மெளனமான    கோபங்கள்

""ராஜா... எட்டு மணிக்குப் புறப்பட்டாத்தான் டென்சன் இல்லாம ஒன்பதரை ரயிலைப் பிடிக்க முடியும்... மணி இப்பவே ஏழே கால் ஆயிட்டுது... சீக்கிரம்
மெளனமான    கோபங்கள்


""ராஜா... எட்டு மணிக்குப் புறப்பட்டாத்தான் டென்சன் இல்லாம ஒன்பதரை ரயிலைப் பிடிக்க முடியும்... மணி இப்பவே ஏழே கால் ஆயிட்டுது... சீக்கிரம் ரெடியாகு...''

""சரிப்பா... பிடிச்சிடலாம்... பிடிக்க முடியுமோ முடியாதோன்னு இப்ப இருந்தே கவலப்பட ஆரம்பிச்சிடாதிங்க...''    மகனின் பதில், நம்பிக்கையைத் தந்தது.  இருந்த போதிலும் ஒருவிதமான பதட்டத்தை  ராமசாமிக்கு ஏற்படுத்தியது.  பாத்ரூம் போவது போல பாவலாக் காண்பித்து இரண்டு தடவை ராஜாவின் அறையை கடைக்கண்ணால் பார்த்தார். அவன் தயாராகி விட்டதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. மனைவி மல்லிகாவுடன் உரையாடலில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். 

""நேரம் ஓடிக்கிட்டே இருக்கு...  நாம ரெடி... இந்த பயல் ரெடியாகாம பேசிப் பேசிப் பொழுதைப் போக்கிக் கிட்டே இருக்கான்''
மனைவியிடம் மகனின் தாமதம் பற்றிச் சொன்னார் ராமசாமி.

""நீங்க எப்பவும் முன்னாடியே ரெடியாகிடுவீங்க... அத எல்லார்கிட்டயும் எதிர்பார்க்க முடியுமா? பொறுமையா இருங்க... கார்லதான போகப் போறோம்... கரெக்டா ரெயில் வர்றதுக்குள்ள  போயிடுவான்''

மகனுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினாள் சிவகாமி.  அவளும் தயாராகிப் பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட்டன. மகன் "லேட்'  பண்ணுகிறான் என்று மனதுக்குள் தோன்றினாலும் அதனை வெளிக் காட்டாமல் சமாளித்தாள் சிவகாமி. 

நாளை திருநெல்வேலியில் ஒரு சின்ன விசேஷம். மகள் வழிப் பேரன், பேத்திகளான இரட்டையருக்கு அன்னப் பாயாசம் தருகிறார்கள். பிறந்து ஆறாவது மாதத்தில் பிடித்த கோயிலில்... பிள்ளைகள் பெயரில் அர்ச்சனை பண்ணி... பாயசத்தை அவர்கள் நாக்கில் தொட்டு வைத்துவிட்டு... வந்தோருக்கு வினியோகம் செய்வார்கள்.  இதற்கு அனைவரும் அவசியம் வரவேண்டும் என்று மாப்பிள்ளையும், மகளும் விரும்பி அழைத்திருந்தார்கள். 

மகன் ராஜாராமனுக்கு விடுப்புக் கிடைக்கவில்லை. அதனால் ராமசாமியும், சிவகாமியும் நிகழ்ச்சியில் கலந்து விட்டு ஒரு நான்கைந்து நாட்கள் பேரப் பிள்ளைகளுடன் பொழுதைப் போக்கிவிட்டு திரும்புவதாக தீர்மானித்திருந்தனர்.  மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு தினமும் காலை ஒன்பது முப்பது மணிக்கு ரயில் கிளம்புகிறது.  இந்த இண்டர்சிட்டி ரயிலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்தாயிற்று.  அப்பா, அம்மாவைக் காரில் கூட்டிப் போய் மதுரையில் ரயில் ஏற்றி விட்டு, ராஜாராமன் அலுவலகம் போவது என்பது ஏற்கெனவே போட்ட பிளான். 

