தினமணி கதிர்

தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வந்ததற்கான காரணம் தெரியுமா?

DIN


தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வந்ததற்கான காரணம்,  பல வகையில் கூறப்பட்டாலும், ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கான காரணமும் நிவாரணமும் கூறப்பட்டுள்ளதா? ஒரே மாதிரியான வியாதியும் பல இடத்திலும் பரவுவதற்குக் காரணமென்ன? 
  -பரணி, மேற்குமாம்பலம், சென்னை.

ஆயுர்வேத நூல்களில் சரகஸம்ஹிதை என்ற பெரிய நூல் மிகவும் பிரசித்தமானது. இந்தப் புத்தகத்தை இயற்றியவர் அக்னிவேசர். அவருடைய குரு புனர்வஸூ ஆத்ரேய மஹரிஷி. ஆத்ரேயரும் அக்னிவேசரும் இன்றிலிருந்து குறைந்தது சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரத தேசத்தில் இருந்தவர்கள் என்பது சரித்திரக்காரர்களின் நிர்ணயம். ஏக காலத்தில் நாடு நகரங்கள் எங்கும் துன்புறுத்தும் வியாதிகள், வாயு, நெருப்பு, தண்ணீர், ஆகாயம், பூமி, காலம், தேசம் போன்ற மக்களுக்குப் பொதுவான இயற்கை குணங்கள் தம் இயற்கைத் தன்மை மாறி பருவகாலத்திற்குக் கேடுவிளைவிக்கும் நிலை ஆகியவை அந்தக் காலத்திலும் ஏற்பட்டு, அதைப்பற்றிய ஆராய்ச்சிகள், சிந்தனைகள் நடத்தியிருப்பதைச் சரகஸம்ஹிதை மிகத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. 

எல்லாருக்கும் பொதுவாகவுள்ள வாயு, தண்ணீர், தேசம், பருவகாலங்களின் கெடுதலினால் மக்களுக்குப் பொதுவான நோயும், பஞ்சமும் ஏற்படுகிறது சரி. ஆனால் இவை நான்கும் தனித்தனியாகவோ சேர்ந்தோ கெடுதல் அடைவதற்கு மூலகாரணங்கள் என்ன என்று சிஷ்யர்கள் வினவ, குருவின் பதில் 
சரகஸம்ஹிதையிலிருந்து-தேசம், காலம், வாயு, தண்ணீர் ஆகியவற்றிற்குக் கெடுதல் வருவதற்கு ஒரே காரணம் அதர்மம்தான். இந்த ஜன்மத்தில் செய்த அதர்மம், முன்பிறவியில் செய்த அதர்மம் ஆகிய இரண்டும் தான், வேறல்ல. இருவித அதர்மங்களுக்கும் மூல காரணம் மக்களின் ஒழுங்கீனம். நீதிநெறிகள் மீறப்பட்டு மக்கள் காலத்தை அனுசரித்து நிர்பந்தத்தினால் அதிகமாய் அதர்மத்தில் ஈடுபடுகிறார்கள். 

தர்மம் குறையக் குறைய லோகபாலர்களான தேவதைகளின் சக்தியும் அநுக்கிரகமும் அழிந்து பருவகாலங்கள் கேடுறுகின்றன. மழை மாரியின்றி வறட்சியோ, அதிகம் பெய்து (தற்சமயம் மும்பையைப்பாருங்கள்) பயிர்களின் அழிவோ ஏற்படுகிறது. பருவமழை காற்று வெய்யில் எல்லாம் விபரீதமாகி உணவு தானியங்களும், செடி,கொடி கறிகாய்களும் வளமின்றிக் கேடுறுகின்றன. 

இயற்கை எல்லாவிதத்திலும் வாயுமண்டலம் பூராவும் ஒருவித வியாதி விதைகளை வாரித் தெளித்துவிடுகிறது. எங்கும் நிறைந்துள்ள வாயு மண்டலத்திலிருந்து வியாதி வீசப்படுவதால் அதைத் தடுத்துக் கொள்ள முடியவில்லை. நாடு நெடுக மக்கள் ஏககாலத்தில் பிணி வாய்ப்படுகின்றனர்.

உலகில் எந்தக் காலத்திலும் மக்களின் இன்பத்திற்கு ஆதி மூல காரணம் அவர்கள் அனுஷ்டிக்கும் தர்மம். துன்பத்திற்குக் காரணம் அதர்மம் என்பது நிச்சயம். முற்காலத்தில் தர்ம அனுஷ்டானம் நிரம்பி இருந்தது. அதனால் இயற்கை வளம் குறையாமலும், நோய்கள் அதிகம் ஏற்படாமலும் இருந்தன. அதர்மம் அதிகமாக நோய்களைவிடக் கொடுமையான சண்டைகள், அமைதியின்மை, பீதி, வறுமைகள் எல்லாம் சேர்ந்து பாதிக்கின்றன.

ஒழுங்கீனத்தால் விளைந்த அதர்மம், அதர்மத்தினால் பருவகாலங்களின் கெடுதி, அதைத் தொடர்ந்து தண்ணீர், நிலம், ஆகாயம் கேடுற்று விடுவதால், இயற்கை மாறி வியாதி எனும் விதை நிறைந்த வாயுவை சுவாசித்தலும், மேல்படுவதினாலும் ஒரே நேரத்தில் மக்களிடம் வியாதி ஏற்படுகின்றது. இவை மாறுவதற்கு - தர்மத்தை சிரத்தையுடன் அனுஷ்டித்தல், பஞ்சகர்மா எனும் வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா, நஸ்யம் எனும் மூக்கில் மருந்துவிடும் முறை, ஸிராவ்யதம் எனும்  காரி ரத்தக் குழாயைக் கீறி கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்தும் முறை ஆகியவற்றைச் செய்து கொள்ளுதல், பலம் புஷ்டி தரும் ஆயுர்வேத மருந்துகளை உபயோகித்தல், பிரும்மசரியத்தை அனுஷ்டித்தல், தினசர்யை எனும் அன்றாட வாழ்க்கை முறையை ஆயுர்வேத முறைப்படிக் கடைப்பிடித்தல், தேவதா பூஜைகள், நவகிரக சாந்தி, ஜபஹோமங்கள் வழியாக பாப பரிகார பிராயச்சித்தங்கள் பலமாய் விதிப்படி செய்தல், உண்மை, தயவு, தாட்சண்யங்களுடன் இருத்தல் ஆகியவையே உங்களுடைய கேள்விக்கான விடையாக ஆயுர்வேதம் உபதேசித்திருக்கிறது.  
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT