தினமணி கதிர்

இப்படிக்கு இந்து...

DIN

அலுவலக விஷயமாய் வெளியூர் சென்று திரும்பிய ரகுவை பூட்டிய கதவு தான் வரவேற்றது. எங்கே போய் தொலைந்தாள் இவள்? தன்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்து உள்ளே வந்தவனுக்கு ஏதோ வித்தியாசம் தெரிந்தது. இவன் வழக்கமாய் மொபைல் வைக்குமிடத்தில் நான்காய் மடிக்கப்பட்ட ஒரு கடிதம். கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கே சென்றாள்? ஏதோ நெருட நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு படிக்கத் தொடங்கினான்.
 மை டியர்,
 என்ன அதிர்ச்சியாய் இருக்கிறதா? எனக்கும் உங்களிடம் சொல்லாமல், கொள்ளாமல் கடிதம் எழுதி வைத்து விட்டுச் செல்வது கோழைத்தனமாய்த்தான் இருக்கிறது. என்ன செய்ய? நேரில் பேசினால் நான் பேச நினைப்பதை, சொல்ல வருவதை எல்லாம் இத்தனை கோர்வையாய் சொல்ல எனக்கும் தெரியாது. கேட்க உங்களுக்கும் பொறுமை இருக்காது. அதனால் தான் இக் கடிதம்.
 ரகு, நான் இப்படி அழைப்பது உங்களுக்கு பிடிக்காது என்று தெரியும். திருமணத்தன்று இரவு, நான் சிறுவயதில் இருந்தே அறிந்தவர் என்ற உரிமையில் வெகு யதார்த்தமாக உங்களைப் பெயரிட்டு அழைக்க, உங்களுக்கு வந்ததே கோபம்! அதையும் வெளிக்காட்டாமல் நீங்கள் பேசிய விதம்... ""உங்க வீட்டில நாயைக் கூட இப்படித்தான பேர் சொல்லி கூப்பிடுவீங்க?''"அப்பப்பா அன்று ரணமான என் மனம்! இன்று வரை அதை ஆற விடவில்லையே நீங்கள்?
 நாம் பிறந்ததில் இருந்தே அடுத்தடுத்த தெருவில் வசித்தவர்கள் தாம். அதனால் சிறு வயதில் இருந்தே ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். என்ன அப்போது பொருளாதாரத்தில் நாங்கள் சற்று வளமையாகவும், நீங்கள் சற்று சுணக்கமாகவும் இருந்தீர்கள். இதில் நம் தவறு ஏதும் இல்லையே? நானோ, என் வீட்டாரோ இதை காரணம் காட்டி ஏதாவது வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறோமா? பின் ஏன் ரகு இப்படி?
 ரகு, நீங்கள் எங்கள் வீட்டைக் கடக்கும் போதெல்லாம் உங்கள் பார்வை என்னை ஏக்கமாக, இதமாக, வருடுவதை உணர்ந்திருக்கிறேன். அத்தோடு வந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து பீனிக்ஸ் பறவை போல் உயர்ந்து வாழ்வில் வளர்ந்தீர்களே... அந்த பிரமிப்பு உண்டு உங்கள் மேல் எனக்கு. அதனால் தானே பெண் கேட்டு வந்த போது உடனே ஒப்புக்கொண்டேன்.
 ஆனால், மனதால் வளராமல் போய் விட்டீர்களே ரகு! என் பிறந்த வீட்டினருடன் நான் நெருங்கிய தொடர்பில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு உறுத்தாத வகையில் அதையும் குறைத்துக் கொண்டேனே... அது மட்டுமல்ல, பள்ளிப் பருவத்தில் நீங்கள் இருந்த நிலையில், முன்னேற வேண்டும் என்ற வெறியில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியதில், வேறு எந்த கலைகளிலும் ஆர்வம் இல்லாமல் போனது. இதில் பிழை ஏதுமில்லையே? ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒன்று, எனக்குத் தெரிந்திருக்கிறது என்ற நினைப்பையே தாங்கிக் கொள்ள முடியவில்லையே உங்களால்.
 அப்படியும் இருந்தேனே நான், எனது பாட்டு, நடனம் என எல்லாத் திறமைகளையும், ரசனைகளையும் எனக்குள் நானே பதுக்கிக் கொண்டு, உங்களுக்காக, உங்கள் அன்பிற்காக மட்டுமே வாழ்ந்தேனே நான். ஆனால் எனது இந்த விட்டு கொடுத்தலை, எனது பலவீனமாக தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களே, ரகு. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தவுடன், உங்களுக்கு சமமாக நானும் இருப்பதா என்ற ஈகோ உறுத்த இனி வேலைக்குப் போகக் கூடாது என்று கட்டளையிட்டீர்களே... அப்போது விழித்துக் கொண்டேன்.