காலை எட்டரை மணிக்கு ஒரு வழியாக காரை எடுத்தான் ராஜாராமன்.  ஒன்பது மணி வாக்கில்  கார் மதுரைக்குள் நுழைந்து விட்டது.  அதற்குப் பிறகுதான் இராகு காலம் பிடித்தது. அபசகுனமாய் அடுத்தடுத்து விழுந்த சிக்னல்கள், வாகனப் போக்குவரத்தில் ஏற்பட்ட   நெரிசல்கள், விஐபி வருகைக்காக வண்டிகளின் நிறுத்தம்... இத்தியாதிகளால், கார் ரயில் நிலைய வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு வருவதற்குள் இண்டர் சிட்டி ரயில் புறப்பட்டுவிட்டது. 

""டிராபிக் ஜாம், விஐபி விசிட்... இல்லாட்ட பிடிச்சிருக்கலாம்... சரி என்ன செய்றது.. பஸ்ஸில போங்க ஏத்தி விடுறேன்''

ராஜாராமன் தானாகப் பேசிக் கொண்டான். காரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திற்கு ஓட்டினான்.

""இதுக்குத்தான்... அப்பா அடிக்கடி சீக்கிரம் புறப்படு... சீக்கிரம் புறப்படுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. நீ காதிலயே வாங்கிக்கிடல. ஒரு அரைமணி நேரம் முன்னாடி கிளம்பி இருக்கலாம்.  இப்பப் பாரு ரிசர்வேசன் பண்ணினது வேஸ்டாப் போச்சு.  பஸ் டிக்கட்டுக்கு வேற பணம்கொடுக்க வேண்டியது இருக்கு.  அது கூட பரவாயில்ல ரயில்னா ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போக வசதியா இருக்கும்.  பஸ்சுல அவன் நிக்கிற இடத்துலதான் போக முடியும்.  கீழே இறங்கி டாய்லட்டுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்.''    சிவகாமி மெதுவாகப் புலம்ப, ராமசாமி இது பற்றி எதுவும் பேசவில்லை.  அமைதியாகவே இருந்தார். 

பைபாஸ் ரைடர் விரைவுப் பேருந்தில் ஏற்றிவிட்டு டிக்கெட் எடுத்துக் கொடுத்து, ""போய்ச் சேர்ந்திட்டு, போன் பண்ணுங்க'' பொதுவாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டான் ராஜாராமன். தேவை இல்லாமல் காலம் தாழ்த்தி ரயிலைக் கோட்டை விட்ட உறுத்தல் மனதுக்குள் இருக்கத்தானே செய்யும்?
பேருந்து புறப்பட்டது.

""மணி பத்துக்கு மேலாச்சுங்க... இட்லி சாப்பிடுங்க''
""வேண்டாம் நீ சாப்பிடு...    ஏன்?''
""பசிக்கலை''
"ரயில்னா சாப்பிட வசதியா இருந்திருக்கும்'  முனங்கிக் கொண்டு சிரமப்பட்டு சாப்பிட்டாள் சிவகாமி.

பேருந்து விருதுநகர் தாண்டிய பிறகு, சாப்பிட வற்புறுத்தினாள். ராமசாமி மறுத்து விட்டார். அவரது முகம் இறுக்கமாகவே இருந்தது.  எதுவும் பேசவில்லை.  பச்சைத் தண்ணீர் கூட  குடிக்கவில்லை.  மகள் வீட்டுக்குப் போய் பேரக் குழந்தைகளைப் பார்த்த போதுதான் அவரின் முகத்தில் இறுக்கம் காணாமல் போயிற்று. வந்து சேர்ந்து விட்ட தகவலை நீயே தெரிவித்து விடு என்று சிவகாமியிடம் சொல்லி விட்டார். 

வந்து சேர்ந்த தகவல் மட்டுமின்றி, பேரப் பிள்ளைகள் செய்யும் மழலைக் குறும்புகள், விளையாட்டுகள், அடுத்த நாள் நடைபெற்ற அன்னப் பாயச வைபவத்தில் நிகழ்ந்த சுவாரசியங்கள்... வரும்போது அப்பாவிடம் இழையோடிய கலகலப்பின்மை... தாங்கள் திரும்பி வருகிற தினம், வருகிற ரயில் போன்ற சங்கதிகளை அவ்வப்போது மகன், மருமகளுக்கு சிவகாமிதான் செல்போனில் சொன்னாள்.  ராமசாமிக்கு பேரப் பிள்ளைகளை கொஞ்சிக் குலாவுவதிலேயே நேரம் போனது. 

