சொன்னால் நம்பமாட்டீர்கள்!  12

இரவு மணி ஏழு இருக்கலாம். தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் உட்கார்ந்திருந்த எனக்குப் பலவிதமான சிந்தனைகள்.
சொன்னால் நம்பமாட்டீர்கள்!  12

தருமம் தலைகாக்கும்

இரவு மணி ஏழு இருக்கலாம். தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் உட்கார்ந்திருந்த எனக்குப் பலவிதமான சிந்தனைகள்.
திடீரென்று ஒரு பரபரப்பு.
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பெருங்கூச்சல், போலீஸ் காவலர்கள் பலபேர் சூழ்ந்துகொண்டு ஒருவரை அடித்தும், மிதித்தும், கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டும் வந்து கொண்டிருந்தார்கள்.
லாக்கப்பில் இருந்த எனக்கு நன்றாகத் தெரிந்தது. பல போலீஸ் காவலர்கள் சுற்றி நின்று நடுவில் நின்ற ஒருவரைக் காலால் திருப்பித் திருப்பி மிதித்தவாறு ""கொடு இவனுக்கு சுயராஜ்யம்'' என்று ஒருவன் கூற, மற்றவர்கள் அவனை மிதிக்க இப்படியாகச் சிறிது நேரம் அவனை அடித்துத் துவைத்து நான் இருந்த லாக்கப்பிற்கு அருகில் கொண்டு வந்தார்கள்.
லாக்கப்பை திறந்து நான் இருந்த இடத்தில் கழுத்தைப் பிடித்து அவனை உள்ளே தள்ளினார்கள். வந்து விழுந்தவன் ஒரு தேசபக்தன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவன். உடம்பெல்லாம் இரத்த மயமாக இருந்தது.
அவனை உள்ளே தள்ளிய கான்ஸ்டெபிள்களில் ஒருவர் அந்த மங்கலான வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தார். என்னை லாக்கப்பிற்குள் அடைக்கும்போது மேற்படி கான்ஸ்டெபிள் யாரும் அங்கு இல்லை. அதனால் அவர்களுக்கு நான் உள்ளே இருப்பது தெரிந்திருக்காது.
என்னைக் கூர்ந்து கவனித்த கான்ஸ்டெபிள் ""டேய் நீ வந்துட்டியா'' என்று ""தூய தமிழில்'' சில வசைமாரி வார்த்தைகள் பொழிந்து, "நீ வரும் சமயம் நான் இல்லாமல் போனேன். இருந்திருந்தால் இதோ இவனுக்குச் செய்த பூஜை, நெய்வேத்தியம், தீபாராதனை உனக்கும் நடத்தி உள்ளே தள்ளியிருப்போம். இருக்கட்டும், எங்கே போய்விடப் போகிறாய்; காலை விடிந்ததும், வெளியில்தானே வரவேண்டும் அப்போது எலும்பை எண்ணிக் கையில் கொடுத்து விடுகிறேன். போலீஸ்காரனை நீ எவ்வளவு திட்டு திட்டினாய்; உன் நாக்கை அறுக்காமல் விடமாட்டோம்'' என்று ஆவேசமாகப் பேசிவிட்டு அந்தப் போலீஸ் கான்ஸ்டெபிள் வேகமாகச் சென்றுவிட்டார்.
அவர் பேசியது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு கொடூரமாக நேருக்கு நேர் பேசியதை நான் கேட்டதில்லை. விடிந்ததும் பலமான அடி காத்திருக்கிறது என்ற நினைப்பில் மனம் சுற்றி வட்டமிட்ட வண்ணம் இருந்தது.
எதிரில் அடிபட்டு விழுந்து கிடந்த அந்த அப்பாவி தியாகியின் இரத்தத்தைத் துடைத்து அவனுக்கு ஆறுதல் சொன்னேன். அவனுக்கு விழுந்த அடிகளைத் திருப்பித் திருப்பிப் பார்க்கும்போது இம்மாதிரி அடிவாங்க நாமும் தயாராக வேண்டியதுதான் என்று நானும் என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்.
நெஞ்சில் ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்ததைத் தவிர ஒரு நிமிடம்கூட கண் அயர முடியவில்லை.
ஒவ்வொரு மணிக்கும் போலீஸ் ஸ்டேஷனில் மணி அடிப்பார்கள். காலை மணி 4 அடிக்கும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். இன்னும் 2 மணி நேரத்தில் சிறைக்கதவு திறக்கப்படும். போலீஸ்காரர்கள் சுற்றி நின்றுகொள்வார்கள், கொடு இவனுக்கு சுயராஜ்யம் என்பார்கள். சரமாரியாக உதை விழும். பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். இம்மாதிரி இக்கட்டான சந்தர்ப்பங்களில் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதைவிட வேறு வழி மனிதனுக்கு ஏது?