 அது என்ன ரகு, நீங்கள் மட்டுமல்ல, எல்லா ஆண்களும் காலம் காலமாய் இதையே சொல்கிறீர்கள்? " "ஒண்ணு நான், இல்லாட்டி வேலை, என்ன வேணும்னு நீயே முடிவு பண்ணிக்க'' சக்திகளாகிய நாங்கள் இல்லாமல் ஆண்களாகிய நீங்கள் வாழத்தான் முடியுமா? அல்லது வேறு பெண் வெகு எளிதாய் கிடைப்பாள் என்ற தெனாவெட்டா? காலம் மாறி விட்டது ரகு. எலிஜிபிள் பாச்சுலர்ஸ்கே பெண் கிடைப்பது கஷ்டமாகி வருகிறது.
 அது போகட்டும்; உங்கள் கட்டளைக்கு வருகிறேன். நான் வேலைக்குச் செல்வதால் நம் இல்லற வாழ்விற்கு ஏதேனும் இடைஞ்சல் இருக்கிறதா என யோசித்தேன். ஒன்றும் இல்லை. பின் ஏன் வேலையைவிட வேண்டும்? உங்கள் ஈகோவை திருப்திப்படுத்த ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு, உங்களிடம் முதன் முறையாய் பொய் சொன்னேன், வேலையை விட்டு விட்டதாய்.
 இந்த ஒரு மாதமாய் நீங்கள் என்னைப் படுத்திய பாடு. இது வரை நான் ஏதோ பஞ்சகல்யாணி குதிரையாய் திமிறிக் கொண்டிருந்தது போலவும், நீங்கள் தேசிங்கு ராஜனாய் என்னை அடக்கியது போலவும்... அப்பப்பா ஏதேதோ பேச்சுகள்... ஏச்சுகள்... காய்ந்த புண்ணை பிய்த்து பிய்த்து ரணமாக்கி ரசிப்பது போல் எங்கோ யாரிடமோ, எப்போதோ அவமானப்பட்டதற்குப் பதிலாக என்னை பழி வாங்கி கொண்டு... நீங்களும் நிம்மதி இல்லாமல் ... என்னையும் சித்ரவதைப்படுத்தி... ஏன், ஏன் ரகு இப்படி?
 நீங்கள் என் மேல் கொண்ட ஆழ்ந்த காதலை நானறிவேன். ஒரு சமயம் உங்கள் அன்பால் என்னை குளிர்வித்தும், அடுத்த நொடியே தாழ்வுணர்வால் என்னை வாட்டியும்... குளிர்வித்தும், வாட்டியும்... கடவுளே... இன்னும் கொஞ்ச காலம் இப்படியே தொடர்ந்து மாறி, மாறி நடந்தால் மென்மையாய் இருந்த நான் இறுகி சுவராகி விடுவேன். பின் எப்படி ஓர் உயிர்ப்புள்ள வாழ்வை நம் வாரிசுக்கு அமைத்து தர முடியும்? என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா? நேற்று தான் டாக்டர் லீலாவதி நான் கர்ப்பம் என்று உறுதி செய்தார். அதனால் தான் இந்த முடிவிற்கு வந்தேன்.
 அலுவலகத்தில் மாற்றல் வாங்கிக் கொண்டு மதுரை செல்கிறேன். ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு துணைக்கு ஊரிலிருந்து சாரதா அத்தையை அழைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். வெளியில் யாருக்கும் நம் பிரச்னை தெரியாது. மற்றவரைப் பொருத்த வரை நாம் மாற்றலால் பிரிந்து இருக்கிறோம். அவ்வளவு தான்..
 ரகு, ஒரு பெண் மரியாதையாக நடத்தப்படும் வீடு தான், ஒரு பெண் சந்தோஷமாக இருக்கும் வீடு தான், நல்ல தலைமுறையை உருவாக்கும். நான் நல்ல தலைமுறையை உருவாக்க விரும்புகிறேன். அதற்கு நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும். நம் சந்தோஷம் நீடித்து இருக்க நாம் பக்குவப்பட வேண்டும்.
 இந்த பிரிவு நிச்சயம் நம்மைப் பக்குவப்படுத்தும். பக்குவப்பட்ட மனதோடு நீங்கள் என்னை தேடி வரும் போது நாம் நமக்காக, நம் வாரிசோடு சந்தோஷமாக வாழ்வோம்.
 உங்கள் வரவை வெகு விரைவில் மிக உறுதியாய் நம்பும்,
 என்றும் உங்கள் இந்து.
 கடிதத்தின் உண்மை நெஞ்சைச் சுட, தனக்கொரு வாரிசு என்ற உணர்வு பரவசப்படுத்த ,இந்து இல்லா வீட்டின் வெறுமை பலமாய்த் தாக்க, அத்தனை உணர்வுகளாலும் ஆட்கொள்ளப்பட்டு கல்லாய்ச் சமைந்தான் ரகு.
 - சாந்தி குமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT