வறண்ட விதர்பாவில் பேரீச்சம் பழ புரட்சி!

மகாராஷ்டிரா  மாநிலத்தின்  வறண்ட விதர்பா பகுதியில் பேரீச்சம்   மரப்   பண்ணையை  அமைத்து  நல்ல மகசூல்  அறுவடைசெய்யும்    "ஒரு முன்மாதிரி'
வறண்ட விதர்பாவில் பேரீச்சம் பழ புரட்சி!


மகாராஷ்டிரா  மாநிலத்தின்  வறண்ட விதர்பா பகுதியில் பேரீச்சம்   மரப்   பண்ணையை  அமைத்து  நல்ல மகசூல்  அறுவடைசெய்யும்    "ஒரு முன்மாதிரி'  விவசாயியாக   மாறியிருக்கிறார்,   சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட தங்கவேல்.  

அறுபத்தெட்டு வயதாகும் தங்கவேல்  தான் விவசாயியாக  வெற்றி பெற்றது குறித்து மனம் திறக்கிறார்:

""எனது பண்ணை   நாக்பூரிலிருந்து  சுமார் இருபத்தைந்து கி. மீ. தூரத்தில் உள்ளது. இந்தப் பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் சோயாபீன்ஸ், நெல், பருத்தி, கரும்பு போன்றவற்றைத் தான் பயிரிடுவார்கள். ஆனால் நானோ பேரீச்சம் மரங்களை வளர்த்தேன். சுமார் நூற்று ஐம்பது  பேரீச்சம் மரங்கள் எனது பண்ணையில் உள்ளன. நான்  இந்தப் பகுதி விவசாயிகள் போன்று  பாரம்பரிய  பயிர்வகைகளை  வளர்ப்பது என்று ஒரே பாதையில் பயணிக்கவில்லை. மாற்றி யோசித்தேன். இந்தப் பகுதியில் கோடை காலத்தில்  நிலவும் அதீத வெப்பம் சில பயிர்வகைகளுக்கு உகந்தது. அதில் ஒன்றுதான் பேரீச்சம் மரங்கள்.    

 எனது பெற்றோர் பிறர் நிலங்களில் உழவுத் தொழில் செய்யும்   ஏழைத்  தொழிலாளர்கள். குழந்தைகள் ஆறுபேர். ஒரு வேலை உணவு கிடைப்பதே கஷ்டம்.    "பியுசி'  வரை படித்தேன். 1974 } வாக்கில் நாக்பூர்  மருத்துவமனை ஒன்றில்  வேலை கிடைத்தது.  நாக்பூருக்கு பயணிக்கும் முன் அப்பா என்னிடம்  சொன்னார். ""பணத்தை சேமித்து வைக்காதே. கையில் இருக்கிற பணத்தை மண்ணில் போடு... பின்னாளில் அது உன்னை  தூக்கி நிறுத்தும்''  அவர் சொன்னதை  நான் செய்ததுதான் எனது வெற்றிக்  கதையின்  வித்து. 

சேமிப்பை வைத்து  கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வாங்கிப் போட்டேன். ஒய்வு நேரங்களில் பண்ணைகளில் வேலை செய்தேன். சிறிது நாளில் எனது நிலத்தில் காய்கறிகளைப் பயிரிட்டேன்.  கொஞ்சம்  பணமும் கிடைத்தது.  ஆனாலும் விதர்பா பகுதி விவசாயிகள்  வறட்சியினால்  கஷ்டப்படும் போது  நானும் கஷ்டத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிவந்தது. பருவ நிலை மாற்றங்களை   எதிர் கொண்டு  விளைச்சல் தரும் பயிர்வகைகளை  பயிரிட்டால்தான்  விவசாயிக்கு வருமானம் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டேன்.  வேலையிலிருந்து 2010 -இல் ஓய்வு பெற்றதும்  பண்ணை வேலைகளில் முழு மூச்சாக இறங்கினேன்.  பேரீச்சம் மரங்களுக்கு வளமான நிலம் தேவையில்லை. பாலைவனம் மாதிரியான நிலம் போதும்.  தண்ணீரும்  அளவாகப் போதும். கடும் வெப்பம், கடுங்குளிர் போன்றவற்றைத்  தாங்கும்  ஒரே பயிர் பேரீச்சம் மரம்தான்  என்று முடிவு செய்தேன்.  

அந்த தருணத்தில்  நான் செüதி அரேபியா  சென்று வந்தேன்.  செüதி  அரேபியாவில்  பேரீச்சம்  பழத் தோட்டங்களில் பணி புரிந்த நண்பர் ஒருவரிடம்  தொழில் நுணுக்கம் பற்றித் தெரிந்து கொண்டேன்.   குஜராத்திலும் பேரீச்சம்  பண்ணைகள் உள்ளன. அவற்றையும் சென்று பார்த்து வந்தேன். ஓரளவுக்குத்  தெளிவு ஏற்பட்டது. துணிந்து  முப்பது  பேரீச்சம்  கன்றுகளை  எனது நிலத்தில் நட்டேன். 

  விதர்பா பகுதியில்  நான்தான் முதலில்  இந்த  மாற்று விவசாயத்தைத் தொடங்கினேன். தொடக்கத்தில் என்னைக் கேலி செய்தார்கள். அப்போது ஒரு  பேரீச்சம்  மரக்கன்றின்  விலை ஆறாயிரம் ரூபாய்.  முதல் மூன்று ஆண்டுகள் மரக் கன்றுகள் வளர்ந்தன. நான்காம் ஆண்டு பூக்கத் தொடங்கின.  ஒவ்வொரு   மரமும் சுமார் இருபத்தைந்து கிலோ  பேரீச்சம் பழங்களைத் தந்தன.  கிலோ முந்நூறுக்கு  பழங்களை விற்றேன். போட்ட முதலீடு  திரும்பக் கிடைத்தது. கூடவே லாபமும்.  

 இப்போது எனக்கு இருபத்தைந்து ஏக்கர் நிலம் இருக்கிறது.  முன்னூறு பேரீச்சம்   மரங்களை வளர்த்திருக்கிறேன். அவை தலா  நூறு கிலோ பழங்களைத் தருகின்றன. அவற்றை கிலோ இருநூறுக்கு விற்று வருகிறேன்.  எனது வெற்றியைப் பார்த்து  இதர விவசாயிகளும்  பேரீச்சம்  மரங்களை வளர்க்க  முன்வந்திருக்கிறார்கள்.   நான் அவர்களுக்குப் பயிற்சி தந்து வருகிறேன்.

தற்சமயம்  ஒரு பேரீச்சை  மரக்கன்று  மூவாயிரத்து ஐநூறு  என்று விற்பனையாகிறது. நானும் எனது மகனும்  பேரீச்சம் மரங்கள் நடுதல், பராமரிப்பு, அறுவடை குறித்து  விவசாயிகளுக்குப்  பயிற்சி தந்து வருகிறோம்.   
கால மாற்றத்திற்கேற்ப   காளான்கள், ஸ்ட்ராபெரி பழத்தையும் உற்பத்தி செய்து வருகிறோம்.   விவேகமும் உழைப்பும்  இருந்தால்  வயலிலும்  சாதனை படைக்கலாம்'' என்கிறார் தங்கவேலு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com