மழலைக்கனி அமுதுகளுடன் ஐந்து தினங்களை மகிழ்வாய்ப் போக்கிவிட்டு ராமசாமி-சிவகாமி தம்பதியர் ஊர் திரும்பினர்.  வெள்ளிக்கிழமை தோறும் பாண்டிச்சேரிக்கு குறுக்கு வழியில் மானாமதுரை மார்க்கமாக எக்ஸ்பிரஸ் ரெயில் செல்கிறது. அந்த வண்டியில் நேரடியாக மானாமதுரைக்கு வந்து விட்டார்கள். 
""சாரிப்பா.... அன்னக்கி என்னால இண்டர்சிட்டி ரயிலப் பிடிக்க முடியாமப் போச்சு... அதானால  நீங்க அனாவசியமா அசெüகரியப்பட வேண்டியதாப் போச்சு...தேவையில்லாத டென்சன் வேற... இனிமே இப்படி ஒரு நெலமை ஏற்படாதுப்பா''
அன்று நடந்ததற்கு அப்பாவிடம் மன்னிப்புக் கேட்கும் தொனியில் பேசினான் ராஜாராமன். 

""அனுபவத்தில பெரியவுங்க நல்லதத்தான் சொல்லுவாங்க... அத ஒங்கள மாதிரிப் பசங்க கேக்கலைன்னா.... நாங்கதான் தேவையில்லாம  திண்டாட வேண்டியிருக்கும்''
சுருக்கமாக இப்படி அபிப்ராயம் சொன்னதைத் தவிர ராமசாமி வேறெதுவும் வாய் திறக்கவில்லை.

""ஓக்கேப்பா... ரயில்ல வந்த களைப்பு இருக்கும். சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க''

""என்ன இருந்தாலும்... ஒங்களுக்கு இவ்வளவு வைராக்கியம் ஆகாதுங்க... இட்லி சாப்பிட மாட்டேன்னுட்டிங்க... தாகத்துக்கு தண்ணி கூட குடிக்கல... வீடு போய் சேர்ற வரைக்கும் எங்கிட்டயும் எதுவும் பேசல... அவன்கிட்டயும் இப்ப வரைக்கும் ஃபோன்ல பேசல... அப்பிடி என்ன பிடிவாதம் வேண்டி கிடக்க இந்த வயசுல...''

""அட அசடே... ரயில விட்டதும், கசப்பான வார்த்தைகளக் கக்கி இருந்தா என்ன நடந்திருக்கும்? அவனும் பதிலுக்கு வார்த்தைகளக் கொட்டி இருப்பான். அதுக்கு திரும்ப  நா கோபப்பட்டுக் குமுற... பிரச்னை புரியறதுக்குப் பதிலா விசுவரூபம் எடுத்திருக்கும்... இப்பப் பாரு என்னோட நடவடிக்க அவன யோசிக்க 
வச்சிருக்கு... நீயும் நா பேசாம வந்தத...  சாப்பிடாம இருந்தத அவன்கிட்ட சொல்லி இருப்ப...  அது அவனோட மனசப் பிசைஞ்சிருக்கும்... அவனோட தவற ஒணர வச்சிருக்கு... ஆத்திரப்பட்டு கோபத்தக் கொட்டலாம்... அமைதியா இருந்தும் அதை வெளிப்படுத்தலாம்... நா நடந்துக்கிட்ட முறை  "பாசிடிவ்' முடிவக் கொடுத்திருக்கு... தெரிஞ்சுக்கோ...''

குறைகளை கொட்டித் தீர்க்கவில்லை. கோபத்தை வெளிப்படையாய்க் காட்டவில்லை. அதனை
மெளனத்தால் மகனுக்கு விளங்க வைத்தது அவரின் சாதுரியந்தான்...  இந்த சமாச்சாரத்தில் கணவர் கடைப்பிடித்த பாணி, சிவகாமியை நெகிழ்வடைய செய்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com