மனக்கதவு

அன்புமணி பேருந்தில் இருந்து கடைத்தெருவில் இறங்கியபோது மணி மதியம் இரண்டரையைத் தாண்டி விட்டிருந்தது.
மனக்கதவு

அன்புமணி பேருந்தில் இருந்து கடைத்தெருவில் இறங்கியபோது மணி மதியம் இரண்டரையைத் தாண்டி விட்டிருந்தது.

பசி வயிற்றைக் கிள்ளும் நிலையில் தகிக்கும் வெயில் வேறு இருந்தாலும் அவன் மனதில் முக்கிய விருந்தினர் வருவது குறித்த மகிழ்ச்சி. வராதவர் வரப்போகிற குதூகலம்.  வெகுநாளைக்குப் பிறகு அம்மா முகத்தில் சிரிப்பைக் காணப் போகிற ஆனந்தம்.

கைக்கு ஒன்றாக இரண்டு உப்பிய பைகளுடன் வீட்டை நோக்கி அவன் நகரத் தொடங்கிய அடுத்த விநாடி, ஒரு கடையிலிருந்து பதினேழு வயது ரவி வேகமாக ஓடி வந்தான்.

""அப்பா! பாட்டி உப்பு விடுதி போயிடுச்சி, தெரியுமா?''

அன்புமணி முகத்தில் அதிர்ச்சி. 

""பெரியப்பா வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். எப்படிடா போகும்?'' என்று நெற்றியைச் சுருக்கினான்.

""உப்பு விடுதியிலிருந்து நம் ஊர் ஆலைக்கு நெல் அரைக்க வண்டி வந்துச்சி. அதில் ஏறிப் போயிடுச்சி. பொய்யா சொல்றேன்?'' என்று மகன் குரலில் உறுதி காட்டினான்.

""நீ உடனே போய் அம்மாவை அழைத்துக் கொண்டு வா. கேரியர் வைத்த சைக்கிளாக வாடகைக்கு எடுத்துக்கொள்'' என்று சட்டைப் பையில் இருந்து ஐந்து ரூபாய்த் தாளை எடுத்து நீட்ட, வாங்கிக்கொண்டு சைக்கிள் கடையை நோக்கி ஓடினான், ரவி.

மீண்டும் நடையைத் தொடர்ந்த அன்புமணி மனதில் ஏகப்பட்ட குழப்பம்.  அம்மா ஏன் இப்படி செய்தது? மூத்த மகனைப் பார்க்க வேண்டுமென்று ஒரு மாதமா இரண்டு மாதமா சென்ற பதினெட்டு மாதமாகவே தவித்துக் கொண்டும் அழுது கொண்டு இருந்துவிட்டு, அது கைகூடும் நேரத்தில் வீட்டில் இல்லாது புறப்பட்டுப் போயிருக்கிறது என்றால் இதற்குப் பொருள் எப்படி எடுத்துக் கொள்வது?

அண்ணன்தான் அம்மாவுக்காக காத்திருக்கிறவரா? காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டவர் மாதிரி பறக்கிறவராயிற்றே! அம்மா வீட்டில் இல்லை  என்று கேள்விப்பட்ட உடனேயே புறப்பட்டுவிடுவாரே...

அன்புமணியின் அண்ணன் இளங்கோவனுக்கு மாநில அரசுப்பணி. அதிகாரி. வசதி படைத்தவர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய பகுதியில் சொந்த மாளிகை, கார் என்று எல்லா வசதிகளோடும் வாழ்பவர். 

எந்நேரமும் ஓய்வின்றி இயங்கக் கூடியவர்.

அப்படிப்பட்டவர் அம்மாவைப் பார்க்க முந்நூறு கி.மீ தொலைவிலிருந்து தான் பிறந்த கிராமத்திற்கு வருகிறார் என்றால், அது சாதாரண, வேலையா என்ன? அம்மா எப்படி இதை உணராமல் போனது? அன்புமணிக்கு திகைப்புடன் வேதனையும் கூடியது.

அவன் உள்ளுர் நடுநிலைப்பள்ளி ஒன்றில் கைத்தொழில் ஆசிரியராக இருந்தான். குறைந்த சம்பளம் தான். கிராமத்தில் அதை வைத்து வாழ முடிந்தது.

அம்மா புவனேசுவரிக்கு இந்த இரண்டே பையன்கள்தான்.

மூத்த மகன் வீட்டிற்கு புவனேசுவரி சென்றே பல ஆண்டுகள் இருக்கும். அங்கு அவளுக்கு ஒத்துவரவில்லை. அங்கு ஓர் அந்நிய ஆள் மாதிரி இருக்க வேண்டிய சூழ்நிலை.