நானும் சில பிரார்த்தனைப் பாடல்களை ஆண்டவன்பால் லேசாகப் பாட ஆரம்பித்தேன். சிறு வயதில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலிய பக்திப் பாடல்களை எனது தந்தையார் ஆசிரியர் வைத்து படிப்பித்திருக்கிறார். அதனால் எனக்குப் பல பக்திப் பாடல்கள் மனப்பாடம். ஆகவே தெரிந்த பாடல்கள் அனைத்தையும் பாடிக்கொண்டேயிருந்தேன்.
மெதுவாகப் பாடினால் இறைவன் காதில் விழுமோ விழாதோ என்று சிறிது உரக்கவே பாடினேன்.
""யாரடா அவன் கழுதைப்போல் கத்துவது'' என்று ஓர் இடி முழக்கம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இருந்து கேட்டது. உடனே மற்றொரு குரல் மெதுவாக, "மரியாதையாகச் சொல்லுடா, பாடுவது யார் தெரியுமா?'' என்று முதல் குரலை அடக்கியது. யாரது என்று முதல் குரல் கேட்டது.
"வருடா வருடம் தீபாவளி அன்று முள்ளிக்குண்டு தோட்டத்திற்குச் சென்று வேஷ்டி, புடவை, சாப்பாடு பொட்டலம் வாங்கிக் கொண்டு வருவாயே ஞாபகம் இருக்கிறதா?'' என்று இரண்டாவது குரல் சொன்னது.
"ஆம். அதற்கும், இவனுக்கும் என்ன சம்பந்தம்'' என்று முதல் குரல் அதட்டியது.
"சம்பந்தம் இருக்கிறது. ஆண்டுதோறும் தீபாவளி அன்று தருமம் செய்வாரே அந்தப் புண்ணியவான் தருமப் பிரபு சோமசுந்தரம் செட்டியார், அவருடைய தங்கை மகனடா இவர்'' என்று இரண்டாவது குரல் பாசத்துடன் கூறியது.
"அப்படியா சோமசுந்தரம் செட்டியார் தங்கை மகனா'' என்று முதல் குரல் பணிவாகச் சொல்லியது.
"ஆம் ஜாக்கிரதையாக மரியாதையாகப் பேசு'' என்றது இரண்டாவது குரல்.
இந்த இருவரின் சம்பாஷணை என் காதில் தெளிவாக விழுந்தது.
என்னை அதட்டி மிரட்டிய கான்ஸ்டெபிள் பெயர் நாகலிங்கம் என்றும், என் தாய்மாமன் தருமத்தை எடுத்துச் சொல்லி நாகலிங்கத்தை அடக்கிய கான்ஸ்டெபிள் பெயர் ஆறுமுகம் என்றும் தெரிந்து கொண்டேன்.
அன்றைய சூழ்நிலையில் 1942-இல் ஆகஸ்ட் போராட்டம் நடந்து கொண்டிருந்தபடியால் போலீஸ்காரர்கள் கான்ஸ்டெபிள் வீடுகளுக்குச் செல்லாமல் இரவில் போலீஸ் ஸ்டேஷனில் படுத்துக் கொண்டு இருந்தார்கள்.
காலை மணி 6 அடித்தது. சிறைக் கதவைத் திறக்கும் காவலாளி சாவிக்கொத்துகள் குலுங்க வந்து கொண்டு இருந்தான். அவன் பின்னால் 10, 15 போலீஸ்காரர்கள் கூடவே வந்தார்கள். முதல் நாள் அந்தி நேரத்தில் என்னை அடிப்பதாக மிரட்டிய மேற்படி நாகலிங்கமும் வந்து கொண்டு இருந்தார். நான் அடி வாங்குவதற்குத் தயாராக மனதைத் திடப்படுத்திக்கொண்டு எழுந்து நின்றேன்.
காவலாளி கதவைத் திறந்தான். போலீஸ்காரர் நாகலிங்கம் முன்னால் வந்து என் தோள்மீது கையை வைத்தார். சரி தீர்ந்தோம் என்று நான் நினைத்தபோது மேற்படி நாகலிங்கம், "தம்பி தர்மபிரபு சோமசுந்தரம் செட்டியார் தங்கை மகன் என்று தெரியாமல் உன்னைத் திட்டிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்துவிடு. ஏனென்றால் உன் தாய்மாமனிடம் பல ஆண்டுகள் நாங்கள் குடும்பத்தோடு வாங்கிச் சாப்பிட்டவர்கள். அந்த குடும்பத்தைச் சார்ந்த யாருக்கும் நாங்கள் தீங்கு நினைக்கக் கூடாது'' என்று நாகலிங்கம் நா தழுதழுக்கச் சொன்னார்.
எனக்கு என்ன செய்வது என்று தோன்றவில்லை. அடி வாங்கத் தயாராயிருந்த எனக்கு இப்படி ஒரு பெருமையா? என் கண்கள் கலங்கின. என் தாய்மாமன் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களைத் தருமம் செய்வது வீண் என்று பேசியவன் நான். அவர்களிடம் நான் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் தருமம் தலை காக்கும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். அதன்பிறகு அந்த தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷனில் சில நாட்கள் என்னை வைத்திருந்தார்கள்.
அந்த சில நாட்களும் நாகலிங்கமும் போலீஸ் காவலர்களும், எனக்கு வேண்டிய செளகரியங்கள் செய்து கொடுத்து ராஜபோகமாக வைத்திருந்தார்கள் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.
- தொடரும்


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com