களஞ்சியத்தின் "அ' முதல் "வெü' அடங்கிய பத்து தொகுதிகளில் "அ'கர வரிசைச் சொற்கள் மட்டுமே 272 பக்கங்கள் கொண்ட தனி நூலாக அதாவது முதல் தொகுதியாயிருக்கிறது. இதில் "அழகு' என்ற சொல்லுக்கு மட்டுமே 67 விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். யானையின் பெயர்களாக- அதன் விளக்கங்களாக 67 வகைப்பாட்டைக் கூறி விளக்கியிருக்கிறார்.
இக்களஞ்சியத்தின் ஆசிரியர் இரா.இளங்குமரனார் கூறுவது என்ன?
"ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என்பவை இல்லாமல், வெளிப்பட எவரும் அறிந்து கொண்டுள்ள வழக்கு, செய்யுள் என்பவற்றை கொண்டே விளக்குவது இக்களஞ்சியம். இதனை ஊன்றியும், விரும்பியும் கற்போர் தாமும் இதுபோன்ற ஆய்வைச் செய்ய இயலும் என்பதைத் தூண்டவல்ல ஆய்வு இது. ஆதலால் படிப்பாளியை படைப்பாளியாக ஆக்க வல்லது என்பதை என் பட்டறிவால் தெளிவாகக் கண்டு வருகிறேன். எளிமையாய் ஆழ்ந்த நுணுக்கங்களை- ஓரளவு கற்றாரும் கொள்ள வழிகாட்டும் "கைவிளக்கு' ஆகும்'' என்கிறார் இளங்குமரனார். இக்களஞ்சியத்தைப் புரட்டும்போதே இவ்வுண்மையைக் காண முடிகிறது.
இதுகுறித்து பதிப்பாளர் கோ.இளவழகன் கூறுகையில், "களஞ்சிய வரலாற்றில் இது புதுவரவு. இதற்கு முன்பு இப்படிப்பட்ட தொகுப்பு நூல் வந்ததில்லை. தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள கருவி நூல்களின் (Reference Book) மணிமகுடமாக இக்களஞ்சியம் அமைந்துள்ளது. நியாயமாகப் பார்த்தால் இப்பெரும்பணியை அரசோ, பல்கலைக்கழகங்களோ, பெரும் அற நிறுவனங்களோ, பெரும் செல்வந்தர்களோ தான் செய்திருக்க வேண்டும். இத்தமிழ்ப் பணியை தனியொருவனாகச் செய்து முடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பெரும் தமிழறிஞர் நாள் முழுவதும் தமிழாகவே வாழ்ந்து, தமிழுக்காகவே உழைப்பவர். தமிழர் வாழ்வியல் இலக்கணமாம் தொல்காப்பியத்தையும் தமிழர் ஆவணமாம் சங்க இலக்கியங்களையும் உள்வாங்கிக் கொண்டவர் அவர். இவரது நூல்களை வெளியிட்டு எனக்கு நானே பெருமை சேர்த்துக் கொள்கிறேன். தமிழர் வரலாற்றில் இந்நூல் பெரும் கருவூலமாகும். ஆய்வாளர்களுக்கு பெரும் பலனைத் தரவல்லது'' என்கிறார்.

செந்தமிழ்ச் சொற் பொருட் களஞ்சியம்
முதுமுனைவர் இரா. இளங்குமரனார்
10 தொகுதிகள், 3254 பக்கங்கள்
முழுத் தொகுதி விலை: ரூ.4,440.00

தமிழ்மண் பதிப்பகம்
2 , சிங்காரவேலர் தெரு,
தி.நகர், சென்னை- 17.
தொலைபேசி எண்: 044-24339030

பச்சி - சிலர் "பச்சி' என்பதை "பஜ்ஜி' என்பதால் வேற்றுச்சொல் தோற்றம் தருகிறது.
 நல்ல தமிழ்ச் சொல்லே அது.
 பனுகு - நிலத்தைக் கிளறி களை எடுக்கப் பயன்படுத்தும் "பலகுச்சட்டம்'.
 உழவர் கருவிகளில் ஒன்று.
 பெள - வளைதல்
 துடி - அதிர்வுடைய தோற்பறை.
 நவ்வி - மான் வகையில் ஒன்று.
 சீனி - சீனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சருக்கரை.
 கோம்பை - கூம்பு வடிவில் உயர்ந்த மலையின் அடிவாரம் - "கோம்பை' என வழங்கப்பட்டது.
 ஒட்டாரம் - விடாப்பிடி வாதம், முரண்டு.
 ஈதா - இந்தா இதைப்பார், இதை வாங்கு.
 
 
-அபி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com