"மாமியார் ஒரு பட்டிக்காட்டுப் பொம்பளை' என்று அலட்சியப்படுத்தும் மருமகள். இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் வரும் மகன், விழித்திருக்கும் அம்மாவிடம் “சாப்பிட்டியா?” என்ற ஒரு கேள்வியோடு சரி. பேரக் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்க உட்கார்ந்துவிடுவார்கள். பாட்டி பக்கம் திரும்பவே மாட்டார்கள்.

அன்புமணியின் மனைவி அப்படியில்லை. கிராமத்தில் வளர்ந்த பெண். மாமியார் என்ற மரியாதை எப்போதும் இருக்கும். வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு தினம் மாலை வேளைகளில் மாமியாரோடு பேசுவதற்கு உட்கார்ந்து விடுவாள். "பாட்டி பாட்டி' என்று பாசமாய் வரும் பேரன், பேத்திகள். 

அம்மாவிடம் யோசனை கேட்டே எதையும் செய்யும் மகன். அக்கம் பக்கத்தில் எல்லாம் தெரிந்த முகங்களா, பேச்சுத்துணை, மரியாதை.

கணவனை இழந்துவிட்ட கவலையிலும் இளைப்பு நோயிலும் உடல் மெலிந்த நிலையில் அடிக்கடி படுத்த படுக்கையாகிவிடும் புவனேசுவரி, ""என் உசிரு இங்கேதான் போகணும்'' என்று பிதற்றிக் கொண்டு இளையமகன் வசிக்கிற, தான் வாழ்ந்த வீட்டைவிட்டு எங்கும் நகருவது கிடையாது.

முதலில் மாதத்திற்கு ஒரு முறையும் பிறகு மூன்று மாதம், ஆறு மாதம் என்று எடுத்துக்கொண்டும் தாயைப் பார்க்க வந்துகொண்டிருந்தான், அப்போது இளநிலை அதிகாரியாய் இருந்த, இளங்கோவன். பெரிய அதிகாரியானதும் அதுவும் குறைந்து போனது.

தீபாவளிக்கு முதல் நாளாவது வந்து தாயைப் பார்த்துவிட்டுப் போகும் பழக்கத்தை பல ஆண்டுகள் விடாமல் வைத்திருந்தவன், என்ன காரணத்தாலோ இந்த ஆண்டு வராமல் போகவும் புவனேசுவரியிடம் தினம் அழுகைதான்.

""அவன் சேலை எடுத்துக்கிட்டு வருவான். கையில் எதுனாச்சும் காசு தருவான்னா எதிர்பார்க்கிறேன்? அவனைப் பார்க்கணும் போல ஆசையா இருக்கு. வருசத்துக்கு ஒரு தடவை வந்தவன், அதையும் நிறுத்திப்புட்டானே''
மதுரைக்கு ஒரு வேலையாகப் போன அன்புமணி அண்ணன் வீட்டுக்கும் சென்றான். தாயின் வேதனை பற்றியெல்லாம் சொன்னான். வற்புறுத்தி ஊருக்கு அழைத்தான். 

""சரிடா... வர்ற ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் வருகிறேன். மதியம் மூன்று மணிக்கு வந்துவிட்டு நான்கு மணிக்குக் கிளம்பிவிடுவேன். அம்மாவை வீட்டிலேயே இருக்கச் சொல்'' என்று "வரம்' தர, தம்பி தலையாட்டிவிட்டு வந்துவிட்டான்.

ஒரு மணி நேரம்தான் இங்கே இருப்பானோமோ? அதற்குள் நான் கேட்கிற சேதியைக் கேட்டு எல்லாம் பேசி முடிச்சிடணுமோ, பெத்து வளர்த்த தாயைப் பார்க்கிறதுக்கு ஒரு மணி நேரம்தான் ஒதுக்குவானாமோ? என்று அந்த நேரம் புவனேசுவரி வருத்தப்பட்டாலும், பிறகு மூத்த மகனுக்கு எதெல்லாம் பிடிக்கும் என்று யோசித்து யோசித்து வாங்கி வைக்கத் தொடங்கி விட்டாள். வடகாடு மண்ணில் விளைந்த பலாப்பழம், பச்சை வேர்க்கடலை என்று முதல் நாளே எல்லாம் தயார்.

 இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மகன் வரும் நேரம் பார்த்து அம்மா ஏன் ஊருக்குப் போனது? அதுதான் ஏனென்று அன்புமணிக்குப் புரியவில்லை.

அந்த சிறிய ஓட்டு வீட்டின் முன்னே வேலியோரம் இருந்த கிணற்றடியில் மாலா நின்றிருந்தாள். அவள் காலடியில் நீர் நிரம்பிய பிளாஸ்டிக் பச்சைக் குடம் இருந்தது.

""உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? பெரியவர் வருவது தெரியாதா, உனக்கு? அம்மாவை நீ போக விடலாமா?'' அன்புமணி சீறினான்.

""நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் வேண்டுமென்றே வீம்புக்குப் புறபட்டுப் போறவங்களை நான் எப்படித் தடுக்க முடியும்?''

அதே வேகத்தோடு பதில் வரவும் அவன் அடங்கினான். "அம்மாவுக்குக் கிறுக்குதான்  பிடித்திருக்கிறது' என்று முனகிக்கொண்டே வீட்டுக்குள் போனான்.

கையில் இருந்த சாமான்களை வைத்துவிட்டு, வெளியில் வந்து முகம் கை, கால் கழுவினான். வேலியோரம் நின்ற குட்டை தென்னையிலிருந்து இரண்டு இளநீர் பறித்து சீவி தயார் நிலையில் வைத்தான். கடைத்தெருவில் பேருந்து நிற்கும் ஓசை கேட்க மலர்ந்தான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டில் நுழைந்த இளங்கோவனின் விழிகள் அம்மாவைத் தேடின. தம்பி மெல்ல செய்தியைச் சொன்னான்.

""நான் வர்றேன்னு அம்மாக்கிட்ட நீ சொன்னியா, இல்லையா?'' என்றான் இளங்கோவன், எரிச்சலுடன்.

""சொல்லாமல் இருப்பேனா? அம்மா இப்ப வந்து விடும். அழைத்துக்கொண்டு வர ரவியை அனுப்பியிருக்கிறேன். முதலில் இதை சாப்பிடுங்கள்'' என்று இளநீரில் துளை போட்டு நீட்டினான்.

இளங்கோவன் தம்பியுடன் உட்கார்ந்து வகை வகையான சாப்பாட்டை ஒரு பிடிபிடித்து, வெற்றிலை பாக்குடன் தென்னை மர நிழலில் கிடந்த நாற்காலிக்குப் போனான். முன்னால் ஒரு தட்டில் பலாச்சுளைகள், அவித்த வேர்க்கடலை.

அப்போது வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் வந்து இறங்கிய ரவி, ""வாங்க பெரியப்பா''  என்று சிரித்தான்.

""நீ மட்டும் வர்றே? அம்மா எங்கே?''  என்றான்  இளங்கோவன், பதட்டமான குரலில். அன்புமணி பார்வையும் ரவி மீதே இருந்தது.

""ராமாயி வீட்டில் சடங்கு சுத்தறாங்க. முடிச்சிட்டு வர்றேன்.  பெரியப்பாவை வீட்டிலேயே இருக்கச் சொல்லுன்னு சொல்லுது. என்னோட வரலே''

""அட ஏன்டா நீ ஒரு பைத்தியம்! கையோட அழைத்துக்கொண்டு வருவதை விட்டுவிட்டு... வந்து கதை சொல்கிறான்''  என்று கோபத்தில் மகனை அடிக்கக் கையை ஓங்கினான், அன்புமணி.

""பாட்டி வரலேன்னா நான் என்ன செய்யட்டும்?'' என்று ரவி வீட்டினுள் போனான்.

""யார்டா அது ராமாயி?'' தம்பி பக்கம் திரும்பினான், இளங்கோவன்.

""நம்ம வயல் வேலைக்கு வரும்ண்ணே... அது பேத்திக்கு சடங்கு. அந்த புள்ளை கையில் பத்து ரூபா பணத்தை வைத்துக் கொடுத்துவிட்டு வருவதை விட்டுவிட்டு, சடங்கு சுத்துகிற வரைக்கும் இருக்கணுமா? நான் போய் அழைச்சிட்டு வரட்டுமாண்ணே?''
""வேண்டாம்டா. நீ போய் எப்ப அழைச்சிக்கிட்டு வர்றது? நான் கிளம்புகிறேன். அம்மா என்னைப் பார்க்காமல் அழுது துடிக்குதுன்னு நீ வந்து சொன்னியேன்னு நான் வந்தேன். அங்கே எனக்கு தலைக்கு மேலே ஆயிரம் வேலை இருக்கு'' என்று எழுந்த இளங்கோவன், கிளம்ப ஆயத்தம் பண்ண வீட்டுக்குள்
சென்றான்.
அப்போது வெளியில் வந்த ரவியிடம், ""பாட்டி என்னதான்டா சொல்லிச்சு?'' என்று அன்புமணி கேட்டான்.
""பெரியப்பா இப்ப வந்திடுவாங்க, புறப்படுங்க பாட்டின்னு சொன்னேன்.  "எனக்கு ராமாயி முப்பது வருசப் பழக்கம். என் வீட்டுக்கு மாடா உழைச்சவ.
அவளோட பேத்தி சடங்கு எனக்கு முக்கியம். பெற்றவளைப் பார்க்கணும்னு உண்மையிலேயே அவனுக்கு ஆசையிருந்தால் எந்நேரமானாலும் இருக்கச் சொல்லு''ன்னு அழுதுகிட்டே சொல்லிட்டு பொம்பளை கூட்டத்துக்குள்ளே போய் உட்கார்ந்துடிச்சி.
""என்ன...  அழுததா?'' அன்புமணி ஆச்சரியத்துடன் கேட்டான்.
""ஆமா... பாட்டி அங்கே கண்ணைத் தொடைச்ச மேனியாத்தான் உட்கார்ந்திருக்கு. ஏன்னு தெரியலே?''என்ற ரவி விளையாட வெளியே ஓடினான்.
இளங்கோவன் புறப்படத் தயாராய் வாசலுக்கு வந்து நின்றான்.
""வாங்கண்ணே... ஸ்கூட்டியில போயாவது அம்மாவைப் பார்த்துட்டு வந்திடலாம்'' என்று அன்புமணி கெஞ்சினான்.
""ராஜா! இப்ப மணி நாலேகால். ஏழு மணிக்கு நான் ஒரு பதவி ஏற்பு விழாவில் இருக்கணும். அரிமா சங்கத் தலைவரா பதவி ஏற்கப் போகிற அழகப்பன் ஊரில் முக்கியமான புள்ளி ; பெரிய தொழிலதிபர் ; நாளைக்கு அவர் முகத்தில் நான் விழிக்கிறதா, வேண்டாமா? அதனால இன்னொரு நாள் வர்றேன். இல்லே, நீ அம்மாவை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வா'' என்று சொல்லிக்கொண்டே நகரத் தொடங்கினான்.
""நில்லுங்கண்ணே'' உரக்கக் குரல் கொடுத்த அன்புமணி, அண்ணன் அருகில் போனான்.
""இப்ப பதவி ஏற்கப் போகிற அழகப்பன் எத்தனை ஆண்டுகளாண்ணே உங்களுக்குப் பழக்கம்? பெற்ற தாயைவிடவும் மேலானவரா, அவர்? அந்த அழகப்பன் வயிற்றிலே தான் நீங்கள் பிறந்தீங்களா? நீங்கள் காய்ச்சல், பேதின்னு அவதிப்பட்ட போதெல்லாம் மருத்துவச்சிக்கிட்டேயும், டவுன் டாக்டர்க்கிட்டேயும் அவர்தான் உங்களை தூக்கிக்கிட்டுப் போனாரா? இருந்த நிலங்களை விற்றும் பாதி நாள் பட்டினி கிடந்தும் அவர்தான் உங்களைப் படிக்க வைத்தாரா? யாருடைய பதவி ஏற்பு விழாவுக்கோ போகத் துடிக்கிறீங்களே... கவலைப்படறீங்களே...  நீங்கள் இந்தப் பதவியையும் புகழையும் அடையக் காரணமான அந்தத் தாயுள்ளம் உங்களையே நினைத்து அழுது அழுது உருக்குலைந்து போய்க் கிடக்கே... அதைப் பற்றி பதினெட்டு மாதத்தில் எப்பொழுதாவது கவலைப்பட்டிருப்பீங்களா?''
இத்தனை ஆண்டுகளில் அண்ணனிடம் எதற்காகவும் அவன் இந்த அளவு கோபித்துக் கொண்டதில்லை. இளங்கோவன் அதிர்ந்து போய் நிற்க அவன் மேலே தொடர்ந்தான்.
""அண்ணே! அம்மா ராமாயி வீட்டு சடங்குக்கு மட்டும் போகலே. நீங்கள் வரும்போது மறைந்து கொள்ள இடம் தேடியும்தான் போயிருக்கு. புரியலே? ஊங்களுக்கு ஒரு அழகப்பன்னா அம்மாவுக்கு ஒரு ராமாயி. அந்த தெய்வம் உங்களை சோதனை செய்யுது, அண்ணே. பெற்ற தாயாரை விடவும் எனக்கு வேற எதுவும் பெரிசு இல்லேன்னு காத்திருக்கப் போறானா? இல்லே, நேற்று அறிமுகமான அழகப்பனுக்காக ஓடப்போறானா?' ன்னு இது சோதனை அண்ணே'' அன்புமணி முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
அவனது ஒவ்வொரு சொல்லும் உடன் நிவாரணம் தருகிற ஊசி மருந்தாய் வேலை செய்ய, தனது மனக்கதவு திறக்க இளங்கோவன் இரண்டே விநாடிதான் எடுத்துக்கொண்டான்.
""அம்மா வரட்டும். எவ்வளவு நேரமானாலும் இருந்து பார்த்துட்டுப் போறேன்'' அழகப்பனை நாளை வீட்டில் கூடப் போய் பார்த்துக்கொள்ளலாம்''.
வீதியைப் பார்த்தப்படி தென்னை மரத்தடியில் அமர்ந்தான், இளங்கோவